என் மலர்tooltip icon

    இந்தியா

    திருமணமான 2 வாரத்தில் கணவரை கோடரியால் வெட்டிக்கொன்ற பெண்- பரபரப்பு தகவல்கள்
    X

    திருமணமான 2 வாரத்தில் கணவரை கோடரியால் வெட்டிக்கொன்ற பெண்- பரபரப்பு தகவல்கள்

    • இவரது முதல் மனைவி புற்றுநோயால் இறந்துவிட்டார்.
    • தனது வாழ்க்கையை நினைத்து புலம்பிய ராதிகா கணவரை கொலை செய்ய துணிந்தார்.

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழில் அதிபர் ராஜா ரகுவன்ஷி. திருமணமான இவர் கடந்த மாதம் மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது, மனைவி சோனமின் சதித்திட்டத்தால் கூலிப்படை மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். காதலரை கரம்பிடிக்க முடியாமல் போனதால் இவர் இந்த கொடூர கொலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக சோனம் மற்றும் 4 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னும் தணியாத நிலையில் மராட்டிய மாநிலத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

    இங்குள்ள சாங்கிலி மாவட்டம் குப்வாட் தாலுகாவில் வசித்து வந்தவர் அனில் லோகண்டே(வயது53). இவரது முதல் மனைவி புற்றுநோயால் இறந்துவிட்டார். இதையடுத்து அனில் லோகண்டே கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராதிகா என்ற 27 வயது பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டார். ஆனால் தாம்பத்திய வாழ்க்கையை தொடங்குவதில் ராதிகாவுக்கு விருப்பம் இல்லை எனத்தெரிகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவில் அனில் லோகண்டே மனைவியை தாம்பத்திய உறவுக்கு அழைத்தார். இதற்கு அவரது மனைவி எரிச்சலடைந்தார். அவர் தனது விருப்பத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தவே, கணவன்-மனைவி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனில் லோகண்டே உறங்க சென்று விட்டார்.

    தனது வாழ்க்கையை நினைத்து புலம்பிய ராதிகா கணவரை கொலை செய்ய துணிந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 12.30 மணி அளவில் அனில் லோகண்டே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாக தெரிகிறது. அப்போது ராதிகா வீட்டில் இருந்த கோடரியை எடுத்து வந்து படுக்கையில் இருந்த கணவரை கண்மூடித்தனமாக தாக்கினார். இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் நடந்த சம்பவத்தை தனது உறவினருக்கு போன் செய்து ராதிகா தெரிவித்தார். இதற்கிடையே தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அனில் லோகண்டேவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவரை கொலை செய்த ராதிகாவை போலீசார் கைது செய்தனர். ராதிகாவின் விருப்பத்துக்கு மாறாக அவரது தந்தை வயதுள்ள அனில் லோகண்டேவுக்கு திருமணம் செய்து வைத்தார்களா?, கணவருடன் தாம்பத்தியம் நடத்த விருப்பம் இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியேறாமல், அவரை கொலை செய்ய துணிந்தது ஏன்? என்பது போன்ற தகவல்களை திரட்ட போலீசார், ராதிகாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×