என் மலர்
இந்தியா

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்? ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை- கஸ்டடி மரணம் என குடும்பத்தினர் குற்றசாட்டு
- இம்தியாஸ் அகமது மக்ரேவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- இம்தியாஸ் அகமதுவை பாதுகாப்பு படையினர் கொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கடந்த 23-ந்தேதி பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது 2 பயங்கரவாதிகள் தப்பிச் சென்றனர். அவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குல்காமை சேர்ந்த இம்தியாஸ் அகமது மக்ரே (வயது 23). என்பவர் பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் அடைக்கலம் வழங்கி வந்தாக கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து இம்தியாஸ் அகமது மக்ரேவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குல்காமின் டாங்மார்க் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கு தான் உதவியதை ஒப்புக்கொண்டார்.
பின்னர் அந்த இடத்தை காண்பிப்பதாக அவர் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் கூறினார். இதையடுத்து நேற்று இம்தியாஸ் அகமது மக்ரேவை போலீசார் மற்றும் ராணுவ படையினருடன், பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை காட்டுவதற்காக அழைத்து சென்றனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற இம்தியாஸ் அகமது மக்ரே, வேஷா நதியில் குதித்துள்ளார். ஆனால் அவர் நீந்த முயற்சித்தும் முடியாமல் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இம்தியாஸ் அகமது மக்ரேவை பாதுகாப்பு படையினர் கொலை செய்து விட்டதாக மக்ரேவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால் இதனை மறுத்த பாதுகாப்பு படையினர் இம்தியாஸ் அகமது மக்ரே ஆற்றில் குதித்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.






