search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    ரத்தக்கொதிப்புக்கு எதை தவிர்க்க வேண்டும்?
    X

    ரத்தக்கொதிப்புக்கு எதை தவிர்க்க வேண்டும்?

    • இனிப்பு சுவை தரும் சீனி / நாட்டு சர்க்கரை ஆகியவற்றில் சுக்ரோஸ் உள்ளது.
    • இன்சுலின் மிகை நிலையில் உடல் சேமித்து வைத்த கொழுப்பு எரியாமல் மேலும் சேமித்து வைக்கப்படுகிறது.

    ரத்தக் கொதிப்பு (ஹை பிரஷர்) வந்தவர்கள் குறைக்க வேண்டியது எதை? என்ற கேள்விக்கு கட்டாயம் அனைவரும் கூறும் பதிலாக "உப்பு" என்பது இருக்கும்.

    கட்டாயம் நிறுத்த வேண்டியது எதை என்று கேட்டால் பெரும்பான்மையினர் "முட்டையின் மஞ்சள் கரு", "மட்டன்" என்று கூறுவதையே காண முடியும்.

    ஆனால் ரத்தக் கொதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் கட்டாயம் நிறுத்த வேண்டியது சீனி / நாட்டு சர்க்கரை முதலில் இனிப்புகளைத் தான்.

    என்ன ? பிரஷருக்கு உப்ப தான குறைக்க சொல்லுவாங்க? நீங்க என்ன இனிப்ப நிறுத்த சொல்றீங்க?

    இனிப்பு சுவை தரும் சீனி / நாட்டு சர்க்கரை ஆகியவற்றில் சுக்ரோஸ் உள்ளது. அதில் இருந்து க்ளூகோஸ் ரத்தத்தில் கலப்பதால் கணையத்தின் "இன்சுலின்" சுரப்பைத் தூண்டிக் கொண்டே இருக்கும். எனவே ரத்தத்தில் எப்போதும் இன்சுலின் பிரவாகம் எடுக்கும். அதிகமாகவே இருக்கும். இதை "இன்சுலின் மிகை நிலை" (ஹைப்பர் இன்சுலினீமியா) என்கிறோம்.

    இன்சுலின் மிகை நிலையில் இருக்கும் போது சரியாக அதன் பணிகளை செய்யாது. இதன் விளைவாக "இன்சுலின் எதிர்ப்பு" நிலை (இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்) தோன்றுகிறது.

    இன்சுலின் மிகை நிலையில் உடல் சேமித்து வைத்த கொழுப்பு எரியாமல் மேலும் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் உடல் பருமனாகிறது.

    ட்ரைகிளசரைடுகள் கூடுகின்றன, ஊறு செய்யும் ஆக்சிடைஸ்டு எல்.டி.எல் அளவுகள் கூடுகின்றன. ரத்த நாளங்களின் உள் புற சுவர்களில் உள்காயங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

    இதன் விளைவாக ரத்த நாளங்கள் தங்களின் நெகிழ்வுத் தன்மையை இழக்கின்றன. இதன் விளைவாக ரத்த அழுத்தம் உயர்கிறது.

    கூடவே இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும் போது சிறுநீரகங்கள் தேவைக்கும் அதிகமாக சோடியம் உப்பை ரத்தத்தில் சேமிக்கும். சோடியத்துடன் சேர்த்து அதிகமான நீரும் சேமிக்கப்படும். இதன் விளைவாக ரத்த அழுத்தம் மேலும் கூடுகிறது.

    இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகள் பலவற்றிலும் இனிப்பு சுவை கொண்ட சீனி நாட்டு சர்க்கரை போன்றவற்றை உட்கொள்ளும் போது ரத்த அழுத்தம் உயர்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதன் மூலம் நாம் அறிவது யாதெனில்நீரிழிவில் மட்டுமல்ல, ரத்தக் கொதிப்பிலும் சீனி மற்றும் நாட்டு சர்க்கரையை கைவிட்டால் சிறப்பான கட்டுப்பாடு கிடைக்கும் என்பது புலப்படும்.

    இனி கூறுங்கள் ரத்தக் கொதிப்பு வந்தவர்கள் நிறுத்த வேண்டியது எதை? என்று கேட்டால் "சீனி / நாட்டு சர்க்கரை" என்று கூறுங்கள்.

    -டாக்டர் .அ.ப.ஃபரூக் அப்துல்லா

    Next Story
    ×