என் மலர்tooltip icon

    வேலூர்

    • வேலூர் ஜெயிலில் அடிக்கடி உண்ணாவிரத போராட்டத்தில் முருகன் ஈடுபட்டு வருகிறார்.
    • முருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அடிக்கடி உண்ணாவிரத போராட்டத்தில் முருகன் ஈடுபட்டு வருகிறார்.

    கடந்த மாதம் தன் மீது உள்ள வழக்கு ஒன்றை விரைந்து முடிக்க கோரி முருகன் உண்ணாவிரதம் இருந்தார்.

    இதனால் முருகனின் உடல்நிலை மோசமாகி உள்ளது. நேற்று ஜெயிலில் இருந்த முருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனைதொடர்ந்து அவரை ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முருகனுக்கு 4 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. தொடர்ந்து முருகன் உடல் நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    • பொன்னை ஒரு பெரிய ஊராட்சி இவற்றை சுற்றி 20 கிராமங்கள் உள்ளன.
    • தமிழகத்தில் மருந்து தட்டுபாடு அரசு மருத்துவமனைகளில் கிடையாது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பொன்னையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அங்கு பணியில் இருந்த மருந்தாளுநரிடம் பாம்பு கடிக்கு மருந்து எடுத்துவர கூறினர். பாம்பு கடிக்கு மருந்தில்லை ஆரம்ப சுகாதார நிலையம் பழுதடைந்திருந்தது. இங்கிருந்த எக்ஸ்ரே கருவி சோளிங்கர் அருகேயுள்ள கொடைக்கல்லுக்கு எடுத்து செல்லப்பட்டதாக கூறினார்கள். மேலும் பணியாளர்கள் சரியாக வேலைக்கு வருவதில்லை என தெரியவந்தது. இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டிப்புடன் எச்சரிக்கை விடுத்தார்.

    அப்போது அமைச்சர் துரைமுருகன் தவறு செய்பவர்களை கன்னியாகுமரிக்கு மாற்றுங்கள். அப்போதுதான் ஒழுங்காக பணியாற்றுவார்கள் என ஆவேசமாக கூறினார்.இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

    பொன்னை ஒரு பெரிய ஊராட்சி இவற்றை சுற்றி 20 கிராமங்கள் உள்ளன. பொன்னை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையை நம்பிதான் அனைத்து பொதுமக்களும் உள்ளனர்.இது போன்ற மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்காகவும், தரம் உயர்த்துவதற்காகவும் அடிப்படை வசதிகளை செய்து தர ஆய்வு செய்யப்பட்டது என்றார்.

    அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பொன்னை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து இங்கு மருத்துவ அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர் ஆகிய பணியிடங்களில் பணிபுரிபவரை மாற்றுவதற்கு தகுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உடனடியாக இங்கு நிரந்தரமான மருந்தாளுநரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதுமட்டுமல்லாமல் டிஜிட்டல் எக்ஸ்ரே பல் மருத்துவத்திற்கு தேவையான ஒரு மருத்துவர் போன்ற நியமனங்களை உடனடியாக அமைந்து ஒரு தகுதி வாய்ந்த மருத்துவமனையாக அமைக்கப்படும்.

    பொன்னையில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனையாக உள்ளது. 2017-ல் கூடுதல் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கட்டிடத்தில் இதுவரை குடிநீர் வசதியும், சரியான மின்வசதியும் கொடுக்கப்படாத நிலையில் இருந்து உள்ளது. தற்போது. கலெக்டர் குடிநீர் வசதி செய்து தந்துள்ளார். மின்வசதிக்காக இரண்டு நாட்களில் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொன்னை மருத்துவமனையில் பாழடைந்து உள்ள கட்டிடங்களை இடித்து விட்டு வரும் நிதியாண்டில் புதிய கட்டிடங்களை கட்டுவதற்கான திட்ட மதிப்பீடுகளை தயாரித்து அரசுக்கு அனுப்ப தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் புதியதாக மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், பெரம்பலூர்.தென்காசி, போன்ற இடங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க தொடர் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் மருந்து தட்டுபாடு அரசு மருத்துவமனைகளில் கிடையாது.38 மாவட்டங்களிலும் அரசு மருந்து கிடங்குகள் உள்ளது. மருந்துகள் இல்லாத இடத்தில் 104 என்ற இலவச எண்ணிற்கு அழைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • ஆயுத பூஜையையொட்டி வாரவிடுமுறை ரத்து
    • மது அருந்திவிட்டு வர தடை

    வேலூர்:

    வேலூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமிர்தி வன உயிரியல் பூங்கா. ஜவ்வாதுமலைத் தொடரில் சிறிய விலங்குகள் சரணாலயமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், குள்ளநரிகள், குரங்குகள், சிவப்புத் தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப் பாம்புகள் உள்ளன.

