search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரபல ரவுடி கொலை: கள்ளத்தொடர்பை கைவிடாததால் தீர்த்துகட்டினோம்- கைதான வாலிபர் வாக்குமூலம்
    X

    சுதாகர்

    பிரபல ரவுடி கொலை: கள்ளத்தொடர்பை கைவிடாததால் தீர்த்துகட்டினோம்- கைதான வாலிபர் வாக்குமூலம்

    • கொலை செய்யப்பட்ட ரவுடி சுதாகருக்கு திருமணம் ஆகவில்லை.
    • தலைமுறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான பாஸ்கரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள திருமழப்பாடி புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 42).

    பிரபல ரவுடி. இவர் மீது அரியலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இவருக்கும் குல மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் பாஸ்கர் ரவுடி சுதாகரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி அவர் கண்டிரா தீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்த தனது கூட்டாளி அர்ஜு ன்ராஜ் என்பவருடன் அரிவாள், மிளகாய் பொடி ஆகியவற்றை எடுத்து மறைத்து வைத்து கொண்டு சுதாகர் வீட்டுக்கு சென்றனர்.

    பின்னர் வீட்டு முன்பு நின்று கொண்டு அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டினர். ஆனால் இதை சுதாகர் கண்டுகொள்ளாமல் வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தார்.

    பின்னர் அவரை வெளியில் வர வைப்பதற்காக பாஸ்கர், அர்ஜுன் ராஜ் ஆகிய இருவரும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுதாகரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தனர்.

    அப்போதும் சுதாகர் வெளியே வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கொலையாளிகள் வீட்டின் மேற்கூறையில் கற்களை வீசி தாக்கினர். இதில் ஓடுகள் உடைந்து விழுந்தது.

    அதைத்தொடர்ந்து சுதாகர் தனது குடும்பத்தினரை பாதுகாப்பாக வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே வந்தார்.

    அடுத்த நொடி தயாராக நின்ற பாஸ்கரும், அர்ஜுனும் அவரது முகத்தில் மிளகாய் பொடி தூவி கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சுதாகர் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து திருமானூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் விசாரணை நடத்தினர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடினர்.

    பின்னர் தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு அர்ஜுன்ராஜை அதிரடியாக கைது செய்தனர்.

    அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அதில், கொலை செய்யப்பட்ட ரவுடி சுதாகருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் பாஸ்கரின் அண்ணன் ஜெகதீசனின் மனைவியுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதை அறிந்த ஜெகதீசனின் சகோதரர் பாஸ்கர் அதிர்ச்சி அடைந்து ரவுடியை கண்டித்தார். அவர்களுக்குள் பல முறை சண்டையும் நடந்தது. இருந்தபோதிலும் சுதாகர் கள்ளத்தொடர்பை துண்டிக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். பின்னர் நானும் அவரும் சென்று வீட்டுக்குள் இருந்த ரவுடியை வெளியே வர வைத்து வெட்டிக்கொலை செய்தோம் எனக் கூறியுள்ளார்.

    தலைமுறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான பாஸ்கரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×