search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10-ம்வகுப்பு தேர்வில் திருப்பூர் மாவட்டம் பின்னடைவு - பள்ளிகள் வாரியாக ஆய்வு  நடத்த முடிவு
    X

    கோப்புபடம்

    10-ம்வகுப்பு தேர்வில் திருப்பூர் மாவட்டம் பின்னடைவு - பள்ளிகள் வாரியாக ஆய்வு நடத்த முடிவு

    • திருப்பூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 10 சதவீதம் குறைந்து 30வது இடத்தையே பெற முடிந்தது.
    • மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி 31.03 சதவீதத்துடன் கடைசி நிலையில் உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில், 29 இடங்கள் பின்னடைந்துள்ளது.10-ம் வகுப்பை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டத்தில் தேர்வெழுதிய 357 பள்ளிகளில் 150 பள்ளிகள் அரசு பள்ளிகள். அரசு பள்ளிகளில் தேர்வெழுதிய மாணவர்களில் 80.25 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த 2019ல் 98.53 சதவீதத்துடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 10 சதவீதம் குறைந்து 30வது இடத்தையே பெற முடிந்தது. பிற தனியார், மெட்ரிக் பள்ளிகள் தங்கள் தேர்ச்சி சதவீதத்தை ஓரளவு தக்க வைத்துள்ள போதும் அரசு பள்ளிகள் தக்க வைக்க தவறியதே இதற்கு முக்கிய காரணம்.அரசுப்பள்ளிகள் பல கடினமான சூழ்நிலையிலும் சாதித்துக்காட்டியுள்ளன. இருப்பினும், பல்வேறு பள்ளிகள் பின்தங்கியுள்ளன.

    மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி 31.03 சதவீதத்துடன் கடைசி நிலையில் உள்ளது. இங்கு 29 மாணவிகள் தேர்வெழுதியதில் 9 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அடுத்த இடத்தில் 42.25 சதவீதம் தேர்ச்சியுடன் ஊத்துக்குளி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. தேர்வெழுதிய, 70 பேரில் 30 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர்.கே.எஸ்.சி., பள்ளி 55.77 சதவீத தேர்ச்சியுடன் அடுத்த இடத்தில் உள்ளது. இங்கு 407 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 227 பேர் மட்டுமே தேர்ச்சியாகியுள்ளனர்.

    கே.வி.ஆர்., நகர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 35 ஆண்கள், 38 பெண்கள் தேர்வெழுதியதில் 13 மாணவர்கள், 29 மாணவிகள் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி விகிதம் 57.53 ஆக உள்ளது.அதேபோல் 59.34 சதவீதம் பெற்ற அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 156 மாணவர்களில் 90 பேர், 117 மாணவிகளில் 72 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஊரடங்கு என பொத்தாம்பொதுவான காரணத்தை கூறிவிடமுடியாது.திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகள் தங்கள் மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் பங்கெடுக்க வைக்கவும், மீண்டும் பள்ளிகளுக்கு வரவைக்கவும் பெரும் போராட்டத்தையே சந்தித்தன என்றுதான் சொல்ல வேண்டும்.

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி கூறுகையில், திருப்பூர் ஒரு தொழில் நகரம். மற்ற மாவட்டங்களுடன் ஒப்பீடு செய்யக்கூடாது. பெற்றோர் தொழில், வாழ்வாதார சூழல் பெரிதும் பாதிக்கப்பட, அது மாணவர்களின் மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. பள்ளி திறந்தபோதும், பெருவாரியான மாணவர்கள் வரவில்லை.பலர், நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல துவங்கிவிட்டனர். மீண்டும் பள்ளி சூழலுக்கு வரவைப்பது பெரும்பாடாக இருந்தது. பொதுத்தேர்வு இருக்காது என்ற மனநிலையில் வகுப்பிற்கு 10 பேர் வரவில்லை என்றார்.

    மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறுகையில், முடிவுகளை ஆய்வு செய்து பின்னடைவுக்கான காரணங்களை பகுத்தாய உள்ளோம். மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவழைத்து தேர்ச்சி விகித்தை அதிகரிக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாடவாரியாக, ஆசிரியர் வாரியாக ஆராய்ந்து உரிய யுத்திகளை தீட்டி செயல்முறைப்படுத்தப்படும். மீண்டும் பழைய இடத்திற்கு முன்னேற ஆவன செய்யப்படும் என்றார்.

    Next Story
    ×