search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தவறான ஆதாரங்கள் தாக்கல்: சி.பி.ஐ., அமலாக்கத்துறை மீது வழக்கு தொடரும் கெஜ்ரிவால்
    X

    தவறான ஆதாரங்கள் தாக்கல்: சி.பி.ஐ., அமலாக்கத்துறை மீது வழக்கு தொடரும் கெஜ்ரிவால்

    • மதுபான கொள்கையில் ரூ.100 கோடி அளவுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு லஞ்சம் கைமாறி இருப்பதாக சொல்லப்படுகிறது.
    • ஊழல் வழக்கில் மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    புதுடெல்லி :

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் மதுபான கொள்கை ஊழல் நடந்திருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மதுபான கொள்கையில் வியாபாரிகளுக்கு சாதகமான அம்சங்களையும், சலுகைகளையும் சேர்த்து, பிரதிபலனாக ரூ.100 கோடி அளவுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு லஞ்சம் கைமாறி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது கெஜ்ரிவாலை கைது செய்வதற்கான சதி என்று ஆம் ஆத்மி கட்சி கூறி உள்ளது. இருப்பினும் விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராவார் எனவும் தெரிவித்திருக்கிறது.

    இந்த நிலையில் கெஜ்ரிவால் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆம் ஆத்மி கட்சி போன்று கடந்த 75 ஆண்டுகளில் எந்த கட்சியும் குறி வைக்கப்பட்டதில்லை. ஏனென்றால் எங்கள் கட்சிதான், மக்களின் ஏழ்மையை ஒழித்து அவர்களுக்கு கல்வி புகட்டுவோம் என்று நம்பிக்கை அளித்துள்ளது. இந்த நம்பிக்கையை தகர்க்க வேண்டும் என்று நினைத்துத்தான் எங்களை குறி வைக்கிறார்கள்.

    சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தவறான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர். மணிஷ் சிசோடியா 14 செல்போன்களை அழித்து விட்டதாக அவர்கள் தவறாக குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால் உண்மை அதுவல்ல. அவற்றில் 4 செல்போன்கள் அமலாக்கத்துறையிடமும், ஒன்று சி.பி.ஐ.யிடமும் உள்ளன. பிற செல்போன்கள் எல்லாம் செயல்பாட்டில் உள்ளன. அவை தன்னார்வலர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

    ரூ.100 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்களே, அப்படியென்றால் அந்த பணம் எங்கே போனது? 400-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடைபெற்றன. பணம் எங்கே? பணம் கோவா தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாக சொல்கிறார்கள். கோவாவில் ஒவ்வொரு வியாபாரியிடமும் விசாரணை நடத்தினார்கள். ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    டெல்லி சட்டசபையில் கடந்த மாதம் நான் ஊழல் பற்றி பேசியபோது, அடுத்த குறி நான்தான் என்று கூறினார்கள். இப்போது சம்மன் வந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கெஜ்ரிவால் டுவிட்டரில் ஒரு பதிவும் வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர், "பொய் சாட்சியங்களையும், தவறான ஆதாரங்களையும் கோர்ட்டுகளில் தாக்கல் செய்வது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கோர்ட்டில் நாங்கள் வழக்கு தொடருவோம்" என குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக பா.ஜ.க.வும் பதிலடி கொடுத்துள்ளது. அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுபான கொள்கை ஊழலின் பிதாமகன் கெஜ்ரிவால்தான். கெஜ்ரிவால் அவர்களே, நீங்கள்தானே மதுபான கொள்கை ஊழல் சதிக்கான கூட்டத்திற்கு தலைமை தாங்கினீர்கள்? பிறகு ஏன் உங்கள் மீது குற்றம் சுமத்தக்கூடாது? மதுபான வியாபாரிகளுக்கும், உங்களுக்கும் என்ன உறவு என்பதை நீங்கள் பொதுவெளியில் சொல்லித்தான் ஆக வேண்டும். உங்கள் மதுபான கொள்கை சிறப்பானது என்றால் பிறகு ஏன் அது திரும்பப்பெறப்பட்டது?சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது கெஜ்ரிவாலுக்கு உதறல் எடுக்கத்தொடங்கி இருக்கிறது. உங்களுக்கு பயம் இல்லை என்றால் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராகுங்கள். எல்லாம் தெளிவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×