என் மலர்
திருப்பத்தூர்
- ஏலகிரி மலைக்கு அழைத்துச் செல்ல பள்ளி கல்வி துறை நடவடிக்கை
- வாகனங்களை கலெக்டர் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி உள்ள மாணவர்களை 1 நாள் சுற்றுலாவாக ஏலகிரி மலைக்கு அழைத்துச் செல்ல பள்ளி கல்வி துறை நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி இன்று காலை சுற்றுலா சென்ற வாகனங்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- போலீசார் ரோந்து
- மது பாக்கெட்கள் பறிமுதல்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் போலீசார் முருகன் சினிமா தியேட்டர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு அனுமதியின்றி கள்ளத்தனமாக கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்த கிருஷ்ணாபுரம் பாவடை தோப்பு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து மது பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள வக்கணம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தி.மு.க. நகர செயலாளர் ம. அன்பழகன் தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் எம். காவியா விக்டர், நகர மன்ற துணைத் தலைவர் பெ. இந்திரா பெரியார்தாசன், நகர அவைத் தலைவர் இரா. மகேந்திரன், நகரத் துணைச் செயலாளர் ஆ. சுரேஷ், மாவட்ட பிரதிநிதி பு. பாஸ்கர் நகர பொருளாளர் த. இனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் ஜோலார்பேட்டை சுற்று பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதன செய்து கொண்டனர்.
இதில் நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் துரைமுருகன் முகாமை தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் தி.மு.க. மாணவரணி சார்பில் 3 நாள் கருத்தியல் பயிலரங்க கூட்டம் கடந்த 27-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.
இந்த பயிலரங்க கூட்டத்திற்கு மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.வுமான எழிலரசன் தலைமை தாங்கினார். மாணவரணி மாநில நிர்வாகிகள் இரா. ராஜீவ் காந்தி, சி. ஜெரால்டு, எஸ். மோகன், த. சோழராஜன், ரா. தமிழரசன், பி.செந்தில்குமார், கா. அமுதரசன், பி. எம். ஆனந்த், கா. பொன்ராஜ், வி.ஜி. கோகுல், பூர்ண சங்கீதா, ஜெ. வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே. பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார்.
இதில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டி கலந்துக்கொண்டு, அவரது வழிகாட்டுதலோடு, வாலாசா வல்லவன், பொள்ளாச்சி மா. உமாபதி, மதிவதனி, பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
நிறைவு நாளான நேற்று நடந்த கூட்டத்தில் மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே. கம்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், திருவண்ணாமலை சி. என்.அண்ணாதுரை எம்.பி., திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ., வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., திருப்பத்தூர் எம்.எல்.ஏ. நல்லதம்பி, ஒன்றிய செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 2 பேரையும் பொதுமக்கள் சடலமாக மீட்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 35), தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி அனிதா(32) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இவர் கூலி வேலை செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருக்கு சென்றார். அங்கு சந்திரசேகருக்கு ஆந்திர மாநிலம், ஆவலங்குப்பம் பகுதியை சேர்ந்த தேவராஜ் மனைவி பூஜா (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், கள்ளத்தொடர்பாக மாறி தனிமையில் சந்தித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சந்திரசேகர், பூஜாவை தனியாக வாணியம்பாடிக்கு அழைத்து வந்தார். வாடகை வீட்டில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இதனை அறிந்த பூஜாவின் உறவினர்கள் இன்று காலை வாணியம்பாடி வந்தனர். வாணியம்பாடி தேங்காய்பட்டரை பகுதியில் சந்திரசேகருடன் தங்கியிருந்த பூஜாவை காரில் அவரது உறவினர்கள் அழைத்து செல்ல முயன்றனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது காரின் கண்ணாடி உடைத்து, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அந்த பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.
அப்போது ஆத்திரமடைந்த சந்திரசேகர் ஓடிச் சென்று அருகில் இருந்த விவசாய கிணற்றில் குதித்தார். இதனைப் பார்த்த பூஜாவும் மற்றொரு விவசாய கிணற்றில் ஓடிப்போய் குதித்தார். இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 2 பேரையும் பொதுமக்கள் பிணமாக மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கர்நாடக அரசு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்தது
- காசோலையை கர்நாடக அரசு வருவாய் துறை அலுவலர்கள் வழங்கினர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்(23)நித்திஷ்( 22), ராஜேஷ்(19), தினேஷ்(18) ஆகிய 4 பேர் தமிழக கர்நாடகா எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் கூலி வேலைக்கு சென்றனர்.
கடந்த 7-ந் தேதி பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 4 பேரும் பரிதாபமாக இறந்தனர். இந்த நிலையில் பலியான 4 பேரின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்குவதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் கர்நாடக அரசு இவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக ஒதுக்கியது. இதனை அடுத்து கர்நாடக அரசு வழங்கிய இந்த நிவாரண நிதிக்கான காசோலையை கர்நாடக அரசு வருவாய் துறை அலுவலர்கள் நேற்று வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை கிராமத்துக்கு நேரில் வந்து வாணியம்பாடி தாசில்தார் மோகன் முன்னிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் பெற்றோர்களிடம் தலா ரூ.5 லட்சம் காசோலைகளை வழங்கினர்.
- அனைவரும் பணியில் சரியாக பணியாற்றி வருகின்றனரா என சோதனை
- அளிக்கும் சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள கலைஞர் தெருவில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனையில் தினம்தோறும் 300 -க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலை யில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென்று அரசு மருத்து வமனைக்கு சென்றார். அப்போது டாக்டர்கள் செவிலி யர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் பணியில் சரியாக பணியாற்றி வருகின்றனரா என ஆய்வு செய்தார்.
