என் மலர்
இந்தியா

விபி ஜி ராம்ஜி-க்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
- புதிய விபி-ஜி ராம்ஜி சட்டம் ஏழைகளுக்கு தீங்கு விளைவிக்கிறது.
- முன்பு 100% ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60% மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் (MGNREGA)வை திரும்பப் பெற்று, VB GRAM G என்ற பெயரில் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் ஆளும், தெலுங்கானா மாநில சட்டமன்றம் MGNREGA சட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், அதற்குப் பதிலாக வந்த VB GRAM G ராம்ஜி சட்டத்தை ரத்து செய்யவும் நேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
புதிய விபி-ஜி ராம்ஜி சட்டம் ஏழைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் அசல் நோக்கத்தை பலவீனப்படுத்தியதாகவும் சட்டமன்றத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
முன்னதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் நடந்த நிகழ்வில் பேசுகையில், "மகாத்மா காந்தியை முதல்முறை கோட்சே கொன்றார். இப்போது இந்த அரசு அவரை இரண்டாம் முறையாகக் கொல்கிறது.
இதன்மூலம் பஞ்சாயத்துகளுக்கு இருந்த அதிகாரங்களைப் பறித்துவிட்டு, இனி எந்த ஊருக்கு வேலை வழங்க வேண்டும் என்பதை டெல்லியில் இருந்து மத்திய அரசே முடிவு செய்யும்.
முன்பு 100% ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60% மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்கிறார்கள். இது அரசியலமைப்பிற்கு எதிரானது.
பெண்கள், தலித்துகள் மற்றும் சூத்திரர்கள் கையில் பணம் புழங்கக்கூடாது, அவர்கள் சுயமரியாதையோடு வாழக்கூடாது என்று மனுஸ்மிருதி சொல்கிறது.
ஆர்எஸ்எஸ் அந்த மனுஸ்மிருதியால் ஈர்க்கப்பட்டது. அந்த ஆர்எஸ்எஸ் தான் பாஜகவை வழிநடத்துகிறது. அதனால்தான் ஏழைகளின் வாழ்வாதாரமான இந்தத் திட்டத்தைச் சிதைக்கப் பார்க்கிறார்கள்." என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






