search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாட்டில் ராகுல் காந்தியின் பிரசாரத்தில் கொடிகள் பயன்படுத்த தடை- கேரள காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு
    X

    வயநாட்டில் ராகுல் காந்தியின் பிரசாரத்தில் கொடிகள் பயன்படுத்த தடை- கேரள காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு

    • பாரதிய ஜனதா மீதான காங்கிரசின் பயத்தால் கொடிகள் இல்லை என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு குற்றம் சாட்டியது.
    • சி.பி.எம். மற்றும் பா.ஜனதா கட்சிகள் எதிர்பாராத கூட்டணியை உருவாக்கி உள்ளன.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 3-ந் தேதி மனு தாக்கல் செய்ய வந்த அவர், ரோடு-ஷோவிலும் பங்கேற்றார். அப்போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி கொடிகள் எங்கும் காணப்படவில்லை.

    இதனை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விமர்சித்திருந்தார். பாரதிய ஜனதா மீதான காங்கிரசின் பயத்தால் கொடிகள் இல்லை என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு குற்றம் சாட்டியது. இந்த நிலையில் ராகுல்காந்தி வருகிற 15 மற்றும் 16-ந் தேதி வய நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாகவும் இந்த நிகழ்ச்சியிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் பயன்படுத்தபட மாட்டாது என்று மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளருமான ஹாசன் கூறியதாவது:-

    வயநாட்டில் வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்த பிரசாரத்தின் போது, காங்கிரஸ் அல்லது கூட்டணி கட்சிகளின் கொடிகளை காட்டுவதை தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் சின்னங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். கட்சியின் முடிவுக்கான காரணங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் மற்ற தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்கள் விரும்பினால் கொடியை பயன்படுத்தலாம்.

    அடுத்த வாரம் முழுவதும் கண்ணூர், திருச்சூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் ராகுல்காந்தி பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங் களில் பங்கேற்க உள்ளார். சி.பி.எம். மற்றும் பா.ஜனதா கட்சிகள் எதிர்பாராத கூட்டணியை உருவாக்கி உள்ளன. தேர்தல் பிரசாரத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து யாரிடம் இருந்தும் வழி காட்டுதல் தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×