என் மலர்
செய்திகள்

பாஜக ரதயாத்திரைக்கு அனுமதி வழங்கியது கொல்கத்தா உயர் நீதிமன்றம்
மேற்கு வங்காளத்தில் பாஜக நடத்தவுள்ள ரதயாத்திரைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. #Rathyatra #BJP #KolkattaHighCourt
கொல்கத்தா:
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை கருத்தில் கொண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் அனைத்து பாராளுமன்றத் தொகுதிகளிலும் ரதயாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரைக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமை தாங்க உள்ளார். ஆனால் இந்த யாத்திரைகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
இதையடுத்து ரதயாத்திரை நடத்த அனுமதி கோரி மாநில பாஜக சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மத ரீதியிலான மோதல்கள் ஏற்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்க மறுத்தார். இதையடுத்து பாஜக சார்பில் ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பாஜக ரதயாத்திரைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும், ரத யாத்திரைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதித்தார்.
இதுதொடர்பாக, நீதிபதி தபப்ரதா சக்கரவர்த்தி கூறுகையில், ‘12 மணி நேரம் மட்டுமே பேரணி நடத்த வேண்டும். மாநிலத்தின் சட்டம் ஒழுங்குக்கு பங்கம் விளைவிக்காத வகையில் அமைதியான முறையில் ரதயாத்திரையை நடத்த வேண்டும். யாத்திரையால் பாதிப்பு வந்தால் அதற்கான முழு பொறுப்பும் பாஜகவை சேரும்’ என்றார்.
கொல்கத்தா நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மாநில பாஜகவினர் வரவேற்றுள்ளனர். #Rathyatra #BJP #KolkattaHighCourt
Next Story






