என் மலர்tooltip icon

    வேலூர்

    குடியாத்தத்தில் கவுண்டன்ய மகாநதி ஆற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் நடுவே செல்லும் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் இருபக்க கரையில் நெல்லூர்பேட்டை பாவோடும்தோப்பு, என்.எஸ். கே.நகர், நாராயணசாமி தோப்பு, கோபாலபுரம் ஆற்றோரம், காமராஜர் பாலம் ஆற்றோரம், சுண்ணாம்பு பேட்டை ஆற்றோரம், பச்சையம்மன் கோவில்உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்தது. 

    முதற்கட்டமாக குடியாத்தம் காமராஜர் பாலம் பகுதியில் ஆற்றோரம் இருந்த வீடுகளும், பச்சையம்மன் கோவில் பகுதியில் இருந்த வீடுகளும், கெங்கையம்மன் கோவில் ஆற்றோரம் இருந்த வீடுகளும் என சுமார் 400க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன.

    அதன் பின்னர் கோபலபுரம் ஆற்றோரம், நாராயண சுவாமி தோப்பு, என்.எஸ்.கே.நகர் என சுமார் ஆயிரம் வீடுகள் அகற்றப்பட்டுள்ளது.

    தற்போது நெல்லூர்பேட்டை பாவோடும் தோப்பு பகுதி மட்டும் அகற்றப்படாமல் உள்ளது அங்கும் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. 

    இப்பகுதியிலும் வீடுகளை இடிக்க அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். அதனை இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வாங்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் அந்த நோட்டீசை பதாகைகளாக மாற்றி அப்பகுதியில் கட்டினர்.

    இப்பகுதி பொதுமக்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இப்பகுதியில் வசித்து வந்த மக்கள் பெரும்பாலும் ஏழை நடுத்தரவர்க்க கூலித் தொழிலாளர்கள் இவர்களுக்கு மாற்று இடம் வழங்கிய பின்னரே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இங்கு வசித்து வந்த மக்கள் நிர்க்கதியாக உள்ளனர்.

    இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் நெசவு உள்ளிட்ட கூலித் தொழிலாளர்கள், இவர்களுக்கு மாற்று இடமும் வழங்கி அதில் வீடு கட்டிக் கொடுத்த பின்னரே ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற வேண்டும்.

    இங்கு வசிக்கும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஏழை எளிய மக்களுக்கு உடனடியாக வாடகை வீடுகள் கிடைக்காததாலும் இங்கு வசிப்பவர்கள் வாழ்வாதாரம் நெசவுத் தொழில், மற்றும் கூலி தொழில்களை நம்பி உள்ளதாகவும் அவர்களுக்கு மாற்று இடமும் மாற்று தொழில் ஏற்பாடு செய்து தரவேண்டும்.

    இங்கு வசிப்பவர்கள் பிள்ளைகளின் கல்வியும் கேள்விக்குறியாக உள்ளதால் உடனடியாக மாற்று இடம் அதில் வீடு கட்ட அனைத்து நடவடிக்கைகள் எடுத்த பின்னரே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

    இருப்பினும் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது 3 மாதங்களாகியும் இதுவரை அங்கு குடியிருந்தவர்களுக்கு மாற்று இடமும், வீட்டுமனைப்பட்டா அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கும் மாற்று ஏற்பாடு எதுவும் இதுநாள்வரை செய்து தரவில்லை.

    இங்கு வசிப்பவர்கள் குடியிருக்க வீடு கிடைக்காமல் மிகவும் திணறி வருகின்றனர் 1,000 முதல் 1,500 ரூபாய் வாடகை இருந்த வீடுகள் தற்போது 5 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும் கூலி வேலை கிடைக்காத நிலையில் சம்பாதிக்கும் பணம் வாடகைக்கு செல்வதாகவும் அந்த வீடுகளில் போதுமான வசதி இல்லை என்றும் பெரும்பாலானோர் கூறுகின்றனர்.

