என் மலர்
இந்தியா

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: காங்கிரஸ் எம்.பி.க்கள் 10-ந்தேதி ஆலோசனை
- தமிழகத்தில் பூதாகரமாக வெடித்து உள்ள 2 விவகாரங்கள் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் இன்னும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
- காங்கிரஸ் ஆளும் கர்நாடகம் மற்றும் தெலுங்கானாவில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
புதுடெல்லி:
தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு நடைபெற்றால் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் முதலாக மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பினார்.
இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானமும் கொண்டு வந்தார். இந்த பிரச்சனை இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அனைத்து கட்சி கூட்டத்தை தொடர்ந்து பாராளுமன்ற தொகுதி வரையறை விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் வருகிற 22-ந்தேதி சென்னையில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 7 மாநில தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மற்ற மாநில முதல்-மந்திரிகள் மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்) பகவந்த்சிங் மான் (பஞ்சாப்) பினராயி விஜயன் ( கேரளா) சித்தராமையா ( கர்நாடகம்) ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா) சந்திரபாபு நாயுடு (ஆந்திரா) மற்றும் அம்மாநிலத்தை சேர்ந்த அனைத்து கட்சி மூத்த தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.
இதே போல மும்மொழிக் கல்வி விவகாரமும் சூட்டை கிளப்பி இருக்கிறது. மும்மொழி என்ற பெயரில் இந்தி கட்டாயமாக திணிக்க முயற்சி நடப்பதாக தி.மு.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதனை எதிர்த்து போராட்டங்களும் நடந்தது.
தமிழகத்தில் பூதாகரமாக வெடித்து உள்ள இந்த 2 விவகாரங்கள் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் இன்னும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாளை மறுநாள் (10-ந்தேதி) மாலை காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், மேல் சபை எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மும்மொழி கொள்கை திட்டம் தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. ஆனால் மும்மொழி கொள்கை தொடர்பாக காங்கிரஸ் என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது என தெரியவில்லை.
காங்கிரஸ் ஆளும் கர்நாடகம் மற்றும் தெலுங்கானாவில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
தி.மு.க. இடம் பெற்றுள்ள இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் முக்கிய கட்சியாக உள்ளது.
தி.மு.க. வை பொறுத்தவரை காங்கிரஸ் தவிர வடமாநிலங்களை சேர்ந்த இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. ஆனால் மும்மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக அந்த கட்சிகள் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை.






