search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    100 நாள் வேலை திட்டத்துக்கு ஆதார் கட்டாயமா?: காங்கிரஸ் கண்டனம்
    X

    100 நாள் வேலை திட்டத்துக்கு ஆதார் கட்டாயமா?: காங்கிரஸ் கண்டனம்

    • 100 நாள் வேலை திட்டத்தில் 25.69 கோடி தொழிலாளர்கள் உள்ளனர்.
    • 100 நாள் வேலை திட்டம் மீதான பிரதமரின் நன்கு அறியப்பட்ட அலட்சியத்துக்கு தொழில்நுட்பத்தை ஆயுதமாக பயன்படுத்துவது நிரூபணமாகிறது.

    புதுடெல்லி:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (100 நாள் வேலை) திட்டத்துடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த திட்ட பயனாளிகள் ஆதாரை இணைப்பதற்கு வழங்கப்பட்ட 5-வது காலக்கெடு நீட்டிப்பு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்து இருக்கிறது.

    அதன்படி இனிமேல் 100 நாள் திட்ட பயனாளிகளுக்கு ஊதியம் வழங்குவதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட அமைப்பு பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    100 நாள் வேலை திட்டத்தில் 25.69 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 14.33 கோடி பேர் செயல்முறை தொழிலாளர்களாக கருதப்படுகின்றனர்.

    கடந்த டிசம்பர் 27-ந் தேதி நிலவரப்படி பதிவு செய்யப்பட்ட மொத்த தொழிலாளர்களில் 34.8 சதவீத (8.9 கோடி) தொழிலாளர்கள் மற்றும் 12.7 சதவீதம் (1.8 கோடி) செயல்முறை தொழிலாளர்கள் ஆதார் அடிப்படையிலான சம்பள திட்டத்துக்கு தகுதியற்றவர்களாக கருதப்படுகின்றனர்.

    இந்த திட்டத்தில் ஆதாரை அடிப்படையாக கொண்ட அமைப்பை பயன்படுத்துவதில் பல்வேறு சவால்கள் இருப்பதாக தொழிலாளர்கள், நிபுணர்கள் என பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியபோதும், மோடி அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை.

    உண்மையில், ஆதாரை அடிப்படையாக கொண்ட சம்பள அமைப்பு மற்றும் பிற தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதில் பல துறை சார்ந்த வல்லுனர்களின் கவலைகளுக்கு மோடி அரசு செவிமடுக்கவில்லை.

    கோடிக்கணக்கான ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களை அடிப்படை வருமானம் ஈட்டுவதில் இருந்து விலக்கி வைக்கும் பிரதமரின் கொடூரமான புத்தாண்டு பரிசு இது.

    100 நாள் வேலை திட்டம் மீதான பிரதமரின் நன்கு அறியப்பட்ட அலட்சியத்துக்கு தொழில்நுட்பத்தை ஆயுதமாக பயன்படுத்துவது நிரூபணமாகிறது.

    ஏழைகளின் நலனை பாழ்படுத்தும் வகையிலான இத்தகைய தொழில்நுட்பத்தை ஆயுதமாக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். குறிப்பாக மிகவும் பின்தங்கிய இந்தியர்களின் சமூக நலன்களை மறுக்க ஆதாரை ஆயுதமாக்குவதை நிறுத்த வேண்டும்.

    இந்த திட்டத்தில் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்குவதுடன், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த சமூக தணிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

    Next Story
    ×