என் மலர்
செய்திகள்

சபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு
சபரிமலை செல்லும் பாதையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், 4 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaTemple #Section144 #Pamba #Nilakkal
பத்தனம்திட்டா:
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்புக்கு எதிராக கேரள மாநிலத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது.
ஆனால், சபரிமலைக்கு வரும் அனைத்து பாதைகளிலும் போராட்டக்குழுவினர் முகாமிட்டு, பெண்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 10 வயதுக்கு உட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதித்தனர். பெண் பத்திரிகையாளர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்ததால், நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். நிலக்கல் பகுதியில் 10க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இதற்கிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்கக்கோரி சர்வதேச இந்து பரிஷத் அமைப்பு சார்பில் இன்று நள்ளிரவு முதல் நாளை மறுநாள் அதிகாலை வரை முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று நள்ளிரவு முதல் பம்பா, நிலக்கல், சன்னிதானம் மற்றும் எலவுங்கல் பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக யாரும் போராடக்கூடாது என்றும் மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே கேட்டுக்கொண்டுள்ளார். #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaTemple #Section144 #Pamba #Nilakkal
Next Story






