என் மலர்
இந்தியா

ஏழை-எளிய மக்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிப்பதே அரசின் நோக்கம்: பிரதமர் மோடி பேச்சு
- விரிவாக்கம் செய்யப்பட உள்ள மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார்.
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. அங்கு இன்று குடிபத்வா விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று நாக்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதற்காக பிரதமர் மோடி இன்று காலை விமானம் மூலம் நாக்பூர் சென்றார். விமான நிலையத்தில் அவரை மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் வரவேற்றனர்.
அதன்பிறகு மோடி விமான நிலையத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாக தலைமை அலுவலகமான ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஹெட் கேவர் ஸ்மிருதி மந்திருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ஆா்.எஸ்.எஸ். நிறுவன தலைவா்களான டாக்டா் ஹெட்கேவாா், குருஜி கோல்வல்கா் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் கலந்து கொண்டார். பின்னர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிரதமர் ஆன பிறகு முதல் முறையாக மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு சென்று இருந்தார். அவர் இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார்.
அதன்பிறகு பிரதமர் மோடி அங்கிருந்து அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய இடமான தீக்ஷா பூமிக்கு சென்றார். அங்கு அவர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார். 2017-ம் ஆண்டுக்கு பிறகு அவர் அங்கு சென்றார்.
குருஜி கோல்வல்கா் நினைவாக ஆா்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு பன்னோக்கு கண் மருத்துவமனை நிறுவப்பட்டது. அது தற்போது விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
விரிவாக்கம் செய்யப்பட உள்ள மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 14 வெளிநோயாளி பிரிவுகள், 14 அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு அடிக்கல் நாட்டிய பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:-
குடிபத்வா பண்டிகையையொட்டி மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை உறுதி செய்வதே அரசின் நோக்கமாகும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் கிராமங்களில் லட்சக்கணக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் நாட்டின் சிறந்த டாக்டர்களின் ஆலோசனை, முதன்மை சிகிச்சை மற்றும் கூடுதல் உதவிகளை பெற முடியும். நோய் கண்டறிதலுக்காக அவர்கள் இனி நூற்றுக்கணக்காக கிலோ மீட்டர் பயணம் செய்யவேண்டிய தேவையில்லை.
நாங்கள் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 2 மடங்கு உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும் 3 மடங்கு உயர்த்தியுள்ளோம்.
கொரோனா தொற்று காலத்தின் போது உலகத்துக்காக இந்திய உதவியாக இருந்தது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்திய மீட்பு குழு அனுப்பப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு துறைகளிலும் பகுதிகளிலும் ஆர்.எஸ். தொண்டர்கள் தன்னலமின்றி பணியாற்றுகிறார்கள். மகா கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் உதவினார்கள்.
அடிமை மனநிலையையும் அடிமைத்தனத்தின் சின்னங்களையும் நிராகரிப்பதன் மூலம் இந்தியா இன்று முன்னேறி வருகிறது. அடிமை மனநிலையுடன் உருவாக்கப்பட்ட தண்டனைச் சட்டத்தை நாங்கள் நிராகரித்துள்ளோம்.
உலகின் அனைத்து மூலைகளையும் சென்றடையும் உலகம் ஒரு குடும்பம் என்பதே எங்கள் மந்திரமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் பிரதமர் மோடி 'சோலாா் டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் வெடிபொருள் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். அங்கு புதிதாக கட்டப்பட்ட 1,250 மீட்டா் நீளம் மற்றும் 25 மீட்டா் அகலம் கொண்ட விமான ஓடுபாதை மற்றும் போா்முனை சோதனை வசதிகளையும் அவா் திறந்து வைத்தார்.






