என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் பள்ளியில் கத்தியுடன் புகுந்து சிறுவர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாநகர பகுதியில் உள்ள சிறுவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் அவர்கள் எல்லை மீறி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    கடந்த சில நாட்களாக சேண்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் கஞ்சா போதையில் சிறுவர்கள் ரகளை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சேண்பாக்கத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த 100&க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். 

    கடந்த சில நாட்களாக அந்த பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுவர்கள் சிலர் பள்ளி வளாகத்தில் கற்கள், முட்டை, தக்காளி உள்ளிட்டவற்றை வீசியும், பள்ளி மாணவர்களை கேலி, கிண்டல் செய்தும் வந்துள்ளனர். இதனைக்கண்ட பள்ளி ஆசிரியர்கள் அந்த சிறுவர்களை கண்டித்துள்ளனர். 

    இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி வளாகத்துக்குள் 3 சிறுவர்கள் புகுந்து திடீரென கத்தியை காட்டி மாணவர்களை மிரட்டி உள்ளனர். அதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பின்னர் சுதாரித்து 3 பேரையும் மடக்கி பிடித்தனர். இதற்கிடையே அந்த வழியாக ரோந்து வந்த வேலூர் வடக்கு போலீசாரிடம் 3 சிறுவர்களும் ஒப்படைக்கப்பட்டனர். 

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த 12,14,15 வயதுடைய சிறுவர்கள் என்பதும் 3 பேரும் மது, கஞ்சா போதையில் கத்தியை காட்டி மிரட்டி தகராறு செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணா மலை மாவட்டங்களில் கஞ்சா, கள்ளச்சாராயம், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல், இளைஞர்களையும், ஏழை மாணவர்களையும் குறிவைத்து விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

    குறிப்பாக தமிழக& ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டத்திற்கு, ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு, வேலூர், மாவட்டத்தில் சிறு, சிறு பொட்டலங்களில் அடைத்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர். 

    போதை பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்கள், பள்ளிப்படிப்பையும் பாதியில் நிறுத்திவிட்டு, தீய பழக்க வழக்கங்களில் ஈடுபடத் தொடங்கி விடுகின்றனர். மாநகர பகுதியில் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் பள்ளி பகுதியில் வெளியே இருந்து வரும் சிறுவர்கள் ரவுடிசம் செய்வதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. 

    இதில் தனி கவனம் செலுத்தி பள்ளிகளில் ரகளையில் ஈடுபடும் அவர்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்கள் மீது எந்தவித பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    போதை பொருட்கள் பயன்பாடு குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:- 

    வீட்டில் பெரியவர்கள், இளம் பருவத்தினரிடம், நேரம் ஒதுக்கி அவர்களுடன் பழக வேண்டும். 

    அவர்கள் தீய பழகத்திற்கு அடிமையாகி இருந்தாலும், அவர்களை மீட்க முடியும். போதை பொருட்கள் குறித்து போதிய அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

    அதோடு போதை பொருட்கள் கடத்தலை தடுக்க அதிரடி சோதனை நடத்த வேண்டும். அதில் தொடர்புடையவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    குடியாத்தத்தில் காரில் வந்து பைக்கை திருடும் கும்பலை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் மற்றும் கடைகள், வணிக வளாகங்கள் முன்னே நிறுத்தி வைக்கப்படும் 3 சக்கர வாகனங்கள் திருட்டுப் போகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    வாகன உரிமையாளர்கள் இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.

    குடியாத்தம் செதுக்கரை ஆர்.எஸ்.ரோடு திருமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் வயது 27 தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார்.

    நேற்று காலையில் வீட்டிற்கு வெளியே பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் காணாத கண்டு சந்தோஷ் அதிர்ச்சியடைந்தார் உடனடியாக அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்த்தபோது காரில் வந்த ஒரு கும்பல் இறங்கி சர்வசாதாரணமாக வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை திருடி செல்வது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து சந்தோஷ் அப்பகுதியில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் குறித்து விசாரித்த போது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் உள்ளது என கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் மோட்டார் சைக்கிள் திருடு போன சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒரு சில நாட்களிலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டு திருடப்பட்ட முழு நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த திருட்டை கண்டுபிடிக்க முக்கிய காரணமாக இருந்தது கண்காணிப்பு கேமராக்கள் தான்.

