search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அ.தி.மு.க. வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்யும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    X

    அ.தி.மு.க. வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்யும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    • வேட்பாளரை இறுதி செய்ய பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.
    • இருவரும் இணைந்து தீர்வு காண்பது சாத்தியமற்றதாக இருக்கிறது.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா (வயது 46) திடீர் மறைவால், ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்த மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    இதனால் தமிழ்நாட்டில் அரசியல் களம் சுறுசுறுப்பாகி உள்ளது. இந்தத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந் தேதி தொடங்கி விட்டது.

    இந்தத் தொகுதி கடந்த முறையைப்போலவே இந்த முறையும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    இந்தத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ். தென்னரசு போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதே நேரத்தில் ஓ. பன்னீர் செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்தது.

    இதற்கு மத்தியில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த 30-ந் தேதி மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி, ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார். தொடர்ந்து இடையீட்டு மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அந்த மனுவில், "நான் கையெழுத்திட்ட வேட்பாளருக்குத்தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் " என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார்.

    இதில் தேர்தல் கமிஷனும், ஓ.பன்னீர் செல்வமும் 3 நாளில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. வழக்கு விசாரணை 3-ந் தேதிக்கு (நேற்று) ஒத்தி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், "இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு முடிவை ஏற்கவில்லை. இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதுபற்றி தற்போது எந்த முடிவும் எடுக்க இயலாது" என கூறப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் வழக்குசுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான வக்கீல், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. கோர்ட்டு தீர்ப்புக்கு காத்திருப்போம். அதை ஏற்று நடப்போம்" என கூறினார்.

    அதற்கு நீதிபதிகள், "தேர்தல் கமிஷன் பதில் மனுவை நாங்கள் படித்து பார்த்து விட்டோம். குறிப்பிட்ட அரசியல் கட்சி போட்டியிட அனுமதிப்பதா, இல்லையா என்பதையும், அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்திலும் தேர்தல் கமிஷன்தான் முடிவு எடுக்க வேண்டும் " என கூறினர்.

    தொடர்ந்து தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வக்கீல், "வழக்கு கோர்ட்டில் உள்ளதால், ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு தீர்மானத்தை பதிவேற்றம் செய்ய இயலவில்லை" என கூறவே, நீதிபதிகள், "பொதுக்குழு விவகாரத்தில் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறீர்களா? பதிவேற்ற முடியாது என்றால் அதற்கு மாற்று என்ன? " என கேள்வி எழுப்பினர். அத்துடன், " இந்த விவகாரத்தில் பிறப்பிக்கும் எந்த உத்தரவும் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது" எனவும் கூறினர்.

    அதற்கு தேர்தல் கமிஷன் தரப்பில் பதில் அளிக்கையில், "கோர்ட்டை நிர்ப்பந்திக்கவில்லை, இது தொடர்பாக ஆலோசனை நடத்தி, 7-ந் தேதிக்குள் பதில் அளிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் நீதிபதிகள் கூறும்போது, " ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்ய 7-ந் தேதி கடைசி நாள் என்கிறபோது, என்ன முடிவு எடுப்பது? அங்கு அ.தி.மு.க. போட்டியிடாத நிலை வந்து விடக்கூடாது " என கூறினர்.

    "இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளதா?" என்ற நீதிபதிகளின் கேள்விக்கு , "முடக்கப்படவில்லை. இந்த சின்னத்தை பயன்படுத்தி வேட்பாளர் போட்டியிடலாம்" என தேர்தல் கமிஷன் தரப்பு பதில் அளித்தது.

    ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல், "ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்து போட தயார். இதை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார். இந்த விவகாரத்தில் ஈகோ இல்லை " என்றார்.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கருத்தைக் கேட்டு விட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

    இருவரும் இணைந்து தீர்வு காண்பது சாத்தியமற்றதாக இருக்கிறது. இருவரும் இணைந்து தீர்வு காணும்போது என்ன பிரச்சினை? அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். எங்களது பரிந்துரையை ஏற்காவிட்டால், நாங்கள் உத்தரவு போட நேரிடும்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரை இறுதி செய்ய பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் மற்றும்3 உறுப்பினர்கள் ஓட்டு போட அனுமதி அளிக்கப்படுகிறது.

    பொதுக்குழு முடிவினை தேர்தல் கமிஷனிடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவிக்க வேண்டும். அதை தேர்தல் கமிஷன் ஏற்க வேண்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்.

    இந்த இடைக்கால ஏற்பாடு, ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ள தீர்ப்பில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிமை அளிக்கவில்லை என்பதையும், அவர்களின் உரிமை பறிக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.

    எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுக்கள் முடித்துவைக்கப்படுகின்றன. பொதுக்குழு மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×