அதன் பிறகு நோயாளிகளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் அனைத்தும் போதுமானதாக இருப்பு உள்ளதா எனவும் தமிழக அரசு வழங்கும் நிதி அரசு மருத்துவமனையில் சரியாக பயன்படுத்தி வருகின்றனரா எனவும் ஸ்கேன் மையத்தையும் நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவ மனை மற்றும் நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகள் மட்டுமின்றி மருத்துவமனை முழுவதும் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என இணை இயக்குநர் மாரிமுத்து கூறினார்.
ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு டாக்டர்கள், சுகாதார செவிலியர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- சாலையை கடக்க முயன்றபோது பிடிபட்டது
- ஏலகிரி மலை காட்டில் விட்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி பகுதியில் உள்ள இந்தியன் வங்கி அருகில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை இருப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்த ராஜிவ் என்பவர் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு சென்று 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர்.
அதேபோல் பொன்னேரியிலிருந்து ஏலகிரி மலை நோக்கி செல்லும் சாலையில் சின்ன பொன்னேரி பகுதியில் 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாலையை கடக்க முயன்றது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் 14 அடி நீளமுள்ள பிடித்து ஏலகிரி மலை காட்டில் விட்டனர்.
- சமூக வலைதளத்தில் பழகி துணிகரம்
- இ-மெயில் முகவரி மற்றும் போன் எண்ணை வைத்து விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்த திருமணமான 36 வயது பெண்ணுக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
அந்த நபர் தனது பெயரை பிரகதீஷ் என பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து பிரகதீஷை அந்த பெண் தனது வீட்டிற்கு அழைத்து உள்ளார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் பெண்ணின் வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது பிரகதீசை அந்த பெண் அணிந்து இருந்த நகைகள் தங்கமா என விசாரித்து உள்ளார். அந்த பெண் தனது தாலி மட்டும் தங்கம் என கூறியுள்ளார்.
இதையடுத்து திடீரென பிரகதீஷ், பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து பெண் அளித்த புகாரின்பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற வாலிபர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த இ-மெயில் முகவரி மற்றும் போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து திண்டுகல் மாவட்டத்தை சேர்ந்த பிரகதீஷ்வரனை போலீசார் ைகது செய்தனர்.
- 16-ம் நூற்றாண்டை சேர்ந்தது
- சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே பொம்மிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வேடி வட்டம் பகுதியில் திருப்பத்தூர் தனியார் கல்லூரி பேராசிரியர் பிரபு மற்றும் சமூக ஆர்வலர்கள் ராதாகிருஷ்ணன், நாராயணன், அன்புசெல்வம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய வில்வீரனின் நடுகல் உள் ளதைக் கண்டறிந்தனர். இதுகுறித்து பேராசிரியர் பிரபு கூறியதாவது:-
திருப்பத்தூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள பொம்மிக்குப்பம் ஊராட்சியில் ஜவ்வாது மலையில் இருந்து வரும் பாம்பாற்றின் கரையில் அமைந்துள்ள பகுதி வேடி வட்டமாகும். அப்பகுதியில் பழமையான மரங்கள் அடர்ந்த பகுதியில் வில் வீரனின் உருவம் உள்ள நடுகல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
வீரனின் வலது கரத்தில் அம்பும், இடதுகரத்தில் வில்லினையும் ஏந்திய நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. வீரன் அலங்கரிக்கப்பட்ட நேரான கொண்டையினை முடிந்துள்ளார்.
கழுத்தில் 3 அடுக்குகளைக் கொண்ட கழுத்தணியினை அணிந்துள்ளனர். முதுகில் அம்புகள் தாங்கிய கூட்டினையும், இடைக்கச்சையுடன் நீண்ட குறுவாளும், காதுகளில் குண்டலமும், புயங்களில் பூண்களும், கால்களில் வீரக்கழலும் அணிந்துள்ளார்.
இந்த நடுகல்லானது உறுதியான கரும்பாறை கல்லால் செதுக்கப்பட் டுள்ளது. நான்கரை அடி உயரமும் மூன்றரை அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதி மக்கள் இவ்வில் வீரனை 'வேடியப்பன்' என்று அழைத்து வழிபட்டு வருகின்றனர். வரலாற்றின் சாட்சிகளாக நிற்கும் இந்த நடுகல் ஒருகாலத்தில் தான் சார்ந்துள்ள மக்கள் கூட்டத்தின் பிரதிநிதியாகப் போர்க்களத்தில் பங்கேற்று உயிர்துறந்த ஒப்பற்ற வீரனின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டதாகும்.
இந்த நடுகல் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவையாக ருக்கக்கூடும். அதாவது கி.பி. 16-ம் நூற்றாண்டு கலைப்பாணியைக் கொண்டதாக இருக்கக் கூடும்.
பொதுவாக, நடுகற்களை வேடியப்பன் என்று அழைக்கும் வழக்கம் வட தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகின்றது.
அவ்வகையில் இந்த நடுகல் அமைந்துள்ள பகுதி 'வேடி வட்டம்' என்றும் நடுகல் 'வேடியப்பன்' என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- தூக்கி வீசப்பட்ட சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
- அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் சான்றோர் குப்பத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30) பெயிண்டர்.
இவர் நேற்று இரவு சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வினோத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து பெங்களூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
- காதல் தகராறில் விபரீதம்
- போலீசார் தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த போஸ்ட்மேன் வட்டம், பார்ச்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் விஜய் (வயது 25).
இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், காதலர்கள் ரகசியமான இடத்தில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இதனை அறிந்த பெற்றோர் 2 பேரையும் கண்டித்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் விஜய்யின் வீட்டுக்குச் சென்று கடபாரையால் கதவுகளை உடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வீட்டை தீ வைத்து எரித்த பெண்ணின் தந்தை சிவா மற்றும் தாயார் பாரதியை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.






