search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டிடத்தில் தீப்பிடித்து எரியும் காட்சி.
    X
    கட்டிடத்தில் தீப்பிடித்து எரியும் காட்சி.

    மும்பை திலக்நகர் தீ விபத்தில் 5 பேர் பலி: கட்டுமான ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு

    மும்பை செம்பூர் திலக்நகர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியானார்கள். இது தொடர்பாக போலீசார் கட்டுமான ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். #Mumbai MumbaiFire
    மும்பை :

    மும்பை செம்பூர் திலக்நகர் பகுதியில் சர்கம் என்ற 16 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 11-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இந்த மரத்தில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. இந்த தீ கொழுந்துவிட்டு எரிந்து மளமளவென 10-வது மாடிக்கும் பரவியது.

    இதையடுத்து வீடுகளில் இருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். கீழ் மாடிகளில் இருந்த மக்கள் தரை தளத்திற்கும், மேல் மாடிகளில் இருந்த மக்கள் மொட்டை மாடிக்கும் ஓட்டம் பிடித்தனர்.

    தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். எனினும் குறுகிய சாலை மற்றும் அந்த பகுதியில் நிறுத்தியிருந்த வாகனங்களால் விபத்து நடந்த கட்டிடத்திற்கு அவர்களால் உடனடியாக செல்ல முடியவில்லை. இந்தநிலையில் தீப்பிடித்த ஒரு வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் மேலும் தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.


    தீ விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் கதறி அழுத காட்சி.


    இந்தநிலையில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தில் சிக்கி இருந்தவர்ளை மீட்டனர். இதில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டவர்கள் ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சுனிதா ஜோஷி (வயது72), பால்சந்திர ஜோஷி (72), சுமன் ஜோஷி (83), சரளா (52), லெட்சுமி பென் (83) ஆகிய 5 பேர் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். இதில் 5 பேரும் மூச்சுத்திணறலால் பலியானதாக ராஜவாடி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் வித்யா தாக்கூர் கூறினார். மேலும் 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கட்டிடத்தில் உரிய தீத்தடுப்பு கருவிகள் இல்லாததே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. மேலும் கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள 5 ஆண்டுகளாக அதன் ஒப்பந்ததாரரிடம் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துவந்ததாகவும், ஆனால் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து திலக்நகர் போலீசார் தீ விபத்து குறித்து கட்டிட ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Mumbai #MumbaiFire
    Next Story
    ×