search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொலை - ராஜ்நாத்சிங், ராகுல் காந்தி கண்டனம்
    X

    ஜம்மு காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொலை - ராஜ்நாத்சிங், ராகுல் காந்தி கண்டனம்

    ஜம்மு காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Srinagar #RisingKashmir #ShujaatBukhari #RajnathSingh #RahulGandhi
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை செயல்பட்டு வருகிறது. இதன் ஆசிரியராக இருந்தவர் ஷுஜாத் புகாரி.

    இன்று மாலை ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் காரில் சென்றபோது, அவரை வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார், அவரது பாதுகாவலர்கள் இருவர் காயம் அடைந்தனர்.

    இதையடுத்து, அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அவரது பாதுகாவலர்களில் ஒருவரும் இறந்தார்.

    பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு முதல் மந்திரி மெகபூபா முப்தி கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.



    இந்நிலையில், ஸ்ரீநகரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறுகையில், பத்திரிகை ஆசிரியரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளின் செயல் மிகவும் கோழைத்தனமானது. பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரி மிக துணிச்சலானவர். அவரது இறப்பு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

    இதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், அமைதி நிலவ வேண்டும் என்பதிலும் அவர் தீவிரமாக போராடி வந்தார். அவரது இறப்பு கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரி வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார். #Srinagar #RisingKashmir #ShujaatBukhari #RajnathSingh #RahulGandhi
    Next Story
    ×