என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் என்.எஸ்.கே. நகரில் இடிக்கப்பட்ட வீடுகள்
குடியாத்தத்தில் கவுண்டன்ய மகாநதி ஆற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
குடியாத்தத்தில் கவுண்டன்ய மகாநதி ஆற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் நடுவே செல்லும் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் இருபக்க கரையில் நெல்லூர்பேட்டை பாவோடும்தோப்பு, என்.எஸ். கே.நகர், நாராயணசாமி தோப்பு, கோபாலபுரம் ஆற்றோரம், காமராஜர் பாலம் ஆற்றோரம், சுண்ணாம்பு பேட்டை ஆற்றோரம், பச்சையம்மன் கோவில்உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்தது.
முதற்கட்டமாக குடியாத்தம் காமராஜர் பாலம் பகுதியில் ஆற்றோரம் இருந்த வீடுகளும், பச்சையம்மன் கோவில் பகுதியில் இருந்த வீடுகளும், கெங்கையம்மன் கோவில் ஆற்றோரம் இருந்த வீடுகளும் என சுமார் 400க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன.
அதன் பின்னர் கோபலபுரம் ஆற்றோரம், நாராயண சுவாமி தோப்பு, என்.எஸ்.கே.நகர் என சுமார் ஆயிரம் வீடுகள் அகற்றப்பட்டுள்ளது.
தற்போது நெல்லூர்பேட்டை பாவோடும் தோப்பு பகுதி மட்டும் அகற்றப்படாமல் உள்ளது அங்கும் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதியிலும் வீடுகளை இடிக்க அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். அதனை இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வாங்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் அந்த நோட்டீசை பதாகைகளாக மாற்றி அப்பகுதியில் கட்டினர்.
இப்பகுதி பொதுமக்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
இப்பகுதியில் வசித்து வந்த மக்கள் பெரும்பாலும் ஏழை நடுத்தரவர்க்க கூலித் தொழிலாளர்கள் இவர்களுக்கு மாற்று இடம் வழங்கிய பின்னரே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இங்கு வசித்து வந்த மக்கள் நிர்க்கதியாக உள்ளனர்.
இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் நெசவு உள்ளிட்ட கூலித் தொழிலாளர்கள், இவர்களுக்கு மாற்று இடமும் வழங்கி அதில் வீடு கட்டிக் கொடுத்த பின்னரே ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற வேண்டும்.
இங்கு வசிக்கும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஏழை எளிய மக்களுக்கு உடனடியாக வாடகை வீடுகள் கிடைக்காததாலும் இங்கு வசிப்பவர்கள் வாழ்வாதாரம் நெசவுத் தொழில், மற்றும் கூலி தொழில்களை நம்பி உள்ளதாகவும் அவர்களுக்கு மாற்று இடமும் மாற்று தொழில் ஏற்பாடு செய்து தரவேண்டும்.
இங்கு வசிப்பவர்கள் பிள்ளைகளின் கல்வியும் கேள்விக்குறியாக உள்ளதால் உடனடியாக மாற்று இடம் அதில் வீடு கட்ட அனைத்து நடவடிக்கைகள் எடுத்த பின்னரே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
இருப்பினும் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது 3 மாதங்களாகியும் இதுவரை அங்கு குடியிருந்தவர்களுக்கு மாற்று இடமும், வீட்டுமனைப்பட்டா அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கும் மாற்று ஏற்பாடு எதுவும் இதுநாள்வரை செய்து தரவில்லை.
இங்கு வசிப்பவர்கள் குடியிருக்க வீடு கிடைக்காமல் மிகவும் திணறி வருகின்றனர் 1,000 முதல் 1,500 ரூபாய் வாடகை இருந்த வீடுகள் தற்போது 5 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும் கூலி வேலை கிடைக்காத நிலையில் சம்பாதிக்கும் பணம் வாடகைக்கு செல்வதாகவும் அந்த வீடுகளில் போதுமான வசதி இல்லை என்றும் பெரும்பாலானோர் கூறுகின்றனர்.
3 மாதங்களாகியும் வீட்டு மனை அல்லது வீடு வழங்கவில்லை எனவும் தமிழக முதல்வரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
வாழ்வாதாரம் இழந்து நடுத்தெருவில் நிற்பதாக கண்ணீர் மல்க கூறினார்கள்.
விரைவில் தமிழக அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு கருணை அடிப்படையில் செவிமடுத்து உடனடியாக வீட்டு மனையும் அதில் வீடு கட்டித் தரவேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
Next Story






