search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘முத்தலாக்’ மசோதா இன்று தாக்கல்: எம்.பி.க்கள் அவையில் இருக்க பா.ஜ.க கொறடா உத்தரவு
    X

    ‘முத்தலாக்’ மசோதா இன்று தாக்கல்: எம்.பி.க்கள் அவையில் இருக்க பா.ஜ.க கொறடா உத்தரவு

    முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மசோதா பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. #TripleTalaqBill
    புதுடெல்லி:

    இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை மேற்கோள் காட்டி, முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை ‘தலாக்’ கூறும் ‘முத்தலாக்’ முறை அமலில் உள்ளது. இது தொடர்பான வழக்கில் ‘முத்தலாக்’ முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறது எனவும் அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இந்த முத்தலாக் மற்றும் முன்னாள் கணவரை இரண்டாம் முறையாக மீண்டும் திருமணம் செய்துகொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மற்றும் பலதார மணம் ஆகியவை தொடர்பாக இஸ்லாமிய சட்ட வாரியமும், மத்திய அரசும் தங்களது நிலைப்பாட்டினை கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தன.

    முத்தலாக் முறையை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தால் இஸ்லாமிய திருமணங்கள் மற்றும் விவாகரத்து தொடர்பாக புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோரை கொண்ட மத்திய மந்திரிகள் குழு ‘முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா’ என்ற புதிய சட்ட முன்வரைவை தயாரித்துள்ளது.

    முத்தலாக் என்று ஒரே நேரத்தில் மனைவியிடம் நேரிலோ, இ-மெயில், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப் போன்ற மின்னணு சாதனங்கள் மூலமாகவோ தெரிவிக்கும் கணவனின் விவாகரத்து செல்லாது. அவ்வாறு, ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்ட முன்வடிவை தயாரித்துள்ள மத்திய அரசு இந்த சட்ட மசோதாவின் பிரதிகளை அனைத்து மாநில அரசுகளின் பார்வைக்கும் அனுப்பி வைத்தது.

    இதுதொடர்பாக, உடனடியாக கருத்து தெரிவிக்குமாறும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. மாநில அரசுகளின் ஒப்புதல் மற்றும் ஆலோசனைகளுக்கு பின்னர் குளிர்கால கூட்டத்தொடரின்போது இந்த புதிய சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 15-ம் தேதி ஒப்புதல் அளித்தது.

    இதை தொடர்ந்து, ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ள முத்தலாக் முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதற்காக, பா.ஜ.க எம்.பி.க்கள் அனைவரும் இன்று அவையில் இருக்க வேண்டும் என அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார். அவை தொடங்குவதற்கு முன்னதாக அக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.

    மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் இந்த மசோதாவை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த மசோதாவின் மீது தொடர்ந்து விவாதம் நடைபெறும். அதன் பின்னர் தேவைப்பட்டால் உறுப்பினர்களின் ஆலோசனைக்கேற்ப சில திருத்தங்களுடன் இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி கையொப்பமிட்ட பின்னர், இந்த மசோதா சட்ட வடிவம் பெற்று நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #TripleTalaqBill
    Next Story
    ×