என் மலர்
இந்தியா

மகாராஷ்டிர காவல்துறையினரால் தொடர் பாலியல் வன்கொடுமை.. கையில் எழுதி வைத்து பெண் மருத்துவர் தற்கொலை
- தற்கொலைக்கு செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே DSP-க்கு கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
- மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்
மகாராஷ்டிராவில் காவல்துறையினரால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தனது கையில் எழுதி வைத்து பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த அந்த பெண் மருத்துவர் நேற்று இரவு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உள்ளங்கையில், "எனது மரணத்திற்கு காவல்துறை ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக என்னை பாலியல் வன்கொடுமை, மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்" என்று என்று எழுதப்பட்டிருந்தது.
தற்கொலைக்கு செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஜூன் 19 அன்று, இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஃபல்டான் DSPக்கும் அந்த பெண் மருத்துவர் கடிதம் எழுதியுள்ளதும் தெரியவந்துள்ளது.
DSP-க்கு எழுதிய கடிதத்தில், ஃபல்டான் ஊரக காவல் துறையைச் சேர்ந்த கோபால் பத்னே, துணைக் கோட்ட காவல்துறை ஆய்வாளர் பாட்டீல் மற்றும் உதவி காவல்துறை ஆய்வாளர் லாட்புத்ரே ஆகிய மூன்று அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கோரியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று இரவு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மாகாராஷ்டிர காலவத்துறையில் முக்கிய பதவிகளில் இருக்கும் அதிகாரிகளால் பெண் மருத்துவர் தற்கொலை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் ஆளும் பாஜகவின் மகாயுதி கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவர் விஜய் நாம்ராவ் வடேட்டிவார் தனது எக்ஸ் பதிவில், "காவல்துறையின் கடமை பாதுகாப்பது, ஆனால் அவர்களே ஒரு பெண் மருத்துவரைச் சுரண்டினால், எப்படி நீதி கிடைக்கும்? பாதுகாக்க வேண்டியவர்களே வேட்டையாடுபவர்களாக மாறினால் எப்படி?..
இந்தப் பெண் ஏற்கனவே புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? ஆளும் மகாயுதி அரசாங்கம் மீண்டும் மீண்டும் காவல்துறையைப் பாதுகாக்கிறது, இது காவல்துறை அட்டூழியங்கள் அதிகரிக்க வழிவகுக்கிறது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவின்பேரில் எஸ்.ஐ. கோபால் பத்னே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






