search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி - ராகுல் அறிவிப்பு
    X

    உ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி - ராகுல் அறிவிப்பு

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என ராகுல் காந்தி இன்று அறிவித்துள்ளார். #Congress #RahulGandhi #Parliamentelection
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தனது பாராளுமன்ற தொகுதியான அமேதியில் இருநாள் சுற்றுப்பயணம் செய்யும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் லக்னோ நகரை வந்தடைந்தார்.

    விமான நிலையத்தில் உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.



    பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, ‘அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில தலைவராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. சிறந்த உழைப்பாளியான அவருடன் இணைந்து பணியாற்றும் நாளை நான் எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

    உத்தரப்பிரதேசம் (மேற்கு) மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜோதிராதித்யா சிந்தியாவும் சிறப்பாக செயல்பட கூடியவர் என புகழாரம் சூட்டினார்.

    ‘வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு இருக்கும் ஒரே பொதுநோக்கம் மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அக்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் நோக்கமும் இதுதான். இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடமளிக்காதது தொடர்பாக அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர்களுக்கு எந்த வகையில் எங்கள் கட்சியின் உதவி தேவைப்பட்டாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்.

    ஆனால், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை நான் முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது என்பதால் எங்கள் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் இங்குள்ள 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்’ எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார். #Congress #RahulGandhi  #Parliamentelection 
    Next Story
    ×