    3 மாதங்களாகியும் வீட்டு மனை அல்லது வீடு வழங்கவில்லை எனவும் தமிழக முதல்வரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    வாழ்வாதாரம் இழந்து நடுத்தெருவில் நிற்பதாக கண்ணீர் மல்க கூறினார்கள்.

    விரைவில் தமிழக அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு கருணை அடிப்படையில் செவிமடுத்து உடனடியாக வீட்டு மனையும் அதில் வீடு கட்டித் தரவேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
    அரசு பஸ்சில் வந்த ஆம்பூர் பயணி திடீரென பரிதாபமாக இறந்தார்.
    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் புதுச்சேரியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 47).இவர் நேற்று மாலை ஓசூரில் இருந்து ஆம்பூருக்கு அரசு பஸ்சில் வந்தார். 

    ஆம்பூர் பஸ் நிலையத்தில் பஸ் நின்றும் கோவிந்தராஜ் இறங்கவில்லை ஆம்பூரை தாண்டி சிறிது தூரம் பஸ் வந்ததும் கோவிந்தராஜ் பஸ்சிலிருந்து இறங்காததை கண்டு சந்தேகமடைந்த பஸ் கண்டக்டர் அருகில் சென்று பார்த்தார். கோவிந்தராஜ் மயங்கிய நிலையில் இருந்தார்.

    இதையடுத்து கண்டக்டர், பயணிகள் உதவியுடன் கோவிந்தராஜை பள்ளிகொண்டா பஸ் நிறுத்தத்தில் கீழே இறக்கி படுக்க வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

    கோவிந்தராஜ் நீண்ட நேரமாக எழுந்திருக்காததால் அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பரிசோதனை செய்தனர்.

    பரிசோதனையில் கோவிந்தராஜ் ஏற்கனவே மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜ் மாரடைப்பால் இறந்தாரா அல்லது விஷம் குடித்து தற்கொலை செய்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காட்பாடி அருகே குடிநீர் தொட்டியில் எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
    வேலூர்:

    காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 20.). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். 

    இவர் குடிபோதையில் ஊரில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. யாரிடமும் தகராறு செய்ய வேண்டாம் என விக்னேசிடம் அவரது பெற்றோர் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு விக்னேஷ்க்கும் அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் விரக்தி அடைந்த விக்னேஷ் வண்டறந்தாங்கல் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி தூணில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் விக்னேஷ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து காட்பாடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூரில் சாலை பாதுகாப்பு வாரவிழா ஹெல்மெட் அணியாதவர்கள் காதில் பூ வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    வேலூர்:

    வேலூரில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஜூனியர் ரெட் கிராஸ் வேலூரில் பாரத சாரண சாரணியர் நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய மாணவர் படை மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி சென்றனர். 
    வேலூர் கோட்டை முன்பு பேரணியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார் பா.கார்த்திகேயன், மேயர் சுஜாதா, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

    பேரணி வேலூர் காந்தி சிலை அருகில் இருந்து தொடங்கியது. அண்ணா சாலை மக்கள் சந்திப்பு பழைய பஸ் நிலையம் ராஜா தியேட்டர் வழியாக வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியை அடைந்தது.

    இந்த பேரணியில் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி ஊரிசு மேல்நிலைப்பள்ளி செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி ஈவேரா நாகம்மையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கெடுத்தனர்.

    பேரணியின் இடையே ஹெல்மெட் அணிந்து வரவேண்டும் என்பதை வலியுறுத்தி ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ரோஜாப்பூ வழங்கி ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அவர்கள் காதிலே ரோஜா பூவை வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

    வேலூர் மாநகர நல அலுவலர் டாக்டர் மணிவண்ணன் பேரணியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.மோகன் ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ்.சிவவடிவு உள்பட பலர் பங்கேற்றனர்.
    பரோலை ரத்து செய்து ஜாமீனில் வருவதற்காக பேரறிவாளன் புழல் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
    வேலூர்:

    முன்னாள்  பிரதமர்ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  பேரறிவாளன் 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். 

