என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகன், மருமகளை சேர்த்து வைக்க முயன்றதால் கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி
    X

    மகன், மருமகளை சேர்த்து வைக்க முயன்றதால் கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி

    • காக்காபாளையத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்த சக்திவேல், அதில் கிடைத்த பணத்தை வைத்து அவிநாசிபட்டியில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்தார்.
    • அங்கே வீடு கட்டி சக்திவேல், கலைச்செல்வி தம்பதியினர் தங்கி இருந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள கருமனூர் கூத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 60), விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி (55). இவர்களது மகன் விஜய கிருஷ்ணராஜ் (32). இவர் ராசிபுரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் திட்ட அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த நந்தினி என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

    இதை அடுத்து பள்ளிப்பாளையம் அருகே வெப்படை பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான வினிதா (27) என்பவரை விஜய் கிருஷ்ணராஜ் 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் காக்காபாளையத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்த சக்திவேல், அதில் கிடைத்த பணத்தை வைத்து அவிநாசிபட்டியில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்தார். அங்கே வீடு கட்டி சக்திவேல், கலைச்செல்வி தம்பதியினர் தங்கி இருந்தனர்.

    இதற்கிடையே 2-வது மனைவி வினிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்த விஜய கிருஷ்ணராஜ், கல்லூரிக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். வினிதா தனது குழந்தைகளுடன் கருமனூரிலுள்ள வீட்டில் தங்கி இருந்தார். குடும்ப சண்டை குறித்து ஏற்கனவே திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வினிதா புகார் கொடுத்துள்ளார்.

    இதையடுத்து மகன், மருமகளை சமரசப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கிய சக்திவேல், கலைச்செல்வி தம்பதியினர் தீபாவளி பண்டிகையின்போது கருமானூர் சென்று வினிதாவிடம் பேசியுள்ளனர்.

    இருவரையும் சேர்த்து வைக்க முயன்றும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் சக்திவேல் கவலை அடைந்தார். மேலும் இருவரையும் அழைத்து பேசி மீண்டும் சேர்த்து வைக்கலாம் என மனைவி கலைச்செல்வியிடம் கூறினார். ஆனால் கலைச்செல்வி மறுத்ததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஏற்பட்ட மோதலில் கலைச்செல்வி விசைத்தறிக்கு பயன்படுத்தும் இரும்பு ராடால் கணவரை சராமாரியாக தாக்கினார். அதில் தலையின் பின்பகுதியில் படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த எலச்சிப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கலைச்செல்வியை கைது செய்தனர். தொடர்ந்து சக்திவேலின் சடலத்தை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது கலைச்செல்வி போலீசாரிடம் கூறியதாவது, எனது மகனும் மருமகளும் பிரிந்து சென்ற நிலையில் எனது கணவர் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்தார். இதில் எனக்கு விருப்பமில்லாததால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நான் இரும்பு ராடால் அவரை தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பின்னர் கலைச்செல்வியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×