என் மலர்
இந்தியா

ராகுல் காந்தி இந்திய ஜனநாயகத்தில் ஒரு கரும்புள்ளி: பாஜக தலைவர் பதிலடி
- ராகுல் காந்தி முதிர்ச்சியற்றவர், பகுதி நேர தலைவர் என்று அனைவருக்கும் தெரியும்.
- மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்பதால் அவரது தோளில் மக்கள் பெரும் சுமையை ஏற்றி வைத்து விட்டனர்.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரிடையே பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ்.-ஐ விமர்சித்தார். பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா மீதான மக்களின் பயம் போய்விட்டது என்றும், உலக அளவில் உற்பத்தியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார். மேலும் வேலைவாய்ப்பின்மை காரணமாக இளைஞர்கள் பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் மத்திய அரசை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, ராகுல்காந்தியின் பேச்சு பற்றி கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
ராகுல்காந்தி முதிர்ச்சியற்றவர், பகுதி நேர தலைவர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்பதால் அவரது தோளில் மக்கள் பெரும் சுமையை ஏற்றி வைத்து விட்டனர்.
ஆனால், அவர் இந்திய ஜனநாயகத்தில் ஒரு கரும்புள்ளி என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன். வெளிநாட்டில் என்ன பேசுவது என்று கூட அவருக்கு தெரியவில்லை.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், சீன கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனால் சீனாவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட அவரால் பேச முடியாது. அவர் இந்தியாவை பலவீனப்படுத்துகிறார். சீனாவுக்கு ஆதரவாக நிற்கிறார்.
சீன கம்யூனிஸ்டு கட்சியுடனான ஒப்பந்தப்படி, இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ராகுல்காந்தி தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறார்.
நான் சொல்வது தவறு என்றால் ராகுல் காந்தியோ அல்லது மல்லிகார்ஜுன கார்கேவோ அந்த ஒப்பந்தத்தை பகிரங்கரமாக வெளியிடத்தயாரா? என்று சவால் விடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






