search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுவேதா மணக்கோலத்தில் தேர்வு எழுதியதை படத்தில் காணலாம்.
    X
    சுவேதா மணக்கோலத்தில் தேர்வு எழுதியதை படத்தில் காணலாம்.

    திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய மணப்பெண்

    கர்நாடக மாநிலம் ஹாசனில் திருமணம் முடிந்த கையோடு மணப்பெண் ஒருவர் பி.காம் இறுதி ஆண்டு தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Bride #Exam
    ஹாசன்:

    கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா கண்டசி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்(வயது 25). இவருக்கும் ஹாசன் டவுன் ஜெயநகர் பகுதியைச் சேர்ந்த சுவேதா(20) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 6-ந் தேதி பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுடைய திருமணம் நவம்பர் மாதம் 3-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் இவர்களுடைய திருமணம் நவம்பர் மாதம் 18-ந் தேதி(அதாவது நேற்று) அறிவிக்கப்பட்டது.மணமகன் நவீன் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மணப்பெண் சுவேதா, ஹாசன் டவுனில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இவர்களுடைய திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் தடபுடலாக செய்தனர். திருமண பத்திரிகைகளை அச்சடித்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்தனர். இந்த நிலையில் சுவேதாவுக்கு இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு அறிவிக்கப்பட்டது.



    அதன்படி திருமண நாளான நவம்பர் 18-ந் தேதி அன்று அவருக்கு வணிக கணக்குப்பதிவியல் மற்றும் சட்டம் ஆகிய பாடத்திற்கான தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. திருமண நாளன்று தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் சுவேதா மனமுடைந்தார். அவர் இதுபற்றி தனது வருங்கால கணவர் நவீன் மற்றும் அவருடைய குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.

    அதற்கு நவீனும், அவருடைய குடும்பத்தாரும் சுவேதாவுக்கு ஆறுதல் கூறினர். மேலும் நன்றாக படிக்கும்படியும், தேர்வை கண்டிப்பாக தாங்கள் எழுத வைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் ஒருபுறம் நடக்க, சுவேதா தனது தேர்வுக்காக தயாராகி வந்தார். இந்த நிலையில் திட்டமிட்டபடி நேற்று காலையில் ஹாசன் டவுனில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நவீன்-சுவேதா ஆகியோரின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன. காலை 7.45 மணியில் இருந்து 8.45 மணிக்குள் முகூர்த்த நேரம் ஆகும்.

    அதன்பேரில் நேற்று அதிகாலையிலேயே மணமகன் நவீனும், மணப்பெண் சுவேதாவும் திருமணத்திற்கு தயாரானார்கள். திருமணத்திற்காக வந்தவர்களுக்கு அறுசுவை உணவும் தயார் செய்யப்பட்டது. பின்னர் குறித்த நேரத்தில் மணக்கோலத்தில் நவீனும், சுவேதாவும் வந்து மணமேடையில் அமர்ந்தனர். அதையடுத்து அவசர, அவசரமாக புரோகிதர் வேத, மந்திரங்கள் முழங்க மணமகன் நவீன், மணமகள் சுவேதாவின் கழுத்தில் தாலி கட்டினார்.

    மேலும் விரைவாக திருமணச் சடங்குகளும் முடிக்கப்பட்டன. அதையடுத்து மணமகன் நவீனும், மணப்பெண் சுவேதாவும் மணக்கோலத்திலேயே தேர்வு நடைபெறும் அரசு கல்லூரிக்கு வந்தனர். அங்கு நவீன் வெளியில் காத்திருக்க, சுவேதா மணக்கோலத்திலேயே தேர்வு அறைக்கு சென்று தன்னுடைய தேர்வை எழுதினார். அவர் தேர்வை எழுதி முடித்துவிட்டு திரும்பி வரும் வரை மணமகன் நவீனும், திருமண வீட்டாரும் அங்கேயே காத்திருந்தனர். இந்த சம்பவத்தைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மணமகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து மணமகனும், மணப்பெண்ணும் மீண்டும் மண்டபத்திற்கு திரும்பி அங்கு குடும்பத்தினர், உறவினர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர்.

    திருமணம் முடிந்த பிறகு மணப்பெண் சுவேதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இது எனக்கு ஒரு புது அனுபவமாகவும், ஆச்சரியமாகவும் அமைந்தது. என் வாழ்க்கையில் நடந்த ஓர் அதிசயம் இது. இந்த தேர்வை நான் எழுதவில்லை என்றால் மனதளவில் மிகவும் வருத்தம் அடைந்திருப்பேன். ஆனால் எனக்கு எனது கணவரும், அவருடைய குடும்பத்தினரும் மிகவும் ஒத்துழைப்பு தந்தனர். அவர்களால்தான் இந்த தேர்வை நான் மன நிம்மதியோடு எழுத முடிந்தது. கண்டிப்பாக நான் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடுவேன். நான் தேர்வு எழுத உறுதுணையாக இருந்த என் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Bride #Exam
    Next Story
    ×