என் மலர்
நீங்கள் தேடியது "The crowd was overflowing"
- மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
வேலூர்:
ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படுகிறது. இத்தினத்தன்று தொழிலாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு பொரி, பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள். ஆயுத பூஜையில் பொரி, பழங்கள், சர்க்கரை, இனிப்புகள் வைத்தும், வாழை மரக்கன்றுகள் கட்டியும் பூமாலை அணிவித்தும், பூசணிக்காய் உடைத்தும் வழிபடுவார்கள்.
இதற்காக பொதுமக்கள் ஆயுத பூஜைக்கு தேவையான பூ, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக இன்று பஜாருக்கு வந்திருந்தனர்.
வேலூர் மண்டித்தெருவில் ஆயுத பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஆயுத பூஜையையொட்டி வேலூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
இன்று வேலூர் மார்க்கெட்டில் மல்லிகை, முல்லைப் பூக்கள் கிலோ ரூ.600, காக்கடா ரூ.500, ஜாதி ரூ.300,சாமந்தி ரூ.400, ரோஜா ரூ.300,கேந்தி ரூ.100 க்கு விற்பனையானது. மழை காரணமாக ஆந்திரா கர்நாடக மாநிலங்களில் இருந்து வேலூர் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. அந்த மாநிலங்களிலும் பூக்கள் விலை அதிகரித்து உள்ளதால் வேலூரில் பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பூசணிக்காய் ஒரு கிலோ ரூ.20-க்கும் வாழை மரக்கன்றுகள் ஜோடி ரூ.50 முதல் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல பொரி விற்பனையும் களைகட்டியது. ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, கொய்யா போன்ற பழங்களின் விலையும் சற்று உயர்ந்து காணப்பட்டது.
ஆயுதபூஜையை முன்னிட்டு பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் ஊழியர்கள் இன்று பூஜை செய்தனர். மேலும் அரசு வாகனங்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களை நடக்காமல் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.






