search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகளை விரைந்து  முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் - பொதுமக்கள்  கோரிக்கை
    X

    கோப்புபடம்.

    அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

    • 2019ம் ஆண்டு இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது 97 சதவீத பணிகள் முடிந்தும் கடந்த சில மாதங்களாக பணி மந்தநிலையில் உள்ளது.
    • மழைநீர் வீணாகி கடலில் கலக்கிறது.

    அவினாசி :

    திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய 3 மாவட்டத்தில் உள்ள 50 லட்சம் மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடந்தது.இறுதியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் அவினாசி புதிய பஸ் நிலையில் அருகில் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டதன் பலனாக கடந்த 2019ம்ஆண்டு இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது 97 சதவீத பணிகள் முடிந்தும் கடந்த சில மாதங்களாக பணி மந்தநிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

    எம்.வேலுசாமி:

    கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு அவிநாசி திட்டம் என்றும் பின்னர் குந்தா கழிவுநீர் திட்டம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த அத்திக்கடவு அவினாசி திட்டம் 1963 ஆம் ஆண்டு காமராஜர் தமிழக முதல்வராக இருந்தபோது நிறைவேறும் என நம்பிக்கை இருந்தது. அதன்பிறகு பக்தவச்சலம் ஆட்சிக்கு வந்த போது திட்டம் நிறைவேறாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு வந்த ஆட்சியாளர்களும் இது பற்றி பெரிய அளவில் எந்த தீவிர முயற்சி எடுக்கவில்லை .கண்துடைப்பாகஇருந்து வந்தது.

    2000-மாவது ஆண்டில்ராஜ சேனாதிபதி இத்திட்டத்திற்காக பலமுறை உண்ணாவிரதம் இருந்தார்.மேலும் இத்திட்டத்தை முன்வைத்து 2001 ம் ஆண்டில் விவசாயிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். அப்போது வெறும் 19000 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அப்போதும் ஆட்சியாளர்கள் இதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை. அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததால் இத்திட்டம் நிறைவேற வேண்டிய விழிப்புணர்வு ஏற்பட்டது. இதனால் அப்போதைய அரசு ரூ.3.27 கோடி மதிப்பீட்டில் திட்டத்திற்கான அரசாணை வெளியிட்டது . அதன் பிறகு உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. 97 சதவீதம் முடிவடைந்த இத் திட்டம் ஏனோ காலதாமதமாகிறது .இதனால் மழைநீர் வீணாகி கடலில் கலக்கிறது. நீர் ஆதாரம் பெருகவும், நலிவடைந்துவரும் விவசாயம் மீண்டும் புத்துயிர்பெறவும் அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு 50 லட்சம் மக்களின் 50 ஆண்டுகனவை நனவாக்கும் என்று நம்பியுள்ளோம்.

    சுப்பிரமணியம்:

    கொங்கு மண்டல மக்களின் 60 ஆண்டு கால கனவு திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணியானது தற்பொழுது 96 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விரைவில் திட்டம் வரக்கூடிய நிலையில் உள்ளது. இதன் மூலம் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெருந்துறை முதல் காரமடை சர்க்கார் சாமக்குளம் வரை உள்ள குளம் குட்டைகள் எல்லாம் இத்திட்டத்தின் மூலம் இணைக்கப்படுகிறது . அடிப்படையில் இது ஒரு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமாகும்.திட்டத்தால் பயன்படக்கூடிய நீர் நிலைகள் எல்லாம் தூர்வாரி தேக்குவதற்கு தயாராக உள்ளதா என்று கேட்டால் கேள்விக்குறியே.

    இந்த திட்டமானது 1.5 டிஎம்.சி. பவானி ஆற்று நீரை கொண்டு 32 பொதுப்பணித்துறை ஏரிகளும் 42 ஊராட்சி ஒன்றிய குளங்களும் 971 தடுப்பணை மற்றும் குட்டைகளும் செறிவூட்டப்பட உள்ளது.

    எனவே திட்டப் பணிகள் முடிப்பதற்கு முன்பு பொதுப்பணித்துறை ஏரிகளையும் ஊராட்சி ஒன்றிய குளங்களையும் நீர்வளத்துறை மூலம் தூர்வாரி ஆழப்படுத்தி அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை எல்லாம் வருவாய்த்துறை மூலம் கணக்கீடு செய்து அகற்றி தயார்படுத்தி வைக்க வேண்டும்.

    அவ்வாறு செய்தால் மட்டுமே மழைக்காலங்களில் கிடைக்கக்கூடிய நீரை முழுமையாக நமது குளம் குட்டைகளில் சேமித்து நிலத்தடி நீர் செறிவூட்டம் பெற செய்ய முடியும்.

    எனவே நீர்வளத்துறையானதுபோர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமாறு அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்ட குழு சார்பில் கோரிக்கை வைக்கிறோம். மேலும் மீதமுள்ள நான்கு சதவீதம் திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்தால்தான் இந்தப் பருவமழை காலத்தில் கிடைக்கக்கூடிய வெள்ள உபரி நீரைக்கொண்டு குளம் குட்டைகளை நிரப்ப முடியும்.மேலும் இத்திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளுக்கான ஆய்வுப்பணிகளுக்காக நிதி ஒதுக்கி விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும்.

    சதீஸ்:

    அவினாசி அத்திக்கடவு திட்டம் எங்கெல்லாம் செயல்பாட்டுக்கு வருகின்றதோ அங்கெல்லாம் உயிர் சூழல் உருவாகும். நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. குளம் குட்டைகளில் நீர் நிரம்பும் போது 3மாவட்டங்களிலும் பசுமை போர்த்தி சீதோஷ்ண நிலை மாறுதல் ஏற்படும். எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைவில் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    சம்பத்:

    அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட 1000 குளம் குட்டைகளுக்கு ஒரு திட்டம் தயாரித்து நிதி ஒதுக்கி விரைவில் பணிகளை தொடங்க வேண்டும். அனைத்து கிராமங்களில் உள்ள குளம் குட்டைகளின் கரைகளில் அதிகப்படியான பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் .ஊராட்சி நகராட்சி நிர்வாகம் வீடு தோறும் நெகிழி கழிவுகளை பிரித்து வாங்க வேண்டும் .இதனால் மண்ணை நாம் காக்க முடியும் என்றார்.

    Next Story
    ×