என் மலர்
இந்தியா

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்- மஹுவா மொய்த்ரா வலியுறுத்தல்
- கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலந்து தொகுதியில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
- தேர்தல் ஆணையம் systematic ஆக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது. இதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து உள்ளேன் என்றார் ராகுல் காந்தி.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலந்து தொகுதியில் 6,018 வாக்காளர்கள் பெயர் நீக்கமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையம் systematic ஆக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், வாக்கு திருட்டு மெஷினை வெறுமன மேற்பார்வையிட்டு கொண்டிருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். வாக்கு திருடர்களால் நிர்வகிக்கப்படும் வாக்கு திருட்டு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் மேற்பார்வையிட்டு கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக,
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளி விவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது. இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.
இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "நான் இந்த மேடையில் 100 சதவீத உண்மையைத்தான் கூறுகிறேன். நான் என் நாட்டை நேசிக்கும் ஒருவன். என் அரசியலமைப்பை நேசிக்கிறேன், ஜனநாயக செயல்முறையை நேசிக்கிறேன், அந்த செயல்முறையை நான் பாதுகாக்கிறேன். நீங்கள் தீர்மானிக்கக்கூடிய 100% ஆதாரத்தின் அடிப்படையில் இல்லாத எதையும் நான் இங்கே சொல்லப் போவதில்லை
கர்நாடகாவில் உள்ள ஆலந்து தொகுதியில் 6018 வாக்காளர்களை நீக்க முயன்றனர். 2023 தேர்தலில் ஆலந்தில் நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை எங்களுக்குத் தெரியாது. அவை 6,018 ஐ விட மிக அதிகம். ஆனால் அந்த 6018 வாக்காளர்களை நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிபட்டார். அது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரி தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதை கண்டுபிடித்தார். எனவே அவர் தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதைச் சரிபார்த்தார்.
மேலும் அந்த வாக்கை நீக்கியது ஒரு பக்கத்து வீட்டுக்காரர் என்பதைக் கண்டுபிடித்தார். அவர் தன் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டார். ஆனால் நான் எந்த வாக்கையும் நீக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த விஷயம் வாக்கை நீக்கிய நபருக்கோ அல்லது வாக்கு நீக்கப்பட்ட நபருக்கோ தெரியாது. அப்படியானால் வேறு சில நபர்கள் வாக்காளர்களை நீக்கியுள்ளனர்.
ஆலந்து தொகுதியில் வாக்காளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து 6018 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்கள் உண்மையில் அவற்றை ஒருபோதும் தாக்கல் செய்யவில்லை. கம்ப்யூட்டர் மென்பொருளைப் பயன்படுத்தி அவை தானாகவே தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகாவிற்கு வெளியே இருந்து, பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மொபைல் எண்கள், ஆலந்தில் உள்ள எண்களை நீக்கப் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக இது காங்கிரஸ் வாக்காளர்களை குறிவைத்து செய்யப்பட்டது.
தேர்தல் ஆணையம் systematic ஆக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது. இதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து உள்ளேன். இனி இந்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் தான் தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
அதேவேளையில் தேர்தல் ஆணையம் ராகுல் காந்தி குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் "ராகுல் காந்தி தவறாகக் கூறியது போல, எந்தவொரு வாக்காளரையும் எந்தவொரு பொதுமக்களும் ஆன்லைனில் இருந்து நீக்க முடியாது. பாதிக்கப்பட்ட நபரின் கருத்தை கேட்காமல் எந்த வாக்காளர் நீக்கமும் நடக்காது.
2023 ஆம் ஆண்டில், ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு சில தோல்வியுற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த விஷயத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தால் ஒரு FIR பதிவு செய்யப்பட்டது. ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் 2018 இல் பாஜகவை சேர்ந்த சுபாத் குட்டேதரும் 2023 ஆம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த பி.ஆர். பாட்டீலும் வெற்றி பெற்றனர்" தெரிவித்துள்ளது.