    அடர்ந்து வளர்ந்த மரங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களை ரசிக்கலாம். அழகான நீர்வீழ்ச்சியும் உள்ளது.

    மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். மலையேற்றத்திலிருந்து, நீர்வீழ்ச்சியைக் காணலாம். நீர்வீழ்ச்சியில் குளிக்க இப்போது அனுமதியில்லை. புதை மணல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

    செவ்வாய்க்கிழமை மட்டும், அமிர்தி பூங்காவுக்கு விடுமுறை. அன்று ஒரு நாள், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. ஞாயிறு உட்பட மற்ற அனைத்து நாட்களும், பூங்காவில் பொழுதைக் கழிக்கலாம்.

    விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமையான நாளை ஆயுத பூஜையை ஒட்டி பூங்கா திறந்திருக்கும். பெரியவர்களுக்கு ரூ.10 சிறுவர்களுக்கு 5 இருசக்கர வாகனங்களுக்கு ரூ.25 கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்குரூ.50 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நாளை வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் அமிர்திக்கு வந்து செல்லலாம் பூங்காவிற்குள் பிளாஸ்டிக் உணவு பொருட்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது பூங்காவிற்கு வெளியே உணவு சாப்பிட தனியாக அறைகள் உள்ளன. மது அருந்திவிட்டு பூங்காவிற்கு வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • உலக மக்கள் நன்மைக்காக நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீ திருப்பதி விநாயகர் கோவிலில் உலக மக்கள் நன்மைக்காக ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் மற்றும் ஜப யக்ஞம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயண மண்டலிகள் சார்பில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயண மண்டலி தலைவர் வி. கணபதி தலைமை தாங்கினார். பொருளாளர் ஜி.விஜயராகவன் அனைவரையும் வரவேற்று பேசினார். செயலாளர் வி.சுப்பிரமணியன் நிதி நிலை குறித்து பேசி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    கோவிலில் சுப்ரபாதம், விக்னேஷ்வரர் பூஜை, ஸங்கல்பம், 12 ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயண ஆவர்த்திகள், ஜப யக்ஞம், புஷ்பாஞ்சலி, ஸ்ரீ கோவிந்த நாம நாமாவளி, மந்திர புஷ்பம் மற்றும் ஆரத்தி ஆகிய நிகழ்ச்சிகளை வைதீக முறைப்படி மண்டலி குழுவினர் செய்திருந்தனர்.

    செயற்குழு கூட்டத்தில் ஸ்ரீ திருப்பதி விநாயகர் கோவில் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள், காந்திநகர் கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    முடிவில் மகளிரணி உறுப்பினர் சுகந்தி ராமமூர்த்தி நன்றி கூறினார். 

    • மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படுகிறது. இத்தினத்தன்று தொழிலாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு பொரி, பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள். ஆயுத பூஜையில் பொரி, பழங்கள், சர்க்கரை, இனிப்புகள் வைத்தும், வாழை மரக்கன்றுகள் கட்டியும் பூமாலை அணிவித்தும், பூசணிக்காய் உடைத்தும் வழிபடுவார்கள்.

    இதற்காக பொதுமக்கள் ஆயுத பூஜைக்கு தேவையான பூ, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக இன்று பஜாருக்கு வந்திருந்தனர்.

    வேலூர் மண்டித்தெருவில் ஆயுத பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    ஆயுத பூஜையையொட்டி வேலூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

    இன்று வேலூர் மார்க்கெட்டில் மல்லிகை, முல்லைப் பூக்கள் கிலோ ரூ.600, காக்கடா ரூ.500, ஜாதி ரூ.300,சாமந்தி ரூ.400, ரோஜா ரூ.300,கேந்தி ரூ.100 க்கு விற்பனையானது. மழை காரணமாக ஆந்திரா கர்நாடக மாநிலங்களில் இருந்து வேலூர் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. அந்த மாநிலங்களிலும் பூக்கள் விலை அதிகரித்து உள்ளதால் வேலூரில் பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் பூசணிக்காய் ஒரு கிலோ ரூ.20-க்கும் வாழை மரக்கன்றுகள் ஜோடி ரூ.50 முதல் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல பொரி விற்பனையும் களைகட்டியது. ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, கொய்யா போன்ற பழங்களின் விலையும் சற்று உயர்ந்து காணப்பட்டது.

    ஆயுதபூஜையை முன்னிட்டு பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் ஊழியர்கள் இன்று பூஜை செய்தனர். மேலும் அரசு வாகனங்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களை நடக்காமல் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • குடியாத்தம் குளிதிகை ஊராட்சியில் நடந்தது
    • அமலு விஜயன் எம்.எல்.ஏ பங்கேற்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் குளிதிகை ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுமித்ராபாபு தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேன்மொழி ரமேஷ் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கிராம சபை கூட்டத்தில் ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது, தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் ஊராட்சி பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி மன்ற செயலாளர் சி.ரமேஷ் நன்றி கூறினார்.

