என் மலர்tooltip icon

    கதம்பம்

    • வெட்டி வேர் சிறந்த வாசனை திரவியம் தயாரிக்கும் பொருளாகவும் பயன்படுகிறது.
    • மண் அரிப்பைத் தடுக்கவும், நீரின் கடினத் தன்மையை குறைக்கவும் வெட்டிவேர் பயன்படுத்தப்படுகிறது.

    வெட்டி வேர் என்றால் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதன் பயன்கள் பற்றி பலபேருக்குத் தெரியாது.

    அந்த காலங்களில் நம்முடைய தாத்தா, பாட்டி வீடுகளில் ஒரு மண்பானையில் தண்ணீர் நிரப்பி, அதில் வெட்டி வேர், விளாமிச்சை வேர் முதலியவற்றை அந்த மண்பானையில் போட்டு தண்ணீர் குடிப்பார்கள். இதன் மூலம் உடல் சூடு குறையும் என்று அறிந்தே இந்த முறையை பின்பற்றி வந்தார்கள்.

    கோடை காலத்தில் வெட்டி வேரைக் கொண்டு செய்யப்படும் தட்டிகளை வாங்கி ஜன்னல்களில் கட்டினால் அறையின் வெப்பத்தைக் குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தரும். மேலும் அந்த தட்டிகளில் நீர் தெளித்து, அதன் மூலம் உருவாகும் வாசனை காற்றை சுவாசிப்பதால் மன அமைதி ஏற்படுகிறது.

    கோடைகாலத்தில் வெட்டிவேரை குடிநீரில் போட்டு குடித்து வந்தால் உடல் சூட்டை குறைத்து, அதிக தாகம் எடுப்பதை தடுக்கும்.

    வெட்டி வேர், விலாமிச்சை வேர், பாசிப்பயிறு, சந்தனம் இவற்றை பொடியாக்கி பன்னீர் அல்லது தண்ணீரில் கலந்து தடவி வந்தால் வெயில் காலத்தில் காணும் வேர்க்குரு மறையும்.

    சிலருக்கு தோள்பட்டை மற்றும் முதுகுப் புறங்களில் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில ஆண்களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும். இந்த இரு பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக வெட்டி வேரை பயன்படுத்தலாம்.

    பச்சைப்பயறு, சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து உடலுக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் இந்த பிரச்சனை குணமாகும்.

    வெட்டி வேர் சிறந்த வாசனை திரவியம் தயாரிக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. மண் அரிப்பைத் தடுக்கவும், நீரின் கடினத் தன்மையை குறைக்கவும் வெட்டிவேர் பயன்படுத்தப்படுகிறது.

    -கவி மரபு வைத்தியம்

    • மிக நீளமான பாதையில் ஓடும் இந்த ரெயில் 16 முக்கிய ஆறுகளை கடந்து 87 நகரங்கள் வழியாக செல்கிறது.
    • நேரத்தில் இது 9 மாநிலங்கள் வழியாக செல்கிறது. 59 ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படுகிறது.

    இந்தியாவில் அதிக நேரம் ஓடும் ரெயில்கள் பட்டியலில் எந்த ரெயில் முதலிடத்தில் உள்ளது என்பது தெரியுமா? விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் தான் முதல் இடத்தில் உள்ளது. திப்ருகர்-கன்னியாகுமரி இடையே இயங்கும் இந்த ரெயில், 4,234 கி.மீ. தூரத்தை 75 மணி நேரத்திற்கும் மேலாக கடக்கிறது. இந்த நேரத்தில் இது 9 மாநிலங்கள் வழியாக செல்கிறது. 59 ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படுகிறது.

    ஆனால், உலகின் மிக நீண்ட ரெயில் பயணத்தை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும் தெரியுமா? இந்தப் பயணத்தை இரண்டு நான்கு நாட்களில் முடிக்க முடியாது. இதை முடிக்க 7 நாட்கள் 20 மணி 25 நிமிடங்கள் ஆகும். உலகின் மிக நீளமான ரெயில் ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகருக்கும் வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கும் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரெயிலின் பெயர் டிரான்ஸ்-சைபீரியன் ரெயில்.

    ரஷியாவின் மாஸ்கோவில் இருந்து வட கொரியாவில் உள்ள பியாங்யாங் வரை ஓடும் இந்த ரெயில் தூரம் 10,214 கி.மீ. ஆகும். மிக நீளமான பாதையில் ஓடும் இந்த ரெயில் 16 முக்கிய ஆறுகளை கடந்து 87 நகரங்கள் வழியாக செல்கிறது. அதன் வழியில் காடும் வருகிறது. இந்த ஒரு வார காலப் பயணம் பயணிகளின் பொறுமையைச் சோதித்து பார்ப்பது மட்டுமின்றி அழகிய நிலப்பரப்புகளைக் காணும் வாய்ப்பையும் வழங்குகிறது.

    • வெப்ப அலையால் நம் உடலுக்கு நேரும் முதல் பிரச்சனை நம் உடல் சூடாகுதல்.
    • நாம் வீட்டிற்கு உள்ளேயே இருந்தாலும் வெப்ப சலனம் நம்மை கட்டாயம் பிரச்சனைக்குள்ளாக்கும்.

    தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் வெப்ப அலை மிக கொடூரமாக வீசி வருகிறது.

    இதனை எதிர்கொள்ளும் விதமாக சில மருத்துவ யோசனைகளை/ அறிவுரைகளை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

    வெப்ப அலையால் நம் உடலுக்கு நேரும் முதல் பிரச்சனை நம் உடல் சூடாகுதல்.

    உடல் சூடாவதை தடுப்பது எப்படி?

    1. தண்ணீர்பஞ்சம் இல்லாத ஊர்களில், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.

    2. தண்ணீர் பஞ்சம் நிலவும் ஊர்களில், ஒரு வேளை குளிர்ந்த நீர் குளியல் மற்றும் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கை கால் முகம் போன்றவற்றை கழுவலாம்.

    இது உடலின் உஷ்ணத்தை தணிக்க உதவும்.

    3. வெப்பத்தை உள்ளயே தக்க வைக்கும் உடைகளான கம்பளி / லினன் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும்.

    ஜீன்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது.

    பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது.

    வெப்பத்தை தக்க வைக்கும் கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது சிறந்தது.

    4. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குடை / தொப்பி எடுத்துச் செல்ல வேண்டும். முடிந்த வரை, வெயில் நம் உடல் மீது நேராக படாதவாறு பார்த்துக் கொள்வது நல்லது.

    5. வெயில் தனல் அதிகமாக இருக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை முடிந்த வரை தவிர்க்கலாம். வெளியே சென்று விளையாடுவதை காலை நேரம் மற்றும் மாலை நேரத்திற்கு தள்ளி வைக்கலாம்.

    அடுத்த நடவடிக்கை.. இதை மீறியும் சூடான நம் உடலை எப்படி குளிர் படுத்துவது என்பது.

    நாம் வீட்டிற்கு உள்ளேயே இருந்தாலும் வெப்ப சலனம் நம்மை கட்டாயம் பிரச்சனைக்குள்ளாக்கும்.

    நமது வீட்டின் ஜன்னல்களில் தண்ணீரில் முக்கிய துண்டுகளை காயப்போடலாம். இதன் மூலம் வீட்டினுள் வரும் காற்று சிறிது ஈரப்பதம் கலந்து வரும்.

    அதிகமாக உடல் சூடானால், நமது உடலில் வேர்வை அதிகமாக சுரக்கும். அந்த வேர்வை உடலை குளிர்விக்க முயற்சிக்கும். மேலும் உடலுக்குள் உள்ள உஷ்ணத்தை நமது நுரையீரல் வெளியிடும் மூச்சுக்காற்று வழி அனுப்ப முயலும்.

    இப்படி நம் உடல் அதிக நீர்ச்சத்தை உபயோகித்து குளிர்விப்பதால் ஏற்படும் பிரச்சனை நீர் சத்து குறைதல்..

    இதை எப்படி அறியலாம்?

    - நாக்கு வறண்டு போதல்

    - சிறுநீர் அடர் மஞ்சளாக செல்லுதல்

    - தசைப்பிடிப்பு

    - தலை சுற்றல்

    - கை கால் தளர்வு

    போன்ற அறிகுறிகளால் அறியலாம்

    இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?

    1. எளிதான வழி - தண்ணீரைப் பருகுவது.

    நமது சிறுநீரகங்கள் சரியாக இயங்க குறைந்தபட்சம் ஒருவரின் எடைக்கு கிலோ ஒன்றிற்கு முப்பது மில்லி லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு பருகி ஆக வேண்டும்.

    இந்த தண்ணீரின் உட்கொள்தல் அளவு அவர் செய்யும் வேலைகள் பொறுத்து அதிகமாகும்.

    பொதுவாக , 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகுவது சிறந்தது. இந்த தண்ணீரை இளநீராக, மோராக, லஸ்ஸியாக , பழச்சாறாக எப்படி வேண்டுமானாலும் பருகலாம்.

    செயற்கை குளிர்பானங்கள், ரசாயன கலர் பொடிகள் கலந்த கலவைகளை தவிர்ப்பது நல்லது.

    குளிர் நீர் பருகுவது சிறந்தது. அதிலும் ஃப்ரிட்ஜில் வைத்து கால் மணி நேரம் முதல் அரை மணி நேரத்தில் எடுத்து பருகினால் சரியான குளிர்ச்சி இருக்கும்.

    ஆற்று மணல் பரப்பி அதில் நீர் ஊற்றி அதன் மீது வைத்தமண்பானையில் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை ஊற்றி குளிர்வித்து குடிப்பது சிறந்தது.

    மிக அதிகமான குளிர்ச்சி தரும் நீரை பருகுவது தொண்டைக்கு கேடு விளைவிக்கும்.

    ஹை அலர்ட் தேவைப்படுவோர்..

    1. குழந்தைகள்

    2. முதியோர்கள்

    3. நீரிழிவு / ரத்த கொதிப்பு நோயாளிகள்

    4.கர்ப்பிணிகள்

    5. வெயிலில் நின்று வேலை செய்யும் தொழிலாளிகள்

    6. அதிகமாக பயணம் செய்பவர்கள்.

