என் மலர்
இந்தியா

'பிரிவு 370' ரத்து செய்யப்பட்ட பின் ஜம்மு காஷ்மீர் வளர்ந்து வருகிறது - காங்கிரஸ் மூத்த தலைவர் பாராட்டு
- பிரிவு 370 இருந்தபோது, காஷ்மீர் ஒரு சிறப்புப் பகுதி என்ற உணர்வு இருந்தது.
- 65 சதவீத வாக்குப்பதிவே இதற்கு சான்று
2019 இல், சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியடைந்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூருக்கு விளக்கம் கொடுக்கும் எம்.பி.க்கள் குழு ஒன்று இந்தோனேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தக் குழுவுடன் சல்மான் குர்ஷித் சென்றார்.
அங்கு வைத்து பேசிய அவர், "பிரிவு 370 இருந்தபோது, காஷ்மீர் ஒரு சிறப்புப் பகுதி என்ற உணர்வு இருந்தது. அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உணரப்படவில்லை. அங்குள்ள பலர் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தனர்.
மத்திய அரசு 2019 இல் பிரிவு 370 ஐ ரத்து செய்த பிறகு இந்த கருத்து மறைந்துவிட்டது. இந்த முடிவு ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு அங்கு நடைபெற்ற சமீபத்திய தேர்தல்களில் 65 சதவீத வாக்குப்பதிவே இதற்கு சான்று," என்று குர்ஷித் கூறினார்.
முந்தைய காலங்களில் சல்மான் குர்ஷித் பிரிவு 370 குறித்து வேறுபட்ட கருத்தைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஏற்கனவே பாஜகவுக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், இப்போது மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தும் பாஜகவை மறைமுகமாகப் பாராட்டியுள்ளது காங்கிரசுக்கு கூடுதல் சங்கடமாக மாறியுள்ளது.






