என் மலர்
இந்தியா

டிரம்ப் பொய் சொல்கிறார் என பிரதமர் மோடி ஒருமுறை கூட சொல்லவில்லை - ராகுல் காந்தி
- ஒட்டுமொத்த தேசத்திற்கும் சீனா பாகிஸ்தானுக்கு அனைத்து வகையிலும் உதவியது தெரியும்.
- பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் தங்கள் உரைகளில் எங்கும் சீனாவின் பெயரை குறிப்பிடவில்லை.
பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கை குறித்து இன்று மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
ராணுவ நடவடிக்கை பற்றி பிரதமர் மோடி விளக்கம் கொடுத்தார். பின்னர் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
கூட்டம் முடித்து பாராளுமன்ற அவை வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது பிரதமர் தனது உரையில் சீனா பற்றி ஒருமுறை கூட குறிப்பிடவில்லை.
ஒட்டுமொத்த தேசத்திற்கும் சீனா பாகிஸ்தானுக்கு அனைத்து வகையிலும் உதவியது தெரியும். ஆனால் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் தங்கள் உரைகளில் எங்கும் சீனாவின் பெயரை குறிப்பிடவில்லை" என்று குற்றம் சாட்டினார்.
மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிய கூற்றை பிரதமர் மோடி நேரடியாக மறுக்கவில்லை என்பதையும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.
"டிரம்ப் பொய் சொல்கிறார் என்று அவர் (மோடி) ஒருபோதும் தெளிவாகக் கூறவில்லை" என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் சீனாவின் பங்கு குறித்து அரசு கவனிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.