    -டாக்டர் .ஃபரூக் அப்துல்லா

    • வி்க்டொரியா மகாராணி தன் அரண்மனையை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
    • எத்தனையோ விஞ்ஞானிகள் முயன்றும் கம்பியில்லா தந்தி முறையை கண்டுபிடிக்க முடியாமல் தோல்வியை கண்டார்கள்.

    விக்டோரியா மகாராணியின் மகன் கடலில் பாய் மரப்படகில் பயிற்சி எடுத்து கொண்டு இருந்தார். தன் மகனிடம் அடிக்கடி பேச வேண்டும் என்று மகாராணி விரும்பினார். அதனால் கம்பியில்லாமல் தந்தி முறையை கண்டுபிடித்து கொடுக்க யாரால் முடியும்? என தேடினார்.

    "என்னால் முடியும்" என்று முன் வந்தார் இளம் விஞ்ஞானி மார்க்கோனி. ராணியின் எதி்ர்பார்ப்புக்கு மேல் பாதி வேலையை முடித்தார் மார்க்கோனி.

    ஒருநாள் தன் ஆராய்ச்சி கூடத்தை வி்ட்டு வெளியே வாக்கிங் வந்தார். அந்த நேரத்தில் வி்க்டொரியா மகாராணி தன் அரண்மனையை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

    குட்மானிங் என்று அரசிக்கு மரியாதை செலுத்தினார் மார்கோனி. அதை சரியாக கவனி்க்காத விக்டோரியா மகாராணி, விஞ்ஞானிக்கு பதில் மரியாதை செலுத்தாமல் சென்று விட்டார்.

    வேண்டும் என்றே நம்மை அவமானப்படுத்திவி்ட்டார் மகாராணி என்று எண்ணிய விஞ்ஞானி மார்க்கோனி, கம்பியில்லா தந்திமுறை கண்டுபிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    "சாதாரண வி்ஞ்ஞானியாக இருப்பவனுக்கு இவ்வளவு திமிரா? சரி போகட்டும் விடுங்கள்.. வேறு யாராவது ஒரு விஞ்ஞானியை நியமித்து மீதி வேலையை முடியுங்கள்" என்று உத்தரவிட்டார் மகாராணி.

    எத்தனையோ விஞ்ஞானிகள் முயன்றும் கம்பியில்லா தந்தி முறையை கண்டுபிடிக்க முடியாமல் தோல்வியை கண்டார்கள். இனி கௌரவம் பார்த்தால் வேலை நடக்காது என்பதை நன்கு உணர்ந்தார் மகாராணி.

    மார்கோனியின் வீட்டுக்கே நேரடியாக சென்று, "மறுபடியும் நீங்கள் எடுத்த வேலையை முடித்த தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார் விக்டோரியா மகாராணி.

    உலகத்தையே ஆளும் விக்டோரியா மகாராணியின் அன்புக்கும் பணிவுக்கும் தலைவணங்கி பாதியில் நின்ற வேலையை நல்ல முறையாக செய்து கொடு்த்தார் மார்க்கோனி.

    -பாரதி குமார்

    • அக்குவேர் செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்.
    • இரவு நேரத்திற்கும், காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.

    வழக்கத்தில் உள்ள தமிழ் வார்த்தைகளை பொருள் அறிந்து ரசிப்போமா?

    1. அந்தி, சந்தி:

    அந்தி: மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.

    சந்தி: இரவு நேரத்திற்கும், காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.

    2. அக்குவேர், ஆணிவேர்:

    அக்குவேர்: செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்.

    ஆணி வேர்: செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்.

    3. அரை குறை:

    அரை: ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.

    குறை: அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.

    4. அக்கம், பக்கம்:

    அக்கம்: தன் வீடும், தான் இருக்கும் இடமும்.

    பக்கம்: பக்தத்தில் உள்ளவீடும், பக்கத்தில் உள்ள இடமும்.

    5. அலுப்பு சலிப்பு :

    அலுப்பு: உடலில் உண்டாகும் வலி.

    சலிப்பு: உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.

    6. ஆட்டம் பாட்டம் :

    ஆட்டம்: தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது.

    பாட்டம்: ஆட்டத்திற்குப் பொருத்தமில்லாமல் பாடுவது.

    7. இசகு பிசகு:

    இசகு: தம் இயல்பு தெரிந்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுதல்.

    பிசகு: தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்.

    8. இடக்கு முடக்கு:

    இடக்கு: கேளியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்.

    முடக்கு: கடுமையாக எதிர்த்து, தடுத்துப் பேசுதல்.

    9. ஏட்டிக்குப் போட்டி :

    ஏட்டி: விரும்பும் பொருள் அல்லது செய்வது. ( ஏடம் : விருப்பம்) போட்டி : விரும்பும் பொருள், செயலுக்கு எதிராக வருவது.

    10. ஒட்டு உறவு:

    ஒட்டு: இரத்த சம்பந்தம் உடையவர்கள்.

    உறவு: கொடுக்கல் சம்பந்தமான வகையில், நெருக்கமானவர்கள்.

    11. கடை கண்ணி :

    கடை: தனித் தனியாக உள்ள வியாபார நிலையம்.

