search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் பலி: பிரதமர் மோடி, ராகுல்காந்தி இரங்கல்
    X

    குஜராத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் பலி: பிரதமர் மோடி, ராகுல்காந்தி இரங்கல்

    • ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை அரங்கில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி பூபேந்திர படேல், மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் பலியானதாக தகவல் வெளியானது.

    தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கப் போராடினர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

    தீ விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி பூபேந்திர படேல், மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்து நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அவர்களிடம் பேசினேன். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் என்னிடம் கூறினார்" என்று பதிவிட்டுள்ளார்.

    அதே போல் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அப்பாவி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உதவி செய்யுமாறு காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக் கெள்கிறேன். மேலும், குஜராத் அரசு இந்த சம்பவம் குறித்து விரிவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் விரைவான நீதியை வழங்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×