என் மலர்

  செய்திகள்

  ரபேல் விவகாரத்தில் பா.ஜனதா தொடர்ந்த அவமதிப்பு வழக்கு - ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
  X

  ரபேல் விவகாரத்தில் பா.ஜனதா தொடர்ந்த அவமதிப்பு வழக்கு - ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரபேல் விவகாரத்தில் பா.ஜனதா தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் அடிப்படையில் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #PMModi #RahulGandhi #SupremeCourt #RafaleDeal
  புதுடெல்லி:

  ரபேல் விவகாரத்தில் பா.ஜனதா தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் அடிப்படையில் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 22-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கூறியுள்ளது.

  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அந்த நிறுவனத்தின் இந்திய பங்குதார நிறுவனமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

  இந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. விமானத்துக்கு கூடுதல் விலை தரப்பட்டுள்ளதாகவும், அனில் அம்பானி நிறுவனத்தை தேர்வு செய்ததில் பிரதமர் மோடியின் தலையீடு இருந்ததாகவும் அக்கட்சி கூறி வருகிறது. “பிரதமர் மோடி ஒரு திருடன்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.  ரபேல் விவகாரத்தில் முறைகேடு நடந்ததா என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி, பா.ஜனதா முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

  ஆனால், ஒப்பந்த ஆவணங்களை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட்டு, ரபேல் விவகாரத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.

  இதற்கிடையே, ரபேல் விவகாரம் தொடர்பான ரகசிய ஆவணங்கள் ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளியாகின. அந்த ஆவணங்கள் அடிப்படையில், ரபேல் ஒப்பந்தம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று யஷ்வந்த் சின்கா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.

  அந்த ரகசிய ஆவணங்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற மத்திய அரசின் அட்டார்னி ஜெனரலின் ஆட்சேபனையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. அந்த ஆவணங்களை ஏற்றுக்கொண்டு, மனுவை விசாரிப்பதாக கடந்த வாரம் கூறியது.

  மத்திய அரசுக்கு இது பின்னடைவாக கருதப்பட்டது. இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மகிழ்ச்சி தெரிவித்தார். பிரதமர் மோடி திருட்டில் ஈடுபட்டதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டதாகவும், விமானப்படை பணத்தை அம்பானியிடம் கொடுத்துவிட்டதாக, தான் கூறியதை கோர்ட்டு ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

  ஆனால், பிரதமருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு எதுவும் கூறவில்லை என்று பா.ஜனதா தரப்பில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர். ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவித்தனர்.

  இதையடுத்து, ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி, சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

  அதில், ராகுல் காந்தி தனது தனிப்பட்ட கருத்துகளை கோர்ட்டு கூறியதாக திரித்து கூறுவதாகவும், இதன்மூலம் கோர்ட்டு அவமதிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் மீனாட்சி லேகி கூறியிருந்தார்.

  இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மீனாட்சி லேகி சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜரானார்.

  அவர் வாதிடுகையில், “காவலாளி நரேந்திர மோடி ஒரு திருடன் என்று சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் கூறிவிட்டதாக ராகுல் காந்தி பகிரங்கமாக கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு சொல்லாததை எல்லாம் சொன்னதாக கூறுகிறார். இது, முற்றிலும் கோர்ட்டு அவமதிப்பு ஆகும்” என்று கூறினார்.

  அதைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:-

  நீங்கள் சொல்வது சரிதான். இந்த மனுவில் கூறியுள்ள படி நாங்கள் எதுவும் கூறவில்லை. ராகுல் காந்தி தனது பேட்டியில் கூறிய கருத்துகள், இந்த கோர்ட்டு சொல்லாதவை. அவற்றை நாங்கள் கூறியதாக அவர் தவறாக தெரிவித்துள்ளார்.

  சில ஆவணங்கள் சட்டரீதியாக ஏற்புடையவை தானா என்று விசாரணை நடத்தியபோது, எந்த சந்தர்ப்பத்திலும் அத்தகைய கருத்துகளை நாங்கள் கூறவில்லை.

  ஆகவே, இதுதொடர்பாக ராகுல் காந்தியிடம் நாங்கள் விளக்கம் கேட்போம். அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். அவர் 22-ந் தேதிக்குள் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும். 23-ந் தேதி, இந்த விவகாரத்தை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்.

  இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

  இதற்கிடையே, ராகுல் காந்தியின் பொய் அம்பலமாகி விட்டதாக பா.ஜனதா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

  ராகுல் காந்தி நாள்தோறும் பொய்களை சொல்லி வருகிறார். அவற்றில் ஒரு பொய்யை சுப்ரீம் கோர்ட்டு அம்பலப்படுத்தி இருக்கிறது. பிரதமரை இழிவுபடுத்தியதற்காக, அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழலில் சிக்கி தவித்தநிலையில், மோடி நேர்மையான அரசை அளித்ததை ராகுல் காந்தியாலும், அவருடைய குடும்பத்தாலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்திய அரசியல் தரம் தாழ்ந்ததற்கு அவரே காரணம். சரியான புரிதல் இல்லாமல்தான், அவர் பொய் குற்றச்சாட்டு கூறுவதாக, முன்பு மக்கள் நினைத்திருந்தனர். ஆனால், அவர் வேண்டுமென்றே தான் அப்படி பேசி வருவது, இப்போது தெளிவாகி விட்டது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியதாவது:-

  கோர்ட்டு கேட்டபடி, ராகுல் காந்தி விளக்கம் அளிப்பார். பிரதமர் மோடி கூடத்தான், சுப்ரீம் கோர்ட்டு தனக்கு நற்சான்றிதழ் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

  இவ்வாறு அவர் கூறினார்.  #PMModi #RahulGandhi #SupremeCourt #RafaleDeal

  Next Story
  ×