    கண்ணி: தொடர்ச்சியாக அமைந்த கடைகள், கடை வீதிகள்.

    12. கார சாரம்:

    காரம்: உறைப்பு சுவையுள்ளது.

    சாரம்: காரம் சார்ந்த சுவையுள்ளது.

    13. காடு கரை:

    காடு: மேட்டு நிலம் (முல்லை).

    கரை: வயல் நிலம்.( மருதம், நன் செய் , புன்செய்).

    14.காவும் கழனியும்:

    கா: சோலை.

    கழனி: வயல். (மருதம் ).

    15. கிண்டலும் கேலியும்:

    கிண்டல்: ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது.

    கேலி: எள்ளி நகைப்பது.

    16. குண்டக்க மண்டக்க :

    குண்டக்க: இடுப்புப்பகுதி,

    மண்டக்க: தலைப் பகுதி,

    சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது எனத் தெரியாமல் தூக்குவது,

    வீட்டில் அந்தந்தப் பொருள் அங்கங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது.

    17. கூச்சல் குழப்பம்:

    கூச்சல்: துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம். (கூ - கூவுதல்)

    குழப்பம்: துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தைக் கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்.

    18. சத்திரம் சாவடி :

    சத்திரம்: இலவசமாக சோறு போடும் இடம் ( விடுதி ).

    சாவடி: இலவசமாகத் தங்கும் இடம்.

    19.தோட்டம் துரவு , தோப்பு துரவு :

    தோட்டம்: செடி, கொடி, கீரை பயிரிடப்படும் இடம்.

    தோப்பு: கூட்டமாக இருக்கும் மரங்கள்.

    துரவு: கிணறு.

    20. நகை நட்டு:

    நகை: பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியாணம்.)

    நட்டு: சிறிய அணிகலன்கள்.

    21. நத்தம் புறம்போக்கு :

    நத்தம்: ஊருக்குப் பொதுவான மந்தை...

    புறம்போக்கு: ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்.

    22. நேரம் காலம்:

    நேரம்: ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்துக் கொள்வது.

    காலம்: ஒரு செயலைச் செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு.

    23. நொண்டி நொடம்:

    நொண்டி: காலில் அடிபட்டோ, குறையால் இருப்பவர்.

    நொடம்: கை, கால் செயலற்று இருப்பவர்.

    24. பற்று பாசம்:

    பற்று: நெருக்கமாக உறவு கொண்டுள்ளவர்கள்.

    பாசம்: பிரிவில்லாமல் மரணம் வரை சேர்ந்து இருப்பது...

    25. பழக்கம் வழக்கம்:

    பழக்கம்: ஒருவர் ஒரே செயலைப் பல காலமாகச் செய்வது.

    வழக்கம்: பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்துச் செய்வது.

    26. பட்டி தொட்டி:

    பட்டி: கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்).

    தொட்டி: மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்.

    27. பேரும் புகழும்:

    பேர்: வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு பெருமை.

    புகழ்: வாழ்விற்குப் பிறகும் நிலை பெற்றிருக்கும் பெருமை.

    28. பழி பாவம்:

    பழி: நமக்குத் தேவையில்லாத, பொருத்தமில்லாத செயலைச் செய்தால் இக்காலத்தில் உண்டாகும் அபச் சொல்.

    பாவம்: தீயவை செய்து மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி.

    29. பங்கு பாகம்:

    பங்கு: கையிருப்பு. பணம், நகை, பாத்திரம்.( அசையும் சொத்து).

    பாகம்: வீடு, நிலம். அசையாச் சொத்து.

    30. பிள்ளை குட்டி:

    பிள்ளை: பெதுவாக ஆண் குழந்தையைக் குறிக்கும்.

    குட்டி: பெண் குழந்தையைக் குறிக்கும்.

    31. வாட்டம் சாட்டம்:

    வாட்டம்: வளமான தோற்றம், வாளிப்பான உடல்.

    சாட்டம்: வளமுள்ள தோற்றம், தோற்றப்பொலிவு.

    -கீதாஞ்சலி

    • இனிப்பு சுவை தரும் சீனி / நாட்டு சர்க்கரை ஆகியவற்றில் சுக்ரோஸ் உள்ளது.
    • இன்சுலின் மிகை நிலையில் உடல் சேமித்து வைத்த கொழுப்பு எரியாமல் மேலும் சேமித்து வைக்கப்படுகிறது.

    ரத்தக் கொதிப்பு (ஹை பிரஷர்) வந்தவர்கள் குறைக்க வேண்டியது எதை? என்ற கேள்விக்கு கட்டாயம் அனைவரும் கூறும் பதிலாக "உப்பு" என்பது இருக்கும்.

    கட்டாயம் நிறுத்த வேண்டியது எதை என்று கேட்டால் பெரும்பான்மையினர் "முட்டையின் மஞ்சள் கரு", "மட்டன்" என்று கூறுவதையே காண முடியும்.

    ஆனால் ரத்தக் கொதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் கட்டாயம் நிறுத்த வேண்டியது சீனி / நாட்டு சர்க்கரை முதலில் இனிப்புகளைத் தான்.

