search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
    X

    பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

    • பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு தலைமையில் கருப்பு சட்டை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதி வழங்க வேண்டும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் கடந்த 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு வளர்ச்சிக்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும் இதை கண்டித்து பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.

    தி.மு.க. பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புயல் நிவாரண நிதி மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது, இதை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் 8-ந்தேதி பாராளுமன்றத்தில் கருப்பு ச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தார்.

    அதன்படி இன்று பாராளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு தலைமையில் கருப்பு சட்டை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். பெண் எம்.பி.க்கள் கருப்பு சேலை அணிந்து பங்கேற்றனர்.

    கையில் பதாகைகள் ஏந்தி அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதி வழங்க வேண்டும், நிதி ஒதுக்கீட்டில் தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிக்கிறது எனக்கூறி மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர். மேலும் ரத்து செய்... ரத்து செய்... ஜி.எஸ்.டியை ரத்து செய்... என்னாச்சு, என்னாச்சு மதுரை எய்ம்ஸ் என்னாச்சு, தூண்டாதே, தூண்டாதே மதவெறியை தூண்டாதே, குறையவில்லை.. குறையவில்லை... விலைவாசி குறையவில்லை., என்னாச்சு... என்னாச்சு... 20 கோடி வேலைவாய்ப்பு என்னாச்சு... வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே! தமிழக அரசை வஞ்சிக்காதே..., வீழ்த்துவோம்! வீழ்த்துவோம்! அடக்குமுறையை வீழ்த்துவோம்... என மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    Next Story
    ×