என் மலர்tooltip icon

    இந்தியா

    JEE தேர்வில் 6-வது ரேங்க்.. IIT-இல் பட்டம்.. 21 வயதில் IAS - அனைத்தையும் உதறிவிட்டு இசைக் கலைஞரான இளைஞர்!
    X

    JEE தேர்வில் 6-வது ரேங்க்.. IIT-இல் பட்டம்.. 21 வயதில் IAS - அனைத்தையும் உதறிவிட்டு இசைக் கலைஞரான இளைஞர்!

    • சிவில் சர்வீசஸ் பற்றி யோசிப்பதற்கு முன்பே இசையுடனான தனது தொடர்பு தொடங்கியதாக காஷிஷ் கூறுகிறார்.
    • அப்படித்தான் அனைவரும் விரும்பும் வாழ்க்கையை கைவிட முடிவு செய்தார்.

    இன்ஜினீயரிங் படிப்புகளுக்கான ஜேஇஇ தேர்வில் அகில இந்திய அளவில் 6-வது ரேங்க், ஐஐடி டெல்லியில் பி.டெக் பட்டம் பெற்று 21 வயதில் சிவில் சர்வீஸ் தேர்வில் வென்று ஐஏஎஸ் அதிகாரி ஆனவர் பஞ்சாபை சேர்ந்த காஷிஷ் மிட்டல்.

    சமூகத்தால் சாதனைகளாக கருதப்படும் மேற்கூறிய அனைத்தையும் உதறிவிட்டு காஷிஷ் தேர்ந்தெடுத்த பாதை இந்துஸ்தானி இசை ஆகும்.

    காஷிஷ் 1989 ஆம் ஆண்டு ஜலந்தரில் ஐபிஎஸ் அதிகாரியான ஜெகதீஷ் குமார் மற்றும் சங்கீதா மிட்டல் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இசை காஷிஷின் இரத்தத்தில் ஊறிப் போனது. எட்டு வயதில் இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்றார். 11 வயதில், பஞ்சாபில் உள்ள புகழ்பெற்ற ஹர்வல்லப் சங்கீத சம்மேளனத்தில் நிகழ்ச்சி நடத்தத் தொடங்கினார்.

    சிவில் சர்வீசஸ் பற்றி யோசிப்பதற்கு முன்பே இசையுடனான தனது தொடர்பு தொடங்கியதாக காஷிஷ் கூறுகிறார். பள்ளி நாட்களிலும், ஐஐடியில் தனது பரபரப்பான வாழ்க்கையிலும் அவர் இசையை கைவிடவில்லை.

    காஷிஷின் ஆரம்ப இலட்சியம் சிவில் சர்வீஸ். அவரது தந்தை ஒரு ஐபிஎஃப் அதிகாரி. அதுவே அவருக்கு உத்வேகம் அளித்தது. ஐஐடி டெல்லியில் கணினி அறிவியலில் பி.டெக் பட்டம் பெற்ற பிறகு, அவர் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸுக்கு முயற்சித்தார். அதனால், தனது 21 வயதில், முதல் முயற்சியிலேயே காஷிஷ் ஐஏஎஸ் பெற்றார்.

    சண்டிகரின் கூடுதல் துணை ஆணையர், அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் துணை ஆணையர், நிதி ஆயோக்கின் கூடுதல் முதன்மைச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்த பிறகு அவர் பதவி விலகினார். அப்போதும் கூட, இசையை தன்னுடன் வைத்திருந்தார்.

    இசை மற்றும் கல்வி, வேலை வாழ்க்கையை சமநிலைப்படுத்தவும் முயன்றார். ஆனால், பாரம்பரிய இசையில் தேர்ச்சி பெற முழுமையான அர்ப்பணிப்பு அவசியம் என்பதை காஷிஷ் உணர்ந்தார். அப்படித்தான் அனைவரும் விரும்பும் வாழ்க்கையை கைவிட முடிவு செய்தார். 2019 இல் தனது சிவில் சர்வீஸ் பணியை உதறிவிட்டு முழு நேர இசைக் கலைஞராக மாறினார்.

    காஷிஷ், இந்துஸ்தானியில் கயாலுடன் தொடர்புடைய 'ஆக்ரா கரானா' (Agra Gharana) இசை வகையை மிகவும் விரும்பினார். இப்போது காஷிஷ் டெல்லியில் பல இடங்களில் 'ஆக்ரா கரானா'வை நிகழ்த்துவதைக் காணலாம்.

    அவர் இப்போது அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் ஏ கிரேடு கலைஞராக உள்ளார். காஷிஷ் இந்தியா முழுவதும் பல இசை விழாக்களில் பாடியுள்ளார். சமூக ஊடகங்களிலும் தனது பாடல்களை காஷிஷ் வெளியிடுகிறார். அவை அதிக பார்வைகளை பெற்று வருகின்றன.

    'இசை போன்ற கலைகள் ஒரு நித்திய பயணம். அதற்கு நாம் தகுதியான விலையை வழங்க வேண்டும்' என்று காஷிஷ் கூறுகிறார்.

    Next Story
    ×