    என்ன ? பிரஷருக்கு உப்ப தான குறைக்க சொல்லுவாங்க? நீங்க என்ன இனிப்ப நிறுத்த சொல்றீங்க?

    இனிப்பு சுவை தரும் சீனி / நாட்டு சர்க்கரை ஆகியவற்றில் சுக்ரோஸ் உள்ளது. அதில் இருந்து க்ளூகோஸ் ரத்தத்தில் கலப்பதால் கணையத்தின் "இன்சுலின்" சுரப்பைத் தூண்டிக் கொண்டே இருக்கும். எனவே ரத்தத்தில் எப்போதும் இன்சுலின் பிரவாகம் எடுக்கும். அதிகமாகவே இருக்கும். இதை "இன்சுலின் மிகை நிலை" (ஹைப்பர் இன்சுலினீமியா) என்கிறோம்.

    இன்சுலின் மிகை நிலையில் இருக்கும் போது சரியாக அதன் பணிகளை செய்யாது. இதன் விளைவாக "இன்சுலின் எதிர்ப்பு" நிலை (இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்) தோன்றுகிறது.

    இன்சுலின் மிகை நிலையில் உடல் சேமித்து வைத்த கொழுப்பு எரியாமல் மேலும் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் உடல் பருமனாகிறது.

    ட்ரைகிளசரைடுகள் கூடுகின்றன, ஊறு செய்யும் ஆக்சிடைஸ்டு எல்.டி.எல் அளவுகள் கூடுகின்றன. ரத்த நாளங்களின் உள் புற சுவர்களில் உள்காயங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

    இதன் விளைவாக ரத்த நாளங்கள் தங்களின் நெகிழ்வுத் தன்மையை இழக்கின்றன. இதன் விளைவாக ரத்த அழுத்தம் உயர்கிறது.

    கூடவே இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும் போது சிறுநீரகங்கள் தேவைக்கும் அதிகமாக சோடியம் உப்பை ரத்தத்தில் சேமிக்கும். சோடியத்துடன் சேர்த்து அதிகமான நீரும் சேமிக்கப்படும். இதன் விளைவாக ரத்த அழுத்தம் மேலும் கூடுகிறது.

    இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகள் பலவற்றிலும் இனிப்பு சுவை கொண்ட சீனி நாட்டு சர்க்கரை போன்றவற்றை உட்கொள்ளும் போது ரத்த அழுத்தம் உயர்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதன் மூலம் நாம் அறிவது யாதெனில்நீரிழிவில் மட்டுமல்ல, ரத்தக் கொதிப்பிலும் சீனி மற்றும் நாட்டு சர்க்கரையை கைவிட்டால் சிறப்பான கட்டுப்பாடு கிடைக்கும் என்பது புலப்படும்.

    இனி கூறுங்கள் ரத்தக் கொதிப்பு வந்தவர்கள் நிறுத்த வேண்டியது எதை? என்று கேட்டால் "சீனி / நாட்டு சர்க்கரை" என்று கூறுங்கள்.

    -டாக்டர் .அ.ப.ஃபரூக் அப்துல்லா

    • இமயமலைப் பகுதியில் வாழும் இந்த விலங்கை தான் வள்ளுவர் சொன்னது.
    • முடி சடை போல தொங்கக் கூடிய விலங்குதான் கவரிமா…

    "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

    உயிர்நீப்பர் மானம் வரின் "

    என்கிறார் திருவள்ளுவர் ( 969ஆம் குறளில் )

    கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும்... அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்தக் குறளுக்குக் கூறப்படும் விளக்கம்..

    ஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே? குழப்பமாக இருக்கிறது அல்லவா ? அந்தக் குறளைக் கவனமாகப் பாருங்கள்.. அதில் சொல்லப்பட்டு இருப்பது கவரி மான் அல்ல.., கவரி மா…!

    ஆம்.. கவரி மா என்று ஒரு விலங்கு இருக்கிறது.. அதைத்தான் நம் மக்கள் கவரி மான் என்று குழப்பி விட்டனர்..

    இமயமலைப் பகுதியில் வாழும் இந்த விலங்கை தான் வள்ளுவர் சொன்னது.

    முடி சடை போல தொங்கக் கூடிய விலங்குதான் கவரிமா…

    இந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம்..

    கவரி என்பதில் இருந்துதான் சவரி முடி என்ற இன்றைய சொல் உருவானது..

    மா என்பது விலங்குகளுக்கு உரிய பொதுவான சொல். சரி.. இந்தக் குறளுக்குப் பொருள் என்ன ?

    பனிப் பகுதியில் வாழும் கவரிமாவுக்கு, அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.. அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும். அதே போல சில மனிதர்கள், அவர்கள் பெருமைக்கு இழுக்கு நேர்ந்து விட்டால், அவர்கள் வாழ்வது அரியதாகி விடும்…

    எனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை.. பெரும்பாலான உரைகளும் தவறு இல்லை.. ஆனால் கவரிமா வைக் கவரிமான் எனப் புரிந்து கொள்வது தான் தவறு.