    கடந்த மே மாதம் 28-ந்தேதி முதல் தற்போது வரை பேரறிவாளன் சுமார்9 மாத காலமாக பரோல் வழங்கப்பட்டு வீட்டிலேயே தங்கியுள்ளார். 

    மேலும், பேரறிவாளன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் விடுதலைக் கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது. 

    முதல்-அமைச்சருக்கு பேரறிவாளனின் தாயார்ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். 

    இந்த நிலையில், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 
    புழல் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.
     
    பரோலில் வெளியே வந்த பேரறிவாளன் கடந்த 11-ந் தேதி பரோலை ரத்து செய்ய  புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஜாமீன் வழங்கப்பட்ட ஆணை ஜெயிலுக்கு வராததால் அவர்வீட்டிற்கு திரும்பி வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் பேரறிவாளனை டி.எஸ்.பி மணிமாறன் தலைமையிலான போலீசார்புழல் ஜெயிலுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

    புழல் சிறையில்  பரோலை ரத்து செய்த பின் பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வருவார்என  தெரிவித்தனர்.
    குடியாத்தம் அருகே குட்டையில் பெண் சிசு பிணம் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த டி.டி.மோட்டூர் கிராமத்தில்  ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி அருகே தண்ணீர் குட்டை உள்ளது. 

    அந்த குட்டை பகுதியில் இருந்து இன்று காலையில் துர்நாற்றம் வீசியது. மேலும் நாய்கள் சுற்றி வந்துள்ளன. இதனை கண்ட கிராம மக்கள் தண்ணீர் குட்டை அருகே சென்று பார்த்தனர். 

    அங்கு பெண் சிசு பிணம் ஒன்று இறந்த நிலையில் கிடந்ததது.

    அந்த குழந்தை பிறந்து ஒரு நாள் ஆகியிருக்கலாம்.
    அழுகிய நிலையில் சிசு உடல் உள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். 

    சிசுவின் உடலை பார்த்து பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக பேரணாம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம் அருகே பள்ளியில் ஏற்பட்ட மோதலில் 9-ம் வகுப்பு மாணவனை சக மாணவன் பிளேடால் வெட்டினார்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளனர்.

    இதில் இளைய மகனுக்கு 14 வயதாகிறது. அதேபகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் நேற்று அதே பள்ளியில் படிக்கும் சக மாணவர்களுடன் இந்த மாணவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது சக மாணவர்கள் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர். இந்நிலையில் மாணவன் இன்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு வந்தார். பள்ளியில் புத்தக பையை வைத்து விட்டு பென்சில் வாங்குவதற்காக அருகே உள்ள பெட்டிக் கடைக்கு சென்றுள்ளார். 

    அப்போது நேற்று தகராறில் ஈடுபட்ட சக வகுப்பு மாணவன் கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவரை வலது மற்றும் இடது பக்க மார்பு, கை மற்றும் முதுகுப் பகுதியில் சரமாரியாக பிளேடால் வெட்டி உள்ளார். இதில் பள்ளி சீருடை முழுவதும் ரத்தகறையானது.

    உடனடியாக அங்கிருந்த சக மாணவர்கள் கிராம மக்கள் ஆசிரியர்கள் படுகாயமடைந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது குறித்து  பரதராமி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் அருகே உள்ள பொய்கை மாட்டுச் சந்தையில் வியாபாரம் களைகட்டியது.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பொய்கை கிராமத்தில் செயல் படும் வாரச்சந்தையில் மாடுகள் விற்பனைக்கு மிகவும் பிரபலமானது. 

    ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தினத்தில் நடைபெறும் சந்தையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சித்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடுகளை விற்கவும், வாங்கவும் விவசாயிகளும் வியாபாரிகளும் வந்து செல்கின்றனர்.

    இங்கு மாடுகள் மட்டுமின்றி கோழி விற்பனையும் காய்கறி, மாடுகளுக்கான கயிறுகள் உள்ளிட்டவை விற்பனையும் அதிகமாக நடைபெறும்.

