என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை
- அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 22 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
- இரவு தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பிற்பகலில் திடீரென வானில் மேக கூட்டங்கள் திரண்டன. மாநகரின் எல்லை பகுதிகளில் பேட்டை, பழையபேட்டை, ராமையன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக பேட்டை பகுதியில் சுமார் 1 மணி நேரமாக கனமழை கொட்டியது. பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரி பகுதிகளில் கனமழையால் நான்கு வழிச்சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடந்தது.
மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 13.60 மில்லிமீட்டர் மழை பெய்தது.
மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் அங்கு கனமழை பெய்தது. அதிகபட்ச மாக ஊத்து எஸ்டேட்டில் 45 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 40 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் வரை வெயில் வாட்டிய நிலையில் பாவூர்சத்தி ரம், புளியங்குடி, தென்காசி சுற்றுவட்டாரங்களில் மாலையில் பரவலாக மழை பெய்தது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
அங்கு பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ராயகிரி, உள்ளார், தளவாய்புரம், விஸ்வநாதபேரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான கிராமங்களில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்று காலை நிலவரப்படி தமிழகத்திலேயே அதிகபட்சமாக சிவகிரியில் 11 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பாநதி அணை நீர்பிடிப்பு பகுதியில் 32 மில்லிமீட்டரும், அடவி நயினார் அணையில் 16 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரத்தில் கனமழையும், வைப்பார், சூரன்குடி, மணியாச்சி சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 22 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டம், கடம்பூர், எட்டயபுரம் பகுதி களில் சாரல் மழை பெய்தது.






