என் மலர்tooltip icon

    இந்தியா

    காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் பற்றி விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூடுகிறது? மத்திய அரசு தீவிர ஆலோசனை
    X

    காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் பற்றி விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூடுகிறது? மத்திய அரசு தீவிர ஆலோசனை

    • பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டுமானால் பாராளுமன்ற விவகார அமைச்சகத்தின் கேபினட் கமிட்டி கூடி ஆலோசிக்க வேண்டும்.
    • 1962-ம் ஆண்டு காஷ்மீர் எல்லையில் சீனா அத்துமீறி ஊடுருவிய போது அப்போதைய பிரதமர் நேரு பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்தினார்.

    புதுடெல்லி:

    காஷ்மீரில் 26 சுற்றுலா பயணிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற விவகாரத்தில் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரையும் வெளியேற்ற நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

    அடுத்த கட்டமாக பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்துநதி நீரை தடுக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில் மத்திய அரசு மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு ஒத்துழைக்க தயார் என்றும் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. குறிப்பாக காங்கிரஸ் எம்.பி. கபில்சிபல் கூறுகையில், "பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்டி பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை ஒருமனதாக கொண்டுவர வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

    இதையடுத்து மத்திய அரசு இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இருப்பதை வெளிப்படுத்த திட்டமிடுவதாக தெரிகிறது.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டுமானால் பாராளுமன்ற விவகார அமைச்சகத்தின் கேபினட் கமிட்டி கூடி ஆலோசிக்க வேண்டும். மத்திய மந்திரிகள் அடங்கிய அந்த கமிட்டிதான் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை எந்த தேதியில் எப்படி நடத்துவது என்பதை தீர்மானிக்கும். அந்த கமிட்டி அளிக்கும் அறிக்கைக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வேண்டும். அதன் பிறகுதான் பாராளுமன்ற சிறப்பு குழு கூட்டத்தை நடத்த முடியும்.

    பாராளுமன்ற விவகார அமைச்சகம் இதில் விரைந்து செயல்பட்டால் சிறப்பு கூட்டத்தை உடனடியாக நடத்த முடியும் என்று சொல்கிறார்கள்.

    1962-ம் ஆண்டு காஷ்மீர் எல்லையில் சீனா அத்துமீறி ஊடுருவிய போது அப்போதைய பிரதமர் நேரு பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்தினார். சீனாவுடன் போர் நடத்த வேண்டியதன் அவசியத்தை அவர் விளக்கி பேசினார். அதன் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடந்தது.

    தற்போது அதே போன்று பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்தலாமா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள். பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஜனாதிபதி திரவுபதி முர்மு தற்போது ரோம் சென்றுள்ளார்.

    போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இறுதி சடங்குகளில் பங்கேற்று விட்டு தாயகம் திரும்ப உள்ளார். அதன் பிறகு இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×