    பொய்கை சந்தைக்கு நேற்று இரவே வெளியூர்களில் இருந்து ஏராளமான மாடுகளை விவசாயிகள் வாகனங்களில் கொண்டு வந்து இறக்கினர். 

    இதேபோல அதிகளவில் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சந்தை முழுவதும் இன்று மாடுகள் வரத்து அதிகரிப்பால் நிரம்பி வழிந்தது. வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது.

    இதனால் பொய்கை வாரச்சந்தையில் இன்று காலை முதலே வியாபாரம் களைகட்டியது.
    விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள விரிஞ்சிபுரம் ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் இன்று நடந்தது.

    வேலூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் முக்கிய மானதும், பிரம்மாவுக்கு சாபவி மோசனம் அளித்த திருத்தலமானதுமான விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. அன்று மாலை விநாயகர் வீதிஉலா நடைபெற்றது.

    தொடர்ந்து 9-ந் தேதி பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், 10-ந்தேதி சந்திரசேகரர் அம்மன் வீதி உலா நடைபெற்றது. 13-ந் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 

    இன்று காலை விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் தேரோட்டம் நடந்தது. 

    2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடந்ததால்பரவசம் அடைந்த பக்தர்கள் ஓம் நமசிவாய, அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    வேலூர், குடியாத்தம், பள்ளிகொண்டா உள்ளிட்ட ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 

    தேர் திருவிழாவை யொட்டி விரிஞ்சிபுரத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    முருகன் காலையில் உணவு சாப்பிடவில்லை. ஆனால் அவர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முறைப்படி மனு எதுவும் அளிக்கவில்லை என சிறைத் துறையினர் தெரிவித்தனர்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது பரோலில் வெளியே வந்துள்ள அவர் காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.

    இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் பரோலில் வெளியே வந்தார்.தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    முருகன் பரோல் கேட்டு சட்டபோராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை.

    இதனால் விரக்தியடைந்த அவர் இன்று காலை உணவு சாப்பிட மறுத்தார். பரோல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    முருகன் காலையில் உணவு சாப்பிடவில்லை. ஆனால் அவர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முறைப்படி மனு எதுவும் அளிக்கவில்லை என சிறைத் துறையினர் தெரிவித்தனர்.

    காப்பகத்தில் உள்ள மாணவிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் பாலியல் தொந்தரவு தந்தால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
    வேலூர்:

    காட்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பெற்றோரை இழந்த இவர் சோளிங்கரில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்.

    தனியார் காப்பகத்தை நடத்தி வந்தவரின் மகன் கார்த்திக் (வயது 28). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

    காப்பகத்தை கண்காணிப்பதாக கூறி கார்த்திக் அடிக்கடி அங்கு வந்து சென்றார். அப்போது காட்பாடி மாணவியின் மீது அவரது பார்வை விழுந்தது.

    காப்பகத்திற்கு வரும் கார்த்திக் மாணவியிடம் அடிக்கடி பேச்சு கொடுத்தார்.

    அவரை நம்பிய மாணவியும் பேசத் தொடங்கினார். இந்த நிலையில் கார்த்திக் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூற ஆரம்பித்தார். மேலும் பாலியல் தொல்லை கொடுக்கத் தொடங்கினார்.

    ஒரு கட்டத்தில் மாணவியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தார்.2 முறை மாணவியை ஏமாற்றி பலாத்காரம் செய்தார்.

    இந்த நிலையில் நிர்வாக பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோளிங்கர் தனியார் காப்பகம் மூடப்பட்டது. இதனால் மாணவி காட்பாடியில் உள்ள விடுதிக்கு மாறி வந்தார்.அந்த விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கார்த்திக் மாணவியை தேடி காட்பாடியில் உள்ள காப்பகத்திற்கு வந்தார். இதனை காட்பாடியில் உள்ள காப்பக நிர்வாகிகள் கவனித்தனர். மாணவியை தனியாக அழைத்துச் சென்று கார்த்திக் பற்றி விசாரித்தனர்.