    • எகிப்தின் அரசனாக ஆனதும் ஸ்பிங்க்ஸை அவன் புதைமணலில் இருந்து மீட்டெடுத்தான்.
    • பிரமிடில் இருந்து ஒரு பாதை நேராக செல்லாமல் கோணலாக செல்வதை கண்டார்கள்.

    எகிப்தின் ஸ்பிங்க்ஸ் (Sphinx) எனும் சிங்க சிலை உலகின் மிக தொன்மையான சின்னங்களில் ஒன்று. இது கட்டபட்டு 4500 ஆண்டுகள் ஆனதாக மதிப்பிடபடுகிறது. இது எதற்காக கட்டபட்டது? சமய ரீதியிலா, எதாவது போர் வெற்றியின் சின்னமா என எதுவும் யாருக்கும் தெரியாது.

    இந்த 4500 ஆண்டுகளில் சில ஆயிரம் ஆண்டுகள் இது பாலைவன புயலில் முழுக்க மணலில் புதைந்தே இருந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி ஒரு ஸ்பிங்க்ஸ் இருப்பதே தெரியாமல் எகிப்தில் பல தலைமுறை மக்கள் வாழ்ந்து, மறைந்து இருக்கிறார்கள் என கேட்டால் வியப்பாக உள்ளது அல்லவா?

    3000 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்ஜியத்தை இழந்த இளவரசன் ஒரு மணல் மேட்டில் படுத்து தூங்குகையில், அங்கே ஸ்பிங்க்ஸ் மணலில் புதைபட்டு இருப்பதை காண்கிறான். "என் ராஜ்ஜியத்தை திரும்ப கொடுத்தால் உன்னை புணரமைப்பேன்" என்கிறான். அதேபோல் எகிப்தின் அரசனாக ஆனதும் ஸ்பிங்க்ஸை அவன் புதைமணலில் இருந்து மீட்டெடுத்தான் என்பது ஒரு தொன்மம்.

    எகிப்தின் கீஸா பிரமிடுக்கு நேர் எதிரே இது இருக்கிறது. இது இரண்டும் எப்போது கட்டபட்டது என ஒருமித்த கருத்து எதுவும் இல்லை. காரணம் இரண்டும் பாறைகளால் ஆனது. பாறைகளை கார்பன் டேட்டிங் செய்தால் அவை உருவான காலத்தை தான் காட்டும்

    அதன்பின் பிரமிடில் இருந்து ஒரு பாதை நேராக செல்லாமல் கோணலாக செல்வதை கண்டார்கள். இது இப்படி கோணலாக செல்ல காரணம், ஸ்பின்க்ஸ் அருகே செல்லதான் என்கிறார்கள். ஸ்பிங்க்ஸ் கட்டியபின் பிரமிடை கட்டியதால் இப்படி பாதை செல்கிறது என்றார்கள். ஆனால் இதுவும் ஒரு யூகம் தான்

    பண்டைய ரெகார்டுகளை வைத்து ஸ்பிங்கஸ் அமைக்கப்பட்ட ஆண்டு கிமு 2530 எனவும், கிரேட் பிரமிடு அமைக்கபட்ட ஆண்டு கிமு 2560 எனவும் கணக்கிடுகிறார்கள். காப்ரே மற்றும் குபு என தந்தை மகன் என இரு மன்னர்கள் கட்டி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

    பிரமிடுகள் இன்று வெறும் கல்வடிவமாக இருந்தாலும் அவை கட்டபட்ட போது அவற்றின் மேல் சுண்ணாம்புக்கல் வைத்து பூசியும், கூரையில் பொன்வேய்ந்தும் தக, தக என மின்னின. பாலைவன மணலில் பல மைல் தொலைவில் இருந்தும் கண்கூசும் வெண்மை நிறத்துடன் காட்சியளித்தன.

    - நியாண்டர் செல்வன்

    • என் நாணயத்தைக் குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை மிகச் சரியானது.
    • என் திறமை குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை தவறானது.

    ஜி.டி.நாயுடு ஒருதரம் சிட்டிசன் வாட்ச் கம்பெனிக்குப் போயிருந்தாராம்.

    உள்ளே போகிறவர்களை எல்லாம் யாரு, என்ன படிப்புத் தகுதி என்றெல்லாம் கேட்டு சிற்சில இடங்களைப் பார்க்க அனுமதி மறுத்து விடுவது அந்தக் கம்பெனியின் வழக்கமாக இருந்தது.

    நாயுடுவுக்கு எந்தத் தடையும் சொல்லாமல் எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்று சொல்லி விட்டார்களாம்.

    ஏன் என்று கேட்டதற்கு எங்கள் தொழிற் நுட்பம் காப்பி அடிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் இத்தனை கட்டுப்பாடுகள்.

    உங்கள் படிப்புத் தகுதிக்கு நீங்கள் அப்படி எதுவும் செய்து விட மாட்டீர்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆகவே எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்றார்களாம்.

    நாயுடு எதுவும் பேசவில்லை. அமைதியாகச் சுற்றிப் பார்த்து விட்டு வந்து விட்டார்.

    இந்தியா வந்த பிறகு, சில நாட்களில் அசல் சிட்டிசன் வாட்ச் போலவே இருக்கும் ஒரு வாட்சை தயாரித்து சிட்டிசன் கம்பெனி நிர்வாகத்துக்கு அனுப்பினாராம்.

