என் மலர்
இந்தியா

இன்ஸ்டாகிராம் மோகத்தால் அழிந்த 2 குடும்பங்கள்.. அடுத்தடுத்து நடந்த கொலை மற்றும் தற்கொலை
- இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார்.
- மனைவி ஆன்லைனில் பதிவேற்றிய வீடியோக்கள் குறித்து நண்பர்கள் அடிக்கடி கேலி செய்ததால், அவர் மன உளைச்சலை எதிர்கொண்டார்.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் பிரம்மவரா தாலுகா ஹிலியானா கிராமத்தில் உள்ள ஹோசமாதா பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் பூஜாரி (வயது 42). இவரது மனைவி ரேகா (27).
கணேஷ் பூஜாரி சங்கரநாராயணா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பெட்ரோல் பங்கில் உதவியாளராக பணிபுரிந்தார்.
இந்த நிலையில் அவரது மனைவி ரேகா தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் ரீல்களை தொடர்ந்து ஆர்வமாக மணிக்கணக்கில் பார்த்து வந்தார். இதனால் அவரை கணவர் சத்தம் போட்டார். ஆனால் ரேகா கேட்கவில்லை. தொடர்ந்து ரீல்களை பார்ந்து வந்தார்.
இது குறித்து தம்பதியினர் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கணேஷ் பூஜாரி பணி முடித்து வீடு திரும்பினார். அப்போது ரேகா இன்ஸ்டாகிராம் ரீல்களை பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு கோபமடைந்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் கணேஷ் பூஜாரி, ஒரு கத்தியை எடுத்து மனைவி ரேகாவின் கழுத்தில் குத்தி கொலை செய்தார். சம்பவம் நடந்த உடனேயே பூஜாரியை போலீசார் கைது செய்தனர்.
டிஜிட்டல் மோகம் ஒரு குடும்பத்தை இருண்ட பக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் ரீல்களை பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில், பெண் ஒருவர் தனது கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோல் சாமராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பி.ஜி. பால்யா பகுதியை சேர்ந்தவர் குமார் (33).
இவரது மனைவி இன்ஸ்டாகிராமில் தனது வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இதனால் குமாரின் குடும்பத்தினர் கண்டித்தனர். ஆனால் குமாரின் மனைவி கண்டு கொள்ளவில்லை. மேலும் கணவர் தனது ஆட்சேபனைகளை வெளிப்படுத்திய போதிலும், அவரது மனைவி தொடர்ந்து ரீல்களை உருவாக்கி பதிவிட்டதாக கூறப்படுகிறது. அவரது மனைவி ஆன்லைனில் பதிவேற்றிய வீடியோக்கள் குறித்து நண்பர்கள் அடிக்கடி கேலி செய்ததால், அவர் மன உளைச்சலை எதிர்கொண்டார். இதனால் தம்பதியினரிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
வாக்குவாதம் உச்சத்தை எட்டியதை தொடர்ந்து குமார் தற்கொலை செய்து கொண்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தனது மனைவியின் இன்ஸ்டாகிராம் ரீல்களில் அதிகப்படியான ஈடுபாட்டை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.