    அப்போது கார்த்திக் தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தாக கண்ணீர் மல்க மாணவி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த காப்பக நிர்வாகிகள் இதுகுறித்து காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் இது தொடர்பாக கார்த்திக்கை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் மாணவியை ஏமாற்றி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காப்பகத்தில் உள்ள மாணவிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பாலியல் தொந்தரவு தந்தால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
    காட்பாடியில் நீச்சல் குளம், தடகள போட்டிகள் நடத்தும் வசதியுடன் கூடிய பல்நோக்கு விளையாட்டு மைதானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சியில் திறந்து வைத்தார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு அரங்கம் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. 

    வேலூர் இன்பென்டரி சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் 1975-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நேதாஜி ஸ்டேடியம் மாவட்ட விளையாட்டு மைதானமாக செயல்பட்டு வந்தது.

    அதுவும் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஆயுதப்படை மைதானமாக பயன்பாட்டில் உள்ளது. இதனால் விளையாட்டு மைதானம் இல்லாத மாவட்டமாக வேலூர் மாவட்டம் விளங்கியது.

    இதனால் விளையாட்டு வீரர்கள், பல்வேறு போட்டி களில் தங்களது திறமையை வெளிக்காட்டமுடியாமல் தவித்து வந்தனர்.

    மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விளையாட்டு வீரர்கள் மத்தியில் எழுந்தது. 

    இதையடுத்து வேலூரில் காட்பாடி, ஓட்டேரி, விருதம்பட்டு ஆகிய இடங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு சில காரணங் களுக்காக கைவிடப்பட்டது. 

    இதையடுத்து பல ஆண்டுகள் கழித்து வேலூர் அடுத்த ஊசூரில் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்படுவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டது. 

    அதற்கேற்ப ஊசூரில் விளையாட்டு மைதானம் அமைவதற்கான அரசாணையும் வெளியானது. அதற்காக ரூ.16.45 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்க இருந்த நிலையில், விளையாட்டு மைதானத் திற்கான கட்டுமான பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதற்கிடையில், காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான 36.68 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க இறுதிமுடிவு செய்தனர்.  அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. 

    இதற்காக ஏற்கனவே வெளியான அரசாணை ரத்து செய்யப்பட்டதுடன், அதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.16.45 கோடி நிதியில் காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்த மான 36.68 ஏக்கர் நிலத்தில் மாவட்ட விளையாட்டு மைதானத் திற்கான கட்டுமான பணிகள் தொடங்கின.

    கடந்த ஆண்டு இந்த விளையாட்டும் மைதானத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.19 கோடியே 24 லட்சமாக உயர்த்தப்பட்டது.

    இந்த விளையாட்டு மைதானத்தில் 46 ஆயிரத்து 737 சதுர அடியில் பார்வையாளர் மாடம் மற்றும் நிர்வாக அலுவலகம் பல்வேறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

    நிர்வாக அலுவலக கட்டிடத்தின் தரைதளத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் அலுவலகம் உடற்பயிற்சி அறை ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கும் அறை, சமையல் அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

    முதல் தளத்தில் 1500 பேர் அமரக்கூடிய மேற்கூரையுடன் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாற்று திறனாளிகளுக்கு தனி இட வசதி உள்ளது.

    கூடைபந்து, ஹாக்கி, கோ, கோ, கபடி, இறகுபந்து, நீச்சல்குளம், கால்பந்து, 400 மீட்டர் தடகள பாதை, அதோடு இரவு நேரத்திலும் விளையாட்டு போட்டிகள் நடத்தும் வகையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

    இதர வசதிகளாக பார்க்கிங் வசதி இணைப்புச் சாலை கழிவறை வசதிகளும் உள்ளன. பல்நோக்கு விளையாட்டு வளாகமாக இந்த மைதானம் அமைக்கப் பட்டுள்ளது. 

    தமிழகத்தில் பெரிய விளையாட்டு மைதானங் களில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது.

    இந்த விளையாட்டு மைதானத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    காட்பாடியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி மைதானத்தை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பயிற்சி கலெக்டர் ஐஸ்வர்யா, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    ×