    அத்துடன் அவர் அனுப்பியிருந்தகடிதத்தில்,"என் நாணயத்தைக் குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை மிகச் சரியானது. ஆனால் என் திறமை குறித்து நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை தவறானது என்பதை சுட்டிக் காட்ட உங்கள் முதல் நம்பிக்கையை உடைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதற்கு வருந்துகிறேன்."

    என்று குறிப்பிட்டு இருந்தாராம்.

    -சிவபிரகாஷ்

    • குருவே, என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.
    • குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.

    நம் அன்றாடும் வாழும் வாழ்க்கையில் ஏற்படும் விரக்திகளுக்கு மூலகாரணம் பேராசையும், அது நிறைவேறாமல் போனால் ஏற்படும் ஏமாற்றமும், துயரமும் தான் காரணம்..

    இதில் சிக்காமல் இருப்பதற்கு ஒரே வழி நம்மிடம் என்ன உள்ளதோ அதை வைத்து திருப்தி அடைவதே சாலச் சிறந்தது..

    குருவிடம் வந்தான் ஒருவன்.

    ''குருவே, என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு'' என்றான் வந்தவன்.

    ''அப்படியா?''

    ''ஆமாம் குருவே. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப ஆனந்தமாக இருக்கான். எந்தக் கவலையுமில்லாம இருக்கான். எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல.''

    குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.

    ''இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கிறது. இதை உன் பக்கத்து வீட்டுக்காரன் வாசலில் போடு. அதன் பிறகு என்ன நடக்கிறது என்று சொல்'' என்றார்.

    குரு சொன்னபடியே செய்தான் வந்தவன். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான்.

    ''குருவே, அவன் நிம்மதியே போச்சு.''

    ''அப்படியா, ஏன்? அவனுக்குத் தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்குமே...''

    ''அதான் பிரச்னையே. விடியற்காலையில் அவன் வீட்டு வாசலில் காசுகளைப் போட்டு விட்டேன். எழுந்து வந்து பார்த்த அவன், தங்கக் காசுகளைப் பார்த்ததும் குஷியாகி விட்டான்.

    ஆனால், ஒன்பது காசுகள் தான் இருப்பதைப் பார்த்ததும், கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான்.

    வீட்டில் தேடினான். தெருவில் தேடினான். போகிற வருகிறவர்களிடமெல்லாம் கேட்டான். இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.''

    ''இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும் புரிகிறதா?'' என்றார் குரு.

    இருப்பதை வைத்து திருப்தி கொள்வதும், இல்லாதை நினைத்து வருத்தப்படாமல் வாழும் மனம் உடையவர்களே உண்மையில் பணக்காரர்கள்.

    ஆம்., 'கிடைப்பதில் மகிழ்ச்சி அடையுங்கள். இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும்.."

    -மனோகர் ராஜா

    • இரவு உணவாக இரண்டு வாழைப் பழம் தேன் கலந்து உண்டு, காய்ச்சிய பசும்பால் குடிக்கலாம்.
    • காலை உணவில் இஞ்சி, பூண்டு, மல்லித்தழைசேர்த்தரைத்த துவையல் உண்ணலாம் நல்ல பலன் கிடைக்கும்.

    மாதவிடாயின் போது பெண்களுக்கு கொஞ்சம் வயிற்று வலி இருக்கும், சிலருக்கு வலி கொஞ்சம் அதிகமா இருக்கும். இந்த பிரச்சனை உள்ளவங்க அடிக்கடி உணவில் புதினா சட்னி சேத்துக்கறது நல்லது.புதினா ஜுஸ் கூட குடிக்கலாம்.

    சிலர் சூதக வலியால் ரொம்ப கஷ்ட படுவாங்க, அவங்க இளநீரில் சிறிது தேன் கலந்து குடித்து வரலாம்.

    சிலருக்கு உரிய காலத்தில் மாதவிடாய் ஆகாது, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்று ஆவதால் ரொம்ப கஷ்டப்படுவாங்க, இதற்கு மாதவிடாய் ஆகவேண்டிய ஆறு நாட்கள் காலை வெறும் வயிற்றில் வல்லாரை கீரை, வேலிப்பருத்தியிலை சம அளவு எடுத்து அரைத்து ஒரு கோலிக்கா அளவு உண்பது நலம்,இதை ஒழுங்குக்கு உட்பட்டு வரும் வரை தொடரலாம்.

    மாத விலக்கின் போது அந்த மூன்று நாட்களுக்கு பெரும் துன்பமா இருக்கும், இவங்க அந்த மூன்று நாட்களுக்கு முன்னரே மூன்று நாட்கள் இரவு உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது,

    இரவு உணவாக இரண்டு வாழைப் பழம் தேன் கலந்து உண்டு, காய்ச்சிய பசும்பால் குடிக்கலாம்.

    காலை உணவில் இஞ்சி, பூண்டு, மல்லித்தழைசேர்த்தரைத்த துவையல் உண்ணலாம் நல்ல பலன் கிடைக்கும்.

