என் மலர்
இந்தியா

பெண் போலீசை கொன்று உடலை புதைத்து விட்டு கோவிலில் சாமி தரிசனம் செய்த கணவன்
- மறுநாள் மனைவியை கொன்ற எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் எப்போதும் போல வேலைக்கு சென்றார்.
- மனைவி பிணத்தை காரில் வைத்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் காரில் சுற்றினார்.
ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் தீபக்குமார் ரவுத். இவரது மனைவி சுபமித்ரா சாஷூ. இவர் போக்குவரத்து போலீஸ்காரராக இருந்தார்.
கணவன்-மனைவிக்கு இடையே ரூ.10 லட்சம் கடன் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இதனால் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்கள் காரில் சென்றனர். அப்போது மீண்டும் தகராறு வந்ததால் ஆத்திரம் அடைந்த தீபக் குமார் ரவுத் மனைவியை காருக்குள் வைத்து கழுத்தை நெரித்தார். இதில் சிறிது நேரத்தில் சுபமித்ரா சாஷூ இறந்தார்.
பின்னர் அவர் மனைவி பிணத்தை காரில் வைத்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் காரில் சுற்றினார். இதையடுத்து புவனேசுவரில் இருந்து சுமார் 750 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கியோஞ்சி என்ற இடத்தில் யாருக்கும் தெரியாமல் சுபமித்ரா உடலை குழி தோண்டி புதைத்து விட்டு அங்குள்ள ஒரு கோவிலுக்கு சென்றார்.
அங்கு சாமி தரிசனம் செய்த தீபக்குமார் செல்பியும் எடுத்துக்கொண்டார்.
மறுநாள் மனைவியை கொன்ற எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் எப்போதும் போல வேலைக்கு சென்றார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. மேலும் மனைவியை காணாததால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் சுபத்ராவின் செல்போனையும் ஆய்வு செய்தனர். அதில் அவர் வெளியிட்ட பதிவில் கணவருடன் சண்டை இருந்து வந்ததும், மன அழுத்தம் காரணமாக வாரணாசி, மதுரா உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.
இது பற்றி விசாரித்த போது மனைவியை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






