என் மலர்

  செய்திகள்

  விமானத்தில் நாசவேலை செய்து ராகுலை கொல்ல சதியா?- காங்கிரஸ் குற்றச்சாட்டு
  X

  விமானத்தில் நாசவேலை செய்து ராகுலை கொல்ல சதியா?- காங்கிரஸ் குற்றச்சாட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற விமானத்தில் நாசவேலை செய்து அவரை கொல்ல திட்டமிட்டு இருக்கலாம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. #RahulGandhi #congress
  பெங்களூர்:

  கர்நாடகா மாநில சட்டசபைக்கு மே 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

  அங்கு ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

  கர்நாடகா தேர்தல் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே ஓரிரு சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி - தோல்வி அமையும் என்று தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த ராகுல் முடிவு செய்தார்.

  கர்நாடகாவில் ராகுல் ஏற்கனவே 6 கட்ட பிரசாரத்தை நிறைவு செய்துள்ளார். அடுத்தக்கட்டமாக அவர் கிராமம், கிராமமாக சென்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இதற்காக ராகுல் நேற்று காலை டெல்லியில் இருந்து கர்நாடகாவுக்கு தனி விமானத்தில் புறப்பட்டு வந்தார். அவர் வந்த விமானம் 10 இருக்கைகள் கொண்ட “டஸ்சல்ட் பால்கன்-2000” என்ற வகை விமானமாகும்.

  அந்த விமானத்தில் ராகுலுடன், அவரது உதவியாளர் கவுசல் வித்தியார்த்தி மற்றும் பாதுகாவலர்கள் வந்தனர். பகல் 11.25 மணி அளவில் அந்த விமானம் ஹூப்ளி விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றது.

  அப்போது அந்த குட்டி விமானத்தில் திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டது. நடுவானில் குலுங்கிய அந்த விமானம் ஹூப்ளி விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை ராடார் திரையில் இருந்து சுமார் 3 நிமிடங்கள் மாயமாய் மறைந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

  கடும் போராட்டத்துக்குப் பிறகே அந்த குட்டி விமானத்துடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து ராகுல் விமானம் தரை இறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் 2 தடவை தரை இறங்க முயன்றும், விமானிகளால் தரை இறக்க முடியவில்லை.

  திடீரென அந்த விமானம் இடது பக்கமாக சாய்ந்தது. பல தடவை குலுங்கவும் செய்தது. இதனால் ராகுலும், அவரது பாதுகாவலர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.


  இந்த நிலையில் விமானியும், துணை விமானியும் அந்த விமானத்தை கடுமையாக போராடி மூன்றாவது முயற்சியில் தரை இறக்கினார்கள். தரை இறங்கிய போதும் அந்த குட்டி விமானம் உடைந்து விடுவது போன்று பல தடவை குலுங்கியது. வழக்கத்துக்கு மாறான சத்தங்களும் எழுந்தன.

  அதிர்ஷ்டவசமாக வேறு எந்த பிரச்சனையும் எழாமல் விமானம் தரை இறங்கியதால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். என்றாலும் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காங்கிரஸ் தலைவர்களுக்கும், ராகுலின் பாதுகாவலர்களுக்கும் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஹூப்ளியில் உள்ள கோகுல் நகர் போலீஸ் நிலையத்தில் இதுபற்றி புகார் தெரிவிக்கப்பட்டது.

  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ராகுலின் குட்டி விமானத்தை இயக்கிய விமானி ஜெகத் சிங்யாதவ் மற்றும் துணை விமானியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

  அப்போது விமானி கூறுகையில், “விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததால் குலுங்கியது” என்றார். ஆனால் போலீசார் இதை ஏற்கவில்லை.

  காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இந்த விவகாரத்தில் நாச வேலை சதி அரங்கேற்றப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். கர்நாடகா போலீஸ் ஐ.ஜி.க்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளனர்.

  இதற்கிடையே பிரதமர் அலுவலக அதிகாரிகள் உடனடியாக ராகுல்காந்தியைத் தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்கள் பற்றி விசாரித்தனர். பிறகு இது பற்றி உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டனர். அதன் பேரில் ஐதராபாத்தில் இருந்து அதிகாரிகள் குழு சென்று விசாரித்து வருகிறது.

  ராகுலை குறி வைத்து விமானத்தில் நாசவேலை சதி செய்யப்பட்டிருக்கலாம் என்று ராகுலின் உதவியாளர் கவுசல் வித்தியார்த்தியும் புகார் தெரிவித்துள்ளார். குட்டி விமானத்தில் ஏற்பட்ட பழுது, அது குலுங்கிய விதம், அது தரை இறக்கப்பட்ட விதம், சத்தம் ஆகியவை சந்தேகம் தருவதாக அவர் அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகர் மனுவில் வித்யார்த்தி மேலும் கூறி இருப்பதாவது:-

  ஹூப்ளியில் தட்பவெட்ப சீதோஷ்ண நிலை இயல்பாக இருந்தது. ஆனால் விமானத்தில் எழுந்த திடீர் சத்தங்கள் இயற்கைக்கு மாறாக இருந்தன.

  எங்களது விமானம் ஒரு பக்கமாக சாய்ந்து குலுங்கியபோது, மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. விமானப் பயணத்தின் முழு நேரத்திலும் நாங்கள் உயிரை கையில் பிடித்தப்படி இருந்தோம். விமானத்தில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டதை விமானிகளும் ஒத்துக் கொண்டனர்.

  இது எங்களுக்கு சந்தேகத்தை தருகிறது. விமானம் குலுங்கிய விதம் இதுவரை வழக்கத்தில் இல்லாதது. ஏதோ நாசவேலைக்கு முயற்சி நடந்ததாக நினைக்க தோன்றுகிறது.

  எங்களது இந்த சந்தேகத்தை சாதாரணமாக நினைத்து ஒதுக்கி தள்ளிவிட முடியாது. எனவே குட்டி விமானத்தின் செயல்பாடு பற்றி முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.

  இவ்வாறு அந்த புகார் மனுவில் ராகுலின் உதவியாளர் கவுசல் வித்தியார்த்தி கூறியுள்ளார்.

  இதையடுத்து விமான தொழில் நுட்ப நிபுணர்கள் மூலம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. நேற்று காலை டெல்லியில் 9.20 மணிக்கு புறப்பட்டு 11.25 மணிக்கு கர்நாடகா வந்து சேர்ந்தது முதல் அந்த குட்டி விமானம் எப்படி இயங்கியது என்று ஆய்வு செய்யப்பட்டது.

  அப்போது அந்த குட்டி விமானம் சுமார் 41 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது “ஆட்டோபைலட்” கருவி பழுதடைந்து விட்டது தெரிய வந்துள்ளது.

  ஆட்டோபைலட் கருவி செயல் இழந்ததால் விமானிகள் கையால் விமானத்தை இயக்கியுள்ளனர். விமானம் ஒரு பக்கமாக சாய்ந்ததற்கும், குலுங்கியதற்கும் அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

  என்றாலும் விமானத்தில் சத்தம் வந்தது ஏன் என்பதற்கு உரிய விடை கிடைக்கவில்லை. இதுபற்றி விமானிகள் இருவரும் ராகுலை சந்தித்து உரிய விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. #RahulGandhi #congress
  Next Story
  ×