search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனவரி 9, 10-ந்தேதிகளில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாஜக தேசியக்குழு கூட்டம்
    X

    ஜனவரி 9, 10-ந்தேதிகளில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாஜக தேசியக்குழு கூட்டம்

    பாராளுமன்ற தேர்தல் பணிகளைத் தொடங்குவதற்காக பாஜக தேசியக் குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் வருகிற 9 , 10-ந்தேதிகளில் 2 நாட்கள் நடைபெற உள்ளது. #BJP
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    மார்ச் மாதம் தேர்தல் தேதி அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளதால் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 முக்கிய மாநிலங்களை பா.ஜ.க. இழந்தது.

    இதனால் பா.ஜ.க. தலைவர்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் மத்தியில் கடும் சோர்வு ஏற்பட்டுள்ளது. இந்த சோர்வை போக்கும் வகையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளை பிரதமர் மோடி, தேசியத் தலைவர் அமித் ஷா இருவரும் சந்தித்து பேச தொடங்கி உள்ளனர்.


    இதற்கிடையே பாராளுமன்ற தேர்தல் பணிகளைத் தொடங்குவதற்காக பா.ஜ.க. தேசியக் குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் 2 நாட்கள் நடைபெற உள்ளது.

    முதலில் இந்த கூட்டம் இந்திராகாந்தி உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அதிகப்படியான நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதால் பா.ஜ.க. தேசியக் குழு கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. தேசியக்குழு கூட்டம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ளது. இந்த தடவை நாடு முழுவதிலும் இருந்து சுமார் 4 ஆயிரம் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தேசியக் குழு கூட்டம் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தக் கூட்டமாகக் கருதப்படுகிறது. கூட்டணி, பிரசார வியூகம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளன. எனவே ஜனவரி 9, 10-ந்தேதிகளில் டெல்லியில் நடக்கும் பா.ஜ.க. தேசியக் குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #BJP #ParliamentElection
    Next Story
    ×