    சிலருக்கு 20 நாட்களுக்கு ஒருமுறை வெளியாகும், பின்னர் திடீரென மருமாதம் மாதவிடாய் வெளியாகாமல் நின்றும் விடும், இப்படி ஆகும் போது வலி ரொம்ப அதிகமாகி கஷ்டம் கொடுக்கும், சில சமயங்களில் அதிக அளவில் வெளியாகியும் கஷ்டம் கொடுக்கும், சாதாரணமாக வெளியேராமல் கட்டி, கட்டியா வெளியேறியும், துன்பம் கொடுக்கும்,

    இவங்களுக்கு துளசி ஒரு நல்ல மருந்து, 1/4கிளாஸ் துளசி சாறுடன் 1ஸ்பூன் தேன் கலந்து, ஒரு மண்டலம் குடிக்க வேண்டும், நிவர்த்தியாகும். இதனால் இரத்த சுத்தி ஏற்பட்டு வயிறு, இருதயம், வலிமையாகும்.

    சிலருக்கு சரியான நாட்களில் மாத விலக்கு ஆனாலும் கூட அது சரிவர வெளியாவதில்லை, சிலருக்கு அதிக அளவில் வெளியாகி அடி வயிற்றில் வலியை உண்டாக்கி களைப்பாக்கி விடும்,

    இதற்கு தினம் காலை,மாலை, பிரண்டை உப்பை, வெண்ணையுடன் உண்டுவர நல்ல பலன் கிடைக்கும்.

    பொதுவாகவே மாதவிடாய் பிரச்சினைகளுக்கு, விதையுள்ள கருப்பு திராட்சைப் பழம் மாமருந்து. மாதவிலக்கு ஆகவேண்டிய நாளுக்கு ஒரு வாரம் முன்பிருந்தே திராட்சைப் பழங்களை கொஞ்சம் கூடுதலாக உண்டு வரவேண்டும்,

    40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக மாதவிடாய் கோளாறு களைப் போக்கிட திராட்சைப் பழங் களை உட்கொள்வது நலம்.

    -கவி மரபு வைத்தியம்

    • ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவது போல் கனவு கண்டால் செல்வந்தரின் தொடர்பு ஏற்படும்.
    • எண்ணெய் தேய்த்துக் கொள்வது போல் கனவு கண்டால் உடல் வலிமை குறையும் என்பதைக் குறிக்கிறது.

    நாம் கண்ட கனவுகளும் அதன் பலன்களும்..

    அழகிய பதுமையை(பெண்) கனவில் காண்பது வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படுவதை குறிக்கிறது.

    அறிமுகமில்லாதவர்கள் மற்றும் புதிய நபர்களை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

    அணைக்கட்டில் நீர் வழிந்தோடுவது போல் கனவு வருவது வரவுக்கு மீறிய செலவு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

    அணை உடைவது போல் கனவு கண்டால் நெருங்கிய நண்பர்களிடமிருந்து பிரிந்து செல்லுதல் மற்றும் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறிக்கிறது.

    ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவது போல் கனவு கண்டால் செல்வந்தரின் தொடர்பு ஏற்படும்.

    அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் உண்டாகும்.

    அரிசி நிறைந்த கூடையை கனவில் காணுதல் நன்மை உண்டாகும்.

    அணிகலன்கள் வாங்குவது போல் கனவு வந்தால் இன்பம் பயக்கும்.

    ஆலயத்தை கனவில் கண்டால் இறைவனின் அருளால் நமக்கு கூடிய விரைவில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.

    ஆடுகளைக் கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

    இனிமையான பாடலை கேட்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

    இருளைக் காண்பது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

    இறந்தவர்களை கனவில் கண்டால் சுபச்செய்தி வரும் என்பதைக் குறிக்கிறது.

    கனவில் உடை எரிவதுபோல் கண்டால் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் பூப் பெய்துவார்கள். பொருள் இழப்பு ஏற்படலாம்.

    உணவு உண்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

    உப்பளத்தை கனவில் கண்டால் விருந்துக்குப் போகப் போகிறோம் என்பதைக் குறிக்கிறது.

    எண்ணெய் தேய்த்துக் கொள்வது போல் கனவு கண்டால் உடல் வலிமை குறையும் என்பதைக் குறிக்கிறது.

    எறும்பு ஊறுவதை கனவில் கண்டால் பதவி உயர்வு உண்டாகும்.

    ஏணியின் மேலே ஏறுவது போல் கனவு கண்டால் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

    ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதை குறிக்கிறது.

    கங்கை நதியை கனவில் கண்டால் துன்பம் அனைத்தும் விலகும் என்பதைக் குறிக்கிறது.

    கடற்கரையில் இருப்பது போல் கனவு கண்டால் வாழ்வில் உயர்வு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

    கல்யாணம் நடப்பது போல் கனவு கண்டால் வியாதியால் துன்பம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

    கனிகளை கனவில் காண்பது மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

    காவல்காரர்களை காண்பது போல் கனவு வந்தால் சாதகமற்ற நிலையை உண்டாக்கும்.

    கிழவியை காணுவது போல் கனவு வந்தால் தனப் பெருக்கம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

    -தேவி பி.கண்ணன்

    ×