search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசுக்கு எதிராக தர்ணா - மம்தாவை நேரில் சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆதரவு
    X

    மத்திய அரசுக்கு எதிராக தர்ணா - மம்தாவை நேரில் சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆதரவு

    மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் தர்ணா நடத்தி வரும் மம்தா பானர்ஜியை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். #MamataDharna #CBIvsMamata #ChandrababuNaidu
    கொல்கத்தா:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிப்பதற்காக நேற்று முன்தினம் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென அவரது வீட்டுக்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கொல்கத்தா போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று காவலில் வைத்து, பின்னர் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் மோதல் உருவாகி உள்ளது.

    போலீஸ் உயர் அதிகாரியிடம் மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.ஐ. விசாரிக்க முயற்சி செய்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். அதோடு அரசியலமைப்பு சட்டத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கப் போவதாக சொல்லி கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார். 



    அவரை தி.மு.க. சார்பில் கனிமொழி, ஆம் ஆத்மி சார்பில் கெஜ்ரிவால், ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் தர்ணா நடத்தி வரும் மம்தா பானர்ஜியை தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு சந்தித்து இன்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, 22 எதிர்க்கட்சிகள் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இவையனைத்தும் பிரதமர் மோடி சி.பி.ஐ.யை ஏவி விட்டு மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி உள்ளன. #MamataDharna #CBIvsMamata #ChandrababuNaidu
    Next Story
    ×