search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இமாச்சலில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் சீட் வழங்கிய பாஜக
    X

    இமாச்சலில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் சீட் வழங்கிய பாஜக

    • பாஜகவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள்
    • இமாச்சல பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து ஜூன் 1-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது

    இமாச்சலப் பிரதேசத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேருக்கும் வரும் இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.

    அண்மையில் இமாச்சல பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் 6 பேர் கட்சி மாறி வாக்களித்ததால் குறைந்த எம்எல்ஏக்களை (25) கொண்ட பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    இதனால், பாஜகவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என சபாநாயகர் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

    சுதிர் ஷர்மா, இந்தர் தத் லக்ஷன்பால், ரவி தாக்கூர், சேதன்யா ஷர்மா ராஜிந்தர் ராணா, தேவிந்தர் குமார் புட்டோ ஆகிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 6 பேர் சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தனர். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஜெய்ராம் தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் 6 பேரும் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

    இமாச்சல பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து ஜூன் 1-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    இதனிடையே, பாஜகவை ஆதரிப்பதாக கூறி, சுயேட்சை எம்எல்ஏக்கள் ஹோஷியார் சிங், ஆஷிஷ் ஷர்மா, கே.எல். தாக்கூர் ஆகிய மூவரும் ஷிம்லாவில் சட்டப்பேரவை செயலாளர் யஷ்பால் ஷர்மாவை சந்தித்து, ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர்.

    இதனால் 9 சட்டப்பேரவை உறுப்பினர்களின் இடங்கள் காலியாக உள்ளது. இதனால் சட்டப்பேரவையின் பலம் தற்போது 68-ல் இருந்து 59 ஆக குறைந்துள்ளது. இதில், ஆளும் காங்கிரஸ் கட்சி சபாநாயகர் உள்பட 34 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது. பாஜக, 25 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது. எனவே, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×