search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் மசோதா - பாராளுமன்றத்தில் நிறைவேறியது
    X

    மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் மசோதா - பாராளுமன்றத்தில் நிறைவேறியது

    மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா முன்வைத்த தனிநபர் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேறியது. #TransgenderBill #LokSabha
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நிகராக மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சமூக அங்கீகாரம் அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த பின்னர் தங்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி ஆகியவற்றை உறுதிப்படுத்தவும், பிற உரிமைகளை பாதுகாக்கவும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதைதொடர்ந்து, தி.மு.க.வை சேர்ந்த எம்.பி.யான திருச்சி சிவா கடந்த  2-8-2016 அன்று பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.

    இந்த மசோதா ராஜ்யசபையில் நிறைவேறிய பின்னர் பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், பாராளுமன்ற நிலைக்குழு இந்த மசோதா தொடர்பாக 27 பரிந்துரைகளை இணைத்திருந்தது.


    மூன்றாம் பாலினத்தவர்களை வற்புறுத்தி பிச்சை எடுக்கும் தொழிலில் தள்ளுவது, பொது இடங்களில் அனுமதிக்க மறுப்பது, வார்த்தைகளாலும், உடல்ரீதியாகவும் அவர்களை துன்புறுத்துவது போன்றவற்றை குற்றச்செயலாக அறிவித்து அபராதத்துடன் அதிகபட்சமாக இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதிக்க மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உரிமைகள் பாதுகாப்பு என்னும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

    இந்நிலையில், மத்திய சமூக நலத்துறை மற்றும் சமூகநீதித்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் இந்த மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

    இப்படி ஒரு சட்டம் தங்களுக்கு தேவை என மூன்றாம் பாலினத்தவர்களும், அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளும் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வந்துள்ளதாக இந்த மசோதாவை அறிமுகம் செய்துவைத்த தாவர்சந்த் கெலாட் குறிப்பிட்டார்.

    இந்த மசோதா மீது பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்து கொண்டிருந்த நிலையில், பல்வேறு பிரச்சனைகளை மையப்படுத்தி மக்களவையில் ஒருபுறம் அமளியும் நீடித்தது. இதற்கிடையே மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா முன்வைத்த தனிநபர் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேறியது.

    இதன்பின்னர் மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.   #TransgenderBill #LokSabha 
    Next Story
    ×