என் மலர்
இந்தியா

இருளில் மூழ்கிய ஜம்மு..! பாதுகாப்புடன் இருக்க முதல்வர் உமர் அப்துல்லா வேண்டுகோள்
- ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள எல்லையோர குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்.
- தாக்குதலின்போது துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை வேட்டையாடும் அதிரடி நடவடிக்கையை கடந்த புதன்கிழமை இந்தியா தொடங்கியது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதலை தொடங்கியுள்ளது.
அதன்படி, ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள எல்லையோர குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த பகுதிகளில் தாக்குதலின்போது துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஜம்மு நகரம் முழுவதும் இப்போது இருளில் மூழ்கியுள்ளது. நகரம் முழுவதும் சைரன்கள் சத்தம் கேட்கின்றன. நான் இருக்கும் இடத்திலிருந்து அவ்வப்போது குண்டுவெடிப்பு சத்தங்கள், கனரக பீரங்கி சத்தங்கள் கேட்கின்றன.
ஜம்முவிலும் அதைச் சுற்றியுள்ள மக்களும் தயவுசெய்து வெளியில் வராதீர்கள். அடுத்த சில மணிநேரங்களுக்கு வீட்டிலேயே இருங்கள் அல்லது நீங்கள் வசதியாக தங்கக்கூடிய அருகிலுள்ள இடத்தில் இருங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
வதந்திகளைப் புறக்கணிக்கவும். ஆதாரமற்ற அல்லது சரிபார்க்கப்படாத கதைகளைப் பரப்ப வேண்டாம். இதை நாம் ஒன்றாகக் கடந்து செல்வோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