    • பிணமாக மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சூராளூர் நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சபாபதி (வயது 46). கூலி தொழிலாளி நேற்று மாலையில் தனது கிராமத்து அருகே செல்லும் கொட்டாற்றில் தவறி விழுந்துள்ளார்.

    கொட்டாற்றில் சபாபதி தவறி விழுந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக அவரது உறவினர்களுக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உறவினர்கள் சபாபதி கொட்டாற்றில் இருந்து பிணமாக மீட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் சபாபதியின் மனைவி துளசி அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப் இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்கு பதிவு செய்து சபாபதியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • சிறுமி மருத்துவமனையில் அனுமதி
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 27). லாரி டிரைவர் திருமணம் ஆகி பிள்ளைகள் உள்ளனர்.

    மகேந்திரன் கிராமத்திற்கு அருகே உள்ள 17 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது அந்த பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி கடந்த வெள்ளிக்கிழமை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை பெற்றோர்கள் உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது பெற்றோர்கள் பரதராமி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் அருண் காந்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் மகேந்திரன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலூரில் தடையை மீறி திறக்கப்பட்டதால் நடவடிக்கை
    • காந்தி ஜெயந்தியையொட்டி இறைச்சி விற்பனை செய்ய தடை

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி இன்று அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

    ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை செய்வது கூடாது. கடைகளை திறந்து வைக்கவும் கூடாது. தடையை மீறிச் செயல்படுபவா்கள் கடைகளில் உள்ள இறைச்சி பறிமுதல் செய்வதுடன் சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை வேலூர் கோட்டை அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் தடையை மீறி சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இதில் பொதுமக்கள் சென்று மீன்கள் வாங்கிச் சென்றனர்.

    இதுகுறித்து வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் உதவி கலெக்டர் பூங்கொடி தாசில்தார் செந்தில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீன் மார்க்கெட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்த மீன் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டனர்.

    அப்போது வியாபாரிகள் சிலர் ஆடு கோழி இறைச்சி ஏதும் விற்பனை செய்யவில்லை. மீன்கள் மட்டுமே விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.

    மீன்களும் இறைச்சி வகை தான் அவற்றை விற்பனை செய்யக் கூடாது என அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கம் அளித்தனர். தொடர்ந்து மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகள் மூடப்பட்டன.

    அந்த நேரத்தில் மீன் வாங்க சென்ற பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் சிறிது நேரம் மீன் மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாக்கிங் சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள கீழ்மொணவூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 76). இவர் தினந்தோறும் காலையில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாக்கிங் செல்வது வழக்கம். இன்று காலையில் ஆறுமுகம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அந்த நேரத்தில் வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட ஆறுமுகத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    விரிஞ்சிபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் கடும் எச்சரிக்கை
    • ஆட்டோ டிரைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் 58-இடங்களில் ஆட்டோ ஸ்டேண்ட் உள்ளன. சுமார் 3000 ஆட்டோக்கள் ஓடுகின்றன. சில ஆட்டோக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக புகார் வந்தது.

    இதனைத் தொடர்ந்து ஆட்டோக்களை ஒழுங்கு படுத்துவதற்காக ஆட்டோ டிரைவர்கள் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் முத்து குமார் கலந்து கொண்டு பேசியதாவது:- வேலூர் மாநகரப் பகுதியில் போக்கு வரத்திற்கு இடையூறாக சில ஆட்டோ டிரைவர்கள் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி ஆட்களை ஏற்றி செல்வதாக தொடர்ந்து புகார் வருகிறது.

    இவ்வாறு நடந்து கொள்ளும் போது சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் வேலைக்கு செல்பவர்கள் நேர்முகத் தேர்வுக்கு செல்வர்கள் பாதிக்கப்படுவார்கள். ரெயில்களை பிடிக்க செல்பவர்கள் அதனை விடவும் வாய்ப்பு உள்ளது. இது போன்ற வற்றிற்கு நீங்கள் காரணமாக கூடாது.உங்களை ஏன் நீங்களே திருத்திக்கொள்ள கூடாது. மற்றவர்கள் சொல்லி தான் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    போலீசார் அபராதம் விதித்தால் உங்களுக்கு கஷ்டம் ஏற்படுவதாக கூறுகிறீர்கள். அதனால் உங்களை நீங்களே முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். சாலை விதிகளை முழுமையாக ஆட்டோ டிரைவர்கள் கடைபிடிக்க வேண்டும்.

    குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டும் டிரைவர்களை விடவே மாட்டோம். அதேபோல் வெளியூர் ஆட்டோக்களை கொண்டு வந்து வேலூரில் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடம் ஆட்டோ டிரைவர்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆட்டோ டிரைவரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க முன்னுதாரணமாக திகழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ×