என் மலர்
இந்தியா

பஹல்காம் தாக்குதல்: முக்கிய தீவிரவாதியை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்
- காஷ்மீரில் நடந்த பல்வேறு தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
- பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் மேலும் சிலர் காஷ்மீரில் பதுங்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திடீரென ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். இதில் இந்தியாவை சேர்ந்த 25 பேர், நேபாளத்தை சேர்ந்த ஒருவர் என 26 பேர் கொல்லப்பட்டனர்.
4 முதல் 6 தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் பின்னணியில் இருந்து செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இந்தியாவின் முப்படைகளும் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் பாகிஸ்தான் மீது கடந்த 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 4 நாட்கள் அதிரடி போர் நடத்தின. இந்த 4 நாட்கள் வேட்டையில் பாகிஸ்தானில் தீவிரவாதிகளும், ராணுவத்தினரும் சுமார் 140 பேர் கொல்லப்பட்டனர்.
அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் 9 விமானப்படை தளங்கள் ஏவுகணைகளால் தாக்கி துவம்சம் செய்து அழிக்கப்பட்டன. இந்த அதிரடிக்கு பிறகுதான் பாகிஸ்தான் நடுநடுங்கி இந்தியாவிடம் மண்டியிட்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலை இந்தியா தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
என்றாலும் பஹல்காம் தாக்குதலுக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் இந்தியா தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பஹல்காம் சுற்றுலாதலத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தற்போதும் காஷ்மீரில் பதுங்கி இருப்பதால் அவர்களை வேட்டையாட ஆபரேஷன் கெல்லர் என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆபரேஷன் நடவடிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள சோபியான் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பகல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இரு மாவட்டங்களிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
புதிய ஆபரேஷன் திட்டத்தின் முதல்நாளான கடந்த செவ்வாய்க்கிழமை சோபியான் மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்து பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அதில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்களில் 2 பேர் சாகித் மற்றும் சபி என்று தெரியவந்தது. இவர்கள் இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தவர்கள். காஷ்மீரில் நடந்த பல்வேறு தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்துக்குள் புல்வாமா மாவட்டத்தில் டிரால் பகுதியில் இருக்கும் நதீர் என்ற இடத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவ கமாண்டோ வீரர்களும், உள்ளூர் போலீசாரும் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
இன்று அதிகாலை தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து ராணுவத்தினரை நோக்கி தீவிரவாதிகள் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 3 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் மூவரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களது உடல்களை கைப்பற்றி பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் ஆசீப் அகமது ஷேக், அமீர் நசீர்வானி மற்றும் யாவர் அகமது பட் என்று தெரியவந்தது. இவர்களில் தீவிரவாதி ஆசீப் அகமது ஷேக் பஹல்காம் சுற்றுலா தலத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் முக்கியமான ஒருவன் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு முதல் பழிக்கு பழியை ராணுவத்தினர் செய்து முடித்துள்ளனர். பஹல்காம் தீவிரவாதிகளில் ஒருவன் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பது ராணுவத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.
பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் மேலும் சிலர் காஷ்மீரில் பதுங்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களை வேட்டையாடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






