என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆக்கிரமிப்பு என கூறி முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் - எதிர்த்தவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி
    X

    ஆக்கிரமிப்பு என கூறி முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் - எதிர்த்தவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி

    • சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை அசாம் போலீஸ் மற்றும் வனத்துறையினர் வெளியேற்றினர்.
    • 2,000 வீடுகள் இடிக்கப்பட்டதை, அரசால் ஆதரிக்கப்படும் படுகொலை என்று கார்கே கண்டித்தார்.

    அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள பைகான் ரிசர்வ் வனப்பகுதியில் 140 ஹெக்டேர் நிலப்பரப்பில் பல ஆண்டுகளாக வசித்து வந்த மக்களை அசாம் பாஜக அரசு வெளியேற்றியுள்ளது. எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

    பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்கள், வனப்பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை அசாம் போலீஸ் மற்றும் வனத்துறையினர் இணைந்து கடந்த சனிக்கிழமை (ஜூலை 12) முதல் மக்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நேற்று போலீஸ் நடவடிக்கைக்கு அங்கிருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தப்பட்டது.

    வனக் காவலர்கள் மற்றும் போலீசார் மீது குச்சிகள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தியதாக மாவட்ட காவல் ஆணையர் கூறுகிறார். இதைத்தொடர்ந்து போலீசார் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதில் ஷகூர் ஹுசைன் மற்றும் குத்புதீன் ஷேக் என்ற இரண்டு முஸ்லிம்கள் உயிரிழந்தனர். மேலும், இந்த மோதலில் போலீசார் உட்பட பலர் காயமடைந்தனர்.

    இடம்பெயர்ந்த மக்கள் படகுகள் மூலம் அப்பகுதியை விட்டு வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், எங்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர் என்று தன்னார்வ அமைப்புகள் தெரிவிக்கின்றன.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, போலீசாரை தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 'சட்டப்படி' நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    மேலும் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும் பணி தொடரும் என்றும்,காடுகளை மீண்டும் உயிர்ப்பிக்க விரைவில் இந்தப் பகுதியில் மரங்கள் நடப்படும் என்றும் கூறினார்.

    முன்னதாக மற்றொரு சம்பவத்தில், புதன்கிழமை (ஜூலை 16) கோல்பாரா நகருக்கு அருகிலுள்ள ஒரு சதுப்பு நிலப் பகுதியில் 690 குடும்பங்களின் வீடுகள் இடிக்கப்பட்டன.

    காங்கிரஸ் கட்சி இந்த வெளியேற்ற நடவடிக்கைகளை கண்டித்தது, இது பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்களை குறிவைத்த தாக்குதல் என்று குற்றம் சாட்டியது.

    மல்லிகார்ஜுன் கார்கே, "துப்ரி மற்றும் கோல்பாராவில் 2,000 வீடுகள் இடிக்கப்பட்டதை, அரசால் ஆதரிக்கப்படும் படுகொலை" என்று கண்டித்தார்.

    சாய்கானில் நடந்த ஒரு பேரணியில், அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வெளியேற்றப்பட்டவர்களின் வீடுகளை மீண்டும் கட்டி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிப்பதாக கார்கே உறுதியளித்தார்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தலைமையிலான அரசு அதானி மற்றும் அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்காக நிலங்களை காலி செய்கிறது, பொது நலனுக்காக அல்ல என்று இந்த வெளியேற்றங்களை குற்றம் சாட்டினார்.

    Next Story
    ×