search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்ணார்பேட்டை பைபாஸ் சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாறுகிறது-ரூ.50 கோடியில் பணிகள் மும்முரம்

    • தாழையூத்தில் இருந்து தச்சநல்லூர் வரையிலான சாலை இருபுறமும் அகலப்படுத்தப்பட்டுள்ளது.
    • வட மாவட்டங்களுக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் முக்கிய பஸ்கள் இந்த சாலைகளை கடந்துதான் செல்கின்றன.

    நெல்லை:

    நெல்லை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பல்வேறு புதிய சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அகலப்படுத்த கோரிக்கை

    மாநகர பகுதியில் தாழையூத்தில் இருந்து தச்சநல்லூர் வரையிலான சாலை இருபுறமும் அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் பாளை மத்திய சிறையில் இருந்து ரெட்டியார்பட்டி விலக்கு வரையிலும் சாலை அகலப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக 22 ஆண்டுகளுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட வண்ணார்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு பைபாஸ் சாலைகளை இருபுறமும் அகலப்படுத்த பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இந்த சாலையில் கடந்த சில ஆண்டுகளாகவே வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து உள்ளது.

    வட மாவட்டங்களுக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் முக்கிய பஸ்கள் இந்த சாலைகளை கடந்துதான் செல்கின்றன. இது தவிர தினமும் ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் கனரா வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் வண்ணார்பேட்டையில் இருந்து ரெயில்வே மேம்பாலத்தை கடந்து புதிய பஸ் நிலையம் செல்லும் வழியில் தெற்கு பைபாஸ் சாலையில் பாளையங்கால்வாய் கடக்கும் பகுதியில் குறுகிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. சாலைகள் அளவுக்கு ஏற்ப இந்த பாலம் இல்லாமல் ஒடுக்கமாக இருப்பதால் இருபுறத்தில் இருந்தும் பஸ்கள் வேகமாக வரும் போது எதிர்பாராத விதமாக விபத்துக்கள் நடந்து விடுகிறது. இதனால் இந்த பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக அகலமான பாலம் கட்ட வேண்டும் என்றும், வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலைகளை இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும், விபத்தை தடுக்க சாலையின் நடுவில் தடுப்புச் சுவர்கள் அமைக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ரூ.80 கோடியில் திட்ட மதிப்பீடு

    இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கணக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து பாளையங்கால்வாயை விரிவாக்கம் செய்வது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பாலத்தின் இருபுறமும் மண் பரிசோதனை செய்யப்பட்டது. சாலையை விரிவாக்கம் செய்வதற்கு ஆகும் செலவு குறித்து புதிய திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையின் படி வண்ணார்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலைகளை இருபுறமும் விரிவாக்கம் செய்து நான்கு வழி சாலையாக மாற்றி நடுவில் தடுப்புச் சுவர் அமைக்க ரூ.80 கோடி திட்ட மதிப்பீடாக வழங்கப்பட்டது.

    பணிகள் தொடக்கம்

    அதற்கு அனுமதி கிடைத்த நிலையில் தற்போது சாலைகள் அகலப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. தொடர்ந்து பாளையங்கல்வாயை இருபுறமும் அகலப்படுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இது தவிர ஏற்கனவே அமைக்கப்பட்ட சிறிய அளவிலான பாலங்களும் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

    பைபாஸ் சாலை சுமார் 20 மீட்டர் அகலத்திலும், நடுவில் சென்டர் மீடியன் அமைக்க கூடுதல் இடமும் ஒதுக்கீடு செய்து அமைக்கப்பட்டு வருகிறது.

    அதிகாரிகள் பேட்டி

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது :-

    வண்ணார்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலையில் விபத்தை குறைப்பதற்காக சாலையை விரிவாக்கம் செய்ய அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பி இருந்தோம். அதன்படி முதல் கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் தொடங்கியுள்ளன. இதில் சிறிய பாலங்கள் மற்றும் பாளையங்கால்வாயை அகலப்படுத்தும் பணிகளும் அடங்கும். முதல் கட்டமாக வடக்கு பைபாசில் ரெயில்வே மேம்பாலத்திற்கு அடுத்ததாக இந்த அகலமான நான்கு வழிச்சாலை ஆரம்பித்து புதிய பஸ் நிலையம் வரையிலும் நான்கு வழிச்சாலையாகவே அமைக்கப்படுகிறது.

    நடுவில் 1.2 மீட்டர் அகலத்தில் சென்டர் மீடியன் அமைக்கப்படுகிறது. இருபுறமும் தலா 9 மீட்டர் அகலத்தில் சாலைகள் இருக்கும். மேலப்பாளையம் ரிலையன்ஸ் சிக்னல் பகுதியில் ரவுண்டானா ஏதும் அமைக்கப்படவில்லை. அங்கும் நான்கு வழிச்சாலை தான் அமைக்கப்படுகிறது. அங்கு நவீன தொழில்நுட்பத்தில் சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளது.

    ரெயில்வே மேம்பாலம் அகலப்படுத்தும் பணி

    இந்த பணிகள் முடிந்த பின்னரே தச்சநல்லூர் ரெயில்வே மேம்பாலம் மற்றும் வண்ணார்பேட்டை பாளையங்கால்வாய் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலம் ஆகியவை அகலப்படுத்தும் பணி தொடங்கும். இந்த 2 பாலங்களையும் அகலப்படுத்துவதற்காக ரெயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே சார்பில் ஒப்புதல் கிடைத்ததும் அந்த 2 பாலங்களையும் அகலப்படுத்தும் பணி தொடங்கும். தற்போது கணக்கீட்டின்படி 5.8 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த சாலையானது நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. செல்லப் பாண்டியன் மேம்பாலம் அதே நிலையிலேயே நான்கு வழி சாலை மேம்பாலமாகவே இருக்கும். அதில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. இது தவிர சாலைகளின் நடுவில் அலங்கார விளக்குகளும் அமைக்கப்பட உள்ளது.

    அதேபோல் தச்சநல்லூர் ஆற்று பாலத்துக்கு அருகே வடபகுதியில் புதிதாக ஒரு ஆற்றுப் பாலம் கட்டப்பட உள்ளது. அவை இரண்டும் வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 மேம்பாலங்களை போலவே ஒரு வழிப்பாதைகளாக செயல்படும்.

    இதன் மூலம் போக்குவரத்து நெருக்கடி விபத்துகளும் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×