    குடியாத்தம் பகுதியில் நகை கடை வியாபாரிகள், வர்த்தகர்கள், வணிகர் சங்கத்தினர், பல்வேறு தொண்டு அமைப்புகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நிதி நிறுவனத்தினர் என அனைத்து தரப்பில் இருந்தும் சுமார் ரூ.20 லட்ச ரூபாய் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க குடியாத்தம் நகர போலீசாரிடம் அளித்தனர். 

    போலீசாரும் குடியாத்தத்தில் முக்கியமான பகுதிகளில் சுமார் 90 க்கும் மேற்பட்ட இடங்களில் மிகவும் உயர்ரக கண்காணிப்பு கேமராக்களை அமைத்தனர்.

    ஆனால் தற்போது சில மாதங்களாக ஒரு சுமார் 20 க்கும் குறைவாகவே கண்காணிப்பு கேமராக்கள் இயங்குவதாகவும் முக்கியமான இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்குவது இல்லை எனவும் இதனால் இரண்டு சக்கர மற்றும் முக்கிய திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு சாதகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த கண்காணிப்பு கேமரா செயல்படாத பிரச்சினைகள் குறித்து இப்பகுதி பொதுமக்கள் உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை நடவடிக்கை இல்லை என ஆதங்கப்பட்டனர்.
    வேலூர் சத்துவாச்சாரியில் விவசாயிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    வேலூர் பெருமுகையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 41). விவசாயி. இவர் நேற்று பெருமுகை ஆதிதிராவிடர் அரசு பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென வெங்கடேசனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி வெங்கடேசன் பாக்கெட்டில் வைத்திருந்த 500 ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட வேலூர் ஆர்.எஸ். நகரை சேர்ந்த தனுஷ் (19) வேலூர் சூரியகுளம் பகுதியை சேர்ந்த அலி (26) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பங்குனி உத்திரத்தையொட்டி முருகர் கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
    வேலூர்:

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி இன்று முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.

    வள்ளிமலை முருகன் கோவிலில் இன்று காலை சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது.ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ரத்தினகிரி பாலமுருகன் கோவிவில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் மலை அடிவாரத்தில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர் சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவில், பேரி பேட்டை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

    சத்துவாச்சாரியில் உள்ள முருகன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது.

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இன்று மாலை பங்குனி உத்திரத்தையொட்டி ஜலகண்டேஸ்வரர், அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
    வேலூர் சத்துவாச்சாரியில் பாலாற்றங்கரையில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்த கண்டக்டர் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி மடம் தெருவை சேர்ந்தவர் புரட்சி வேந்தன் (வயது 61). அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கடந்த சில மாதங்களாக சர்க்கரை நோய் மற்றும் பிபி இருந்து வந்ததால் அதற்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார். 

    இந்த வயதிலேயே தனக்கு நோய் வந்துவிட்டது என்று புலம்பியவாறு அதற்கு மாத்திரை சாப்பிட்டு தானாக பேசி வந்துள்ளார்.

    கடந்த ஒரு வாரமாக மாத்திரை சாப்பிடாமல் இருந்துள்ளார்.

    நேற்று முன்தினம் காலை வாக்கிங் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இந்த நிலையில் சத்துவாச்சாரி கணபதி நகர் அருகே பாலாற்றங்கரையில் உள்ள கிணற்றில் புரட்சி வேந்தன் பிணமாக மிதந்தார்.

    சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். புரட்சி வேந்தனுக்கு கலா என்ற மனைவியும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
    வேலூரில் பரபரப்பை ஏற்படுத்திய சூர்யா, ஜி.ஜி. ரமேஷ் கொலையில் கைதான 8 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச் சாரியை சேர்ந்தவர் சூர்யா என்கிற சுரேஷ்குமார் (வயது 37), ரியல் எஸ்டேட் அதிபர். வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அலுவலகம் அமைத்து தொழில் நடத்தி வந்தார்.

    கடந்த 2010-ம் ஆண்டு இவரின் அலுவலகத்துக்குள் ரவுடி கும்பல் புகுந்தது. அங்கிருந்த சூர்யாவின் முகத்தில் ரவுடி கும்பல் மிளகாய் பொடி தூவி, கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது.

    இந்த கொலை குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த கொலை வழக்கில் சைதாப்பேட்டையைச் சேர்ந்த சரத் என்கிற சரத்குமார் (33), தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் (36), குப்பன் என்கிற சதீஷ்குமார் (35), சசிகுமார் (33), சீனிவாசன் (36), பாலாஜி (37), ரவுடி மகா என்கிற மகாலிங்கம் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதேபோல், வேலு£ர் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலரான ஜி.ஜி.ரவியின் தம்பி ஜி.ஜி.ரமேஷ் (46), பைனான்சியர். இவரை 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆற்காடு ரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இதுகுறித்து வேலு£ர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாவின் கூட்டாளிகளான தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த குப்பன் என்கிற சதீஷ் குமார் (35), சசிகுமார் (33), வெங்கடேசன் (39), நாகராஜ் (எ) முசல் நாகராஜ் (39), கேரளாவைச் சேர்ந்த ரகு (50) சைதாப்பேட்டையைச் சேர்ந்த சரத்குமார் (33) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சூர்யா, ஜி.ஜி. ரமேஷ் ரவுடிகளால் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் வேலு£ரில் இன்றளவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

    இந்த இரு கொலை வழக்கின் விசாரணைகள் மாவட்ட கூடுதல் அமர்வு விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. 

    இந்நிலையில், இந்த வழக்குகளின் விசாரணைக்கு இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு சூர்யா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி மகா (எ) மகாலிங்கம் கொலை செய்யப்பட்டார். அதன் காரணமாக அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    இதேபோல், ஜி.ஜி. ரமேஷ் கொலை வழக்கு குற்றவாளியான வெங்கசேடன் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இறந்தார். அதனால், அவர் அந்த வழக்கில் இருந்து விடுக்கப்பட்டார்.

    இந்நிலையில், இந்த இரு வழக்குகளும் நேற்று நீதிபதி ரேவதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

    வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே, அரசு தரப்பில் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
    வேலூர் மேம்பால சுவர்களில் கண்ணை கவரும் ஓவியம் வரையும் பணி தொடங்கியுள்ளது.
    வேலூர்

    வேலூர் மாநகரின் வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளதால் அலுமேலுமங்காபுரம், வள்ளலார், சத்துவாச்சாரி, கலெக்டர் அலுவலகம், கிரீன் சர்க்கிள், ரெயில்வே மேம்பாலம், மற்றும் சிறிய மேம்பாலம், சேண்பாக்கம் மற்றும் கொணவட்டம் மேம்பாலங்கள் உள்ளன.

    இந்த மேம்பால பக்கவாட்டு சுவர்களில் எப்போதும் விளம்பர போஸ்டர்கள், அரசியல் கட்சியினரின் பிறந்த நாள், நினைவு நாள் போஸ்டரை அச்சிட்டு வருகின்றனர். 

    அவ்வப்போது போஸ் டர்களை அகற்றினாலும் மீண்டும் அங்கு போஸ்டர் ஒட்டுவது நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு மாற்று தீர்வாக 6 முக்கிய மேம்பாலங்களின் பக்கவாட்டு சுவர்களில் அழகிய ஓவியங்களை வரைந்து அழகுபடுத்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட் டுள்ளார்.

    வேலூர் நகரம் புதுப்பொலிவு பெறும் வகையில் மாவட்டத்தின் பெருமையையும் அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடையவும், யார் மனதையும் புன்படுத்தாத வகையில் ஓவியங்கள் வரையபடுகிறது.

    வேலூர் சத்துவாச் சாரியில் உள்ள மேம்பாலத்தில் இன்று இயற்கைக் காட்சியுடன் ஓவியங்கள் வரையும் பணி தொடங்கியது. மற்ற பாலங்களிலும் ஓவியங்கள் வரையப்படுகின்றன. இதன்மூலம் வேலூரில் உள்ள மேம்பால பகுதிகள் அழகாக மாறி வருகின்றன.

    இந்த ஓவியங்கள் மீது எந்தவிதமான போஸ்டர்களை ஒட்டக்கூடாது என தெரிவித்துள்ளனர். மேலும் வேலூர் மாநகர பகுதியில் உள்ள மேம்பாலம் சுவர்களில் விளம்பரங்கள் எழுதுவது நோட்டீஸ் ஓட்ட தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

    இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
    வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்களுக்கான 2 நாள் பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. 

    பயிற்சி வகுப்பை வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, வின்செண்ட்ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த பயிற்சி வகுப்பில் கிராம ஊராட்சியை சேர்ந்த 51 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு வார்டு உறுப்பினரின் கடமைகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், கூட்டங்கள் எவ்வாறு நடத்த வேண்டும், ஆவணங்கள் சரி பார்த்தல், திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது.

    இந்த பயிற்சி அடுத்த வாரமும் நடைபெற உள்ளது.
    காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    காட்பாடி ரெயில் வே மேம்பாலத்தில் ஓடுத்தளத்தின் இணைப்புகள் வலுவிழந்துள்ளன. அதனை சீர் செய்ய ரெயில்வே நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.நாளை முதல் ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்குகிறது. 

    இதனால் முதற்கட்டமாக ரெயில்வே மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காட்பாடியில் இருந்து சித்தூர் திருப்பதி செல்லும் கனரக வாகனங்களுக்கு மாற்றுப்பாதை அறிவிக்கப் பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காட்பாடி ரெயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிகள் நடப்பதால் நாளை 18&ந் தேதி முதல் கனரக வாகனங்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    வேலு£ர் மாவட்ட அனுமதிச்சீட்டு பெற்ற சரக்கு வாகனங்கள் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் திரும்பி வி.ஐ.டி.வழியாக இ.பி. கூட்டுரோடு, சேர்க்காடு வழியாக சித்து£ர் செல்ல வேண்டும்.

    தென் மாவட்டங் களிலிருந்து திருவண்ணா மலை வழியாக சித்தூர் செல்லும் சரக்கு வாகனங்கள் போளூர், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சேர்காடு வழியாக சித்து£ர் செல்ல வேண்டும்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக சித்தூர் செல்லும் சரக்கு வாகனங்கள் பள்ளிகொண்டா, குடியாத்தம் வழியாக சித்து£ர் செல்ல வேண்டும்.

    சித்தூரிலிருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் வேலு£ர் மாவட்ட அனுமதி பெற்ற சரக்கு வாகனங்கள் மட்டும் சேர்காடு வழியாக, இ.பி.. கூட்டுரோடு, வி.ஐ.டி. வழியாக வேலூருக்குள் வர வேண்டும்.

    தென் மாவட்டங் களிலிருந்து சித்தூர் செல்லும் வாகனங்கள் சேர்காடு, ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை வழியாக செல்ல வேண்டும்.

    சித்தூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சரக்கு வாகனங்கள் குடியாத்தம், பள்ளிகொண்டா வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செல்லவும் மாற்று வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ரெயில்வே மேம்பாலத் தில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு சீரமைப்பு பணிகள் நடக்கிறது.

    முதற்கட்டமாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பஸ் மற்றும் ஆட்டோ கார் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம் போல் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    மேம்பாலத்தில் பணிகள் முழுமையாக நடைபெறும்போது பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்படும்.

    பஸ் போக்குவரத்தில் மாற்றம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் மீது கிரேன் மோதியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    வேலூர்:

    பரதராமியில் இருந்து இன்று காலை வேலூருக்கு அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது.பஸ்சில் பயணிகள் ஏராளமானோர் இருந்தனர். 

    காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சிக்னலில் காலை 8.30 மணிக்கு டவுன் பஸ் வந்து நின்றது. அப்போது பெரிய கிரேன் வாகனம் ஒன்று விஐ.டி.சாலை நோக்கி திரும்பியது.

    திடீரென கிரேனின் முன்பக்ககம்பி சிக்னலில் நின்ற அரசு டவுன் பஸ் மீது உரசியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இந்த விபத்தால் சித்தூர் பஸ் நிறுத்தத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து வேலூர் நோக்கி வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதனால் பயணிகள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.

    காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய கிரேன் மற்றும் அரசு டவுன் பஸ்சை அப்புறப்படுத்திய பிறகு அங்கு போக்குவரத்து சீரானது. இன்று காலை ஏற்பட்ட இந்த திடீர் விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூரில் 101 டிகிரி கொளுத்திய வெயிலால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூரில் நேற்று வெயில் சதமடித்தது. இந்த ஆண்டின் முதல் சதம் நேற்று பதிவானது.

    101 டிகிரி வெயில் தமிழகத்தில் வெயில் அதிகம் பதிவாகும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் முன்னணியில் உள்ளது. 

    ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதியில் கொளுத்த தொடங்கும் வெயில் ஆகஸ்டு மாதம் வரை வாட்டி வதைக்கும். அதன்படி, இந்த ஆண்டின் வெயில் தாக்கம் கடந்த மாதமே அதிகரிக்க தொடங்கியது. பிப்ரவரி 15-ம் தேதிக்கு பிறகு வெயில் அளவு படிப்படியாக உயர தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் தொடக்கத்தில் 90 டிகிரியை கடந்தது. மார்ச் 11-ம் தேதி 95 டிகிரியாக பதிவானது. அதற்கு அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து வந்த வெயில் அளவு நேற்று முன்தினம் 99 டிகிரியாக பதிவானது.

    இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கே கொளுத்த தொட ங்கிய வெயில் அளவு பகல் 1 மணிக்கு உச்சத்தை தொட்டது.

    சென் னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். வெயில் அளவு அதிகரிக்க தொடங்கியதால் பகலில் மக்கள் நடமாட்டம் குறைய தொடங்கி சாலைகள் வெறிச்சோடி காணப் பட்டன. பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் இரவில் புழுக்கம் அதிகரித்துள்ளது.

    வெயில் காலம் தொடங்கியதால் வேலூர் மாவட்டத்தில் ஆங் காங்கே பழச்சாறுக்கடைகள், கரும்புச்சாறு, கேழ்வரகு கூழ், தர்பூசணி, முலாம்பழம் போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    வேலூரில் வெயில் அளவு 101.1 டிகிரியாக பதிவாகி இந்த ஆண்டில் முதல் சதத்தை நேற்று எட்டியது. வேலூரில் குளிரை அடித்து தூக்கிய வெயில் இனி வரும் நாட்களில் 100 டிகிரியை தாண்டியே வெயில் கொளுத்தும் என்பதால் பொதுமக்கள் அச்ச மடைந்துள்ளனர்.
    வேலூர் அருகே தாலி கட்டிய சில மணி நேரத்திலேயே இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இவருக்கு அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் உறவு முறை சரியில்லை என்பதால் பெற்றோர்கள் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்து பேசி முடித்தனர்.

    கடந்த 14-ந் தேதி காலை இளம்பெண்ணுக்கும் நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் அங்குள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதனையடுத்து மணமக்கள் பெண் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

    அங்கிருந்த இளம்பெண் வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியே சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை.

    பல்வேறு இடங்களில் தேடியும் இளம்பெண்ணை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    தாலி கட்டிய சில மணி நேரத்